tamilnadu

இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக வழங்க சிபிஎம் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 16- கடந்த நவம்பர் மாதம் வீசியகஜா புயலின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவருக்கு அரசுஅறிவித்த நிவாரணத்தொகை இதுநாள் வரை கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழுஉறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வியாழக்கிழமையன்று புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ள விபரம்:கடந்த நவம்பர் மாதம் வீசியகஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டம் மிகக்கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. ஏராளான மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால், கிராமப்பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.மின்சாரம் தாக்கி 2 பேர் பலி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடி ஊராட்சியைச் சேர்ந்த கருவன்குடியிருப்பு கிராமத்திலும் இதுபோல மின்கம்பங்கள் முற்றிலுமாக சாய்ந்துவிட்டது. இந்த கிராமத்திற்கு மின் இணைப்பு கிடைப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. அப்படி மின் இணைப்பு வழங்கும்போது மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் அரையப்பட்டியில் புயலில் சாய்ந்து கிடந்த மின் கம்பிகளிலும் மின் சாரம் வந்துகொண்டிருந்தது. இந்த மின் கம்பிகளைத் தாண்டித்தான் அந்தக் கிராமத்தில் உள்ள சிலர் வீடுகளுக்கு தண்ணீர் எடுக்கக் செல்ல வேண்டும். கடந்தஒரு மாதமாக மின்சாரம் இல்லாததால் அந்தக் கம்பிகளை தூக்கி ஒதுக்கிக்கொண்டுதான் அந்தக் கிராமத்தினர் தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருந்தனர். அதேபோலத்தான் கடந்த 10.12.2018 அன்றும் அரையப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த சுசீலா (48) க/பெ முத்துச்சாமி, கருவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(24) த/பெ கருப்பையா ஆகிய இருவரும் அவ்வழியாக தண்ணீர் எடுக்கச் சென்றனர்.

அப்போது புயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பிகளை ஒதுக்கிக்கொண்டு தண்ணீர் எடுப்பதற்காக மின்கம்பிகளை பிடித்துள் ளனர். அப்பொழுது அதில் வந்துகொண்டிருந்த மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அமைச்சர், ஆட்சியர் உறுதியளிப்புமின்சார வாரியத்தின் கவனக் குறைவால் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பொழுது தமிழக அரசு அறிவித்திருந்த கஜா புயலில் இறந்தவர்களுக்கான ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத் தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் “மின்சாரம் தாக்கி இறந்தநபர்களுக்கு நிவாரணம் தலா ரூ.10லட்சம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணம் பெற்று வழங்கப்படும் எனவும்,காலம்சென்ற நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு விதிகளின்படி கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற அரசு பரிந்துரைசெய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்” என எழுத்துப்பூர்வமாக கோட்டாட்டசியர் உறுதியளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்தே சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுதித்தனர். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் மேற்படி இருவருக்கும் அஞ்சலி செலுத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மேற்படி இருவருக்கும் கஜா புயல் நிவாரணமான ரூ.10 லட்சம் கிடைப்பதற்கு முதலமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்துள் ளதாகவும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அங்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டஅதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், மேற்படி இருவருக்கும் இதுநாள் வரை எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை என சம்பந்தப் பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தாங்கள் தலையிட்டு மேற்படி இருவருக்கும் கஜா புயல்நிவாரணத் தொகை கிடைப்பதற்கும், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைகிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுகிறோம் என அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.

;