tamilnadu

img

பாஜக ஆட்சியில் தொழில்துறை உற்பத்தி கடும் சரிவு

புதுதில்லி:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றான தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்திந்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.


அதாவது, மார்ச் மாதத்தின், தொழில்துறை உற்பத்தி விகிதம் 0.1 சதவிகிதம் சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கக்கூடும் என்று, ஏற்கெனவே ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் மாதத்தின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதமும் சரிவைச் சந்தித்திருப்பதை மத்திய அரசின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


கோடை மழை பொய்த்துப் போன காரணத்தால் விவசாய விளைச்சல் குறைந்து, உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மொத்தப் பணவீக்க விகிதமானது, ஏப்ரல் மாதத்தில், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் உயரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டிருந்தது. இதே காலத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்து விட்டதாகவும், வேலையின்மையானது, ஏப்ரல் மாதத்தில் 7.6 சதவிகிதமாக அதிகரித்து விட்டது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையமும் தரவுகளை வெளியிட்டிருந்தது. 


இந்நிலையில்தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணியான தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் 0.10 சதவிகிதம் சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை (Central Statistical Office) தரவுகளை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளக்கும் அளவுகோலாக தொழில்துறை இருந்து வருகிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைப் பொறுத்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஏற்ற இறக்கத்தை கணிக்க முடியும். 


தொழில்துறை என்பது சுரங்கத் துறை, உற்பத்தித்துறை, மின் உற்பத்தி என மூன்று துறைகளை உள்ளடக்கியதாகும். அந்த வகையில், மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 0.10 சதவிகிதம் சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை (CSO) கூறியுள்ளது.இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழில் துறையின் உற்பத்தி அதிகரித்து

காணப்பட்டதால், 1.20 சதவிகிதம் கூடியது. தொழில் துறையின் அங்கமான சுரங்கத் துறையின் உற்பத்தியானது கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 0.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 2 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தது. மின்சாரத்துறையானது கடந்த மார்ச் மாதத்தில் 2.2 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 5.9 சதவிகிதமாக இருந்தது. 


மூலதனப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியானது 8.7 சதவிகிதம் சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. தொழில்துறையின் மற்றொரு முக்கிய அங்கமான தயாரிப்புத் துறையின் வளர்ச்சியானது 0.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. மார்ச் மாதத்தின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி விகிதம் மூன்று வருட குறைந்த அளவான 3.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தயாரிப்புத்துறையின் வளர்ச்சி விகிதம் 4.4 சவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

;