tamilnadu

img

சவுகிதாரின் ட்வீட்டுகளை அதிகளவில் பகிர்ந்தவர்களுக்கே எம்.பி. சீட்!

புதுதில்லி:

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவுகளை யாரெல்லாம் அதிகமான முறை பகிர்ந்தார்களோ, அவர்களுக்கே பாஜக சார்பில் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி பிரிண்ட் ’ என்ற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை, பாஜக எவ்வாறு தேர்வு செய்தது? என்பதை ஆய்வு செய்தாகவும், இதில், சமூகவலைத்தள பிரபலங்கள் என்ற அம்சத்தை, ஒரு முக்கியமாக அளவுகோலாக பாஜக கவனத்தில் எடுத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் ‘தி பிரிண்ட்’ ஏடு கூறியுள்ளது.இன்னும் குறிப்பாகச் சொன்னால், பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தைத் தினமும் பின்தொடர்ந்து, மோடியின் அன்றாட பதிவுகளை, தத்தமது பக்கங்களில் யாரெல்லாம் அதிகமான முறை பகிர்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக ‘தி பிரிண்ட்’ இதழில் கூறப்பட்டிருப்பதாவது:பாஜக கட்சியைப் பொறுத்தவரை, சமூகவலைத்தளங்களில் புகழ்பெற்றவர்களுக்கே, தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கியிருப்பது உறுதியாகி இருக்கிறது. பாஜகவின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் குறைந்தபட்சம் 3 லட்சம் பாலோயர்களை (பின்தொடர்வோர்) பெற முயற்சிக்க வேண்டும் என்று முன்பொரு முறை மோடி கூறியிருந்தார். அதையே தற்போதைய வேட்பாளர் தேர்வுக்கான அளவுகோலாகவும் பாஜக பயன்படுத்தியிருக்கிறது.இதுதொடர்பாக தற்போதைய பாஜக எம்.பி.க்களின் டவிட்டர் கணக்குகளை பார்வையிட்டபோது, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் ட்விட்டர் பதிவுகளை பகிர்வோர் பெருமளவில் இருந்தனர். இவர்களில் மோடியின் பதிவுகளை யாரெல்லாம் அதிகம் பகிர்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கே தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.மோடி கூறியபடி, சிலர் 3 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்வோரை பெற்றிருந்தும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததும் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால், 3 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தாலும், அவர்கள் மோடியின் ட்விட்டர் பதிவுகளை அதிக அளவில் பகிராதததால், வாய்ப்பை இழந்துள்ளனர். இதன்மூலம் நடப்பு மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடியின் விசுவாசிகளுக்கும், அவரது ட்விட்டர் பதிவுகளை அதிகம் பகிர்ந்தவர்களுக்கும் மட்டுமே வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு ‘தி பிரிண்ட்’ கூறியுள்ளது.

;