tamilnadu

பொன்னமராவதியில் இயல்பு நிலை திரும்புகிறது

பொன்னமராவதி, ஏப்.21- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு தரப்பு பெண்களை இழிவாகப் பேசி வெளியான வாட்ஸ்அப்ஆடியோவால் கடந்த வெள்ளிக்கிழமையன்று மிகப்பெரிய அளவிலான போராட்டம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த போராட்டம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் பரவியது. இந்நிலையில் ஞாயிறன்று பொன்னமராவதியில் பதற்ற நிலை தணிந்து அமைதி நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கின. பொதுமக்களும் வழக்கம் போல நகர் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கினர். எனினும் வன்முறையில் ஈடுபட்டார்கள் என ஆயிரம் பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாலும், 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் தாலுகா முழுவதும் கிராமங்கள் தோறும் ரோந்து சுற்றி வருவதாலும் ஒரு தரப்பு மக்கள் மத்தியில் தாங்கள் கைது செய்யப்படுவோம் என அச்சம் நிலவுகிறது. இதுபற்றி பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டார்கள் என ஆயிரம் பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது மக்களின் இயல்புவாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது. வன்முறைகள் ஏதும்தற்போது நடக்கவில்லை என்ற காரணத்தினால் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றார்.

;