கீரமங்கலம்
கடந்தாண்டு நவ.16-ந் தேதி வீசிய கஜா புயலின் தாக்கத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மரங்கள், வீடுகள், படகுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. பழமையான ஆல மரம், அரச மரம், புளியமரம் போன்ற மரங்களும் சாய்ந்தன.
தற்போது மரங்கள் இல்லாத தால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் அவதி ப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடகாடு, மாங்காடு, அணவயல், புளிச்சங்காடு, கைகாட்டி வரை சாலை ஓரங்களில் அழிந்த மரங்களுக்கு பதிலாக மாற்று மரக்கன்றுகளை நடும் பணியில் சாலைப் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கீழாத்தூர் முதல் சாலை ஓரங்களில் மரங்கள் அடர்த்தியாக நின்றதால் வெயில் இல்லாமல் நிழலில் பயணித்தார்கள் மக்கள். ஆனால் புயலில் அந்த மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் மீண்டும் சாலை ஓரங்களில் நிழல் கொடுக்க வசதியாக விரைந்து வளரும் மரக்கன்றுகளை நடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளோம். சில ஆண்டுக்குள் மீண்டும் சாலை ஓரங்களில் நிழல் கொடுக்கும் மரங்களை வளர்த்து விடுவோம் என சாலைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.