tamilnadu

img

‘பானி’ புயல்: பணிக்கு திரும்ப அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

புதுச்சேரி, ஏப். 26- பானி புயலை எதிர்கொள்ள விடுப்பில் சென்ற அதிகாரிகள் பணிக்கு திரும்ப முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருக்கிறது. இது புயலாக மாறி வரும் 30 ஆம் தேதி புதுவை, தமிழக கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை(ஏப்.26) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அரசு செயலர்கள், துறை இயக்குநர்கள், உயர்க் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்திற்குப் பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வடகிழக்கு பகுதியில் உருவாகியிருக்கும் புயல் இம் மாதம் ஏப்.29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் தமிழக வடக்கு எல்லையில் பலத்தகாற்று 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.இந்த புயலால் புதுச்சேரியில் 20 செ.மீ. மழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, அமைச்சர் கமலக்கண்ணனும், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

எனது தலைமையில் நடந்த கூட்டத்தில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க இடம், உணவு உள் ளிட்டவைகளை ஏற்பாடு செய்வது, குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது, மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்படும்.புயலின்போது மின்சாரம் தடைசெய்யப்படும், ஒயர்கள் அறுந்து விழுந்தால் மின்சாரத்தை நிறுத்தி சரி செய்வது, தாழ்வானப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய்த்துறை ஆகிய துறைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நிவாரணத்திற்கு தேவைப்படும் பொருட்கள் தயாராக வைத்திருப் பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உயிர்ச்சேதமில்லாமல் பார்த்துக் கொள்வது, விவசாயம் பாதிக்கப் பட்டால் இன்சூரன்ஸ் மற்றும் அரசு மூலம் நிதியுதவி வழங்குவது பற்றியும் பேசப்பட்டது.வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை, விவசாயத்துறை அனைத்து துறையிலும் கட்டுப் பாட்டு அறைகளில் அதிகாரிகள் இருக்க வேண்டும். விடுப்பு எடுத்துச் சென்றுள்ள அதிகாரிகள் உடனடியாக பணிக்கு வரவேண்டும்.கஜா புயலின்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரும் சிறப்பாக செயல்பட்டு சேதத்தை தடுத்தார்கள். அதுபோல் தலைமை செயலர், செயலர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் சேதத்தை தடுப்பதில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள். அதனால் பானி புயலை எதிர்கொள்ள அனைத்து ஆயத்தங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

;