tamilnadu

img

சிபிஎம் முதுபெரும் தோழர் எம்.முத்துராமலிங்கம் மறைவு... அனைத்துக் கட்சியினர் அஞ்சலி...

அறந்தாங்கி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்முதுபெரும் தோழர் எம்.முத்துராம லிங்கம் (72) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிநிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டக்குழு உதயமானபோது முதல் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் மாவட்டத் தலைவர், செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எனபல்வேறு பொறுப்புகளில் பல ஆண்டுகள் மக்கள் பணியாற்றியவர். ஒன்றுட்ட அறந்தாங்கி தாலுகாவில் தனது சொந்த ஊரான காரக்கோட்டையில் கட்சியின் முதல் கிளையையும், விவசாயிகள் சங்கக் கிளையையும் தொடங்கியவர். இளைஞர்களை கட்சிக்குள்கொண்டுவந்து வளர்த்தெடுத்தெடுப்ப தில் முக்கியப் பங்காற்றியவர்.

விவசாயிகளுக்காக, விவசாயத் தொழிலாளர்களுக்காக, தொழிலாளர் களுக்காக, மீனவர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். ஒரு குட்டி முதலாளித்துவ குடும்பத்தில் பிறந்தாலும்குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறிஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக சமரசமற்ற போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டவர்.தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்துவந்த காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகளையும், ஏரிப்பாசன விவசாயிகளையும் அமைப்பாகத் திரட்டி அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுத்தவர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் கட்சி அமைப்புகளையும் தாண்டி வெகுமக்களின் தலைவராக உயர்ந்தவர். சித்த மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றவராக விளங்கினார். பல பரிசோதனைகளை செய்து புதியமருந்துகளை உருவாக்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தையும் தாண்டி இவரது மருத்துவத்திற்கு நல்ல பெயர் இருந்தது.

தொடர்ந்து மக்கள் பணியோடு, மருத்துவப்பணியும் ஆற்றிவந்த தோழர் எம்.முத்துராமலிங்கத்திற்கு கடந்தசில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த தோழர் எம்.முத்துராமலிங்கம் திங்கள்கிழமை இரவு காலமானார். தோழரின் மறைவுக்கு செவ்வாய்க்கிழமையன்று அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன்,  எம்.சின்னத்துரை, மாவட்டச்செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐமாவட்டச் செயலாளர் மு.மாதவன், சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவர் இ.ஏ.
கார்த்திகேயன்,  திமுக மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி, அறந்தாங்கி அதிமுக ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் துரை மாணிக்கம், அறந்தாங்கி  நகரச் செயலாளர் ஆதி.மோகனகுமார், காங்கிரஸ் நகரத் தலைவர் வீராச்சாமி, விசிக சார்பில் கலைமுரசு,  தி.க. மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம், தேமுதிக நகரத் தலைவர் மணிராஜ், சமாஜ்வாடி மாவட்டத்தலைவர் சரவணமுத்து, சிபிஎம்  மூத்த தோழர் எம்.ஜியாவுதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.சுப்பிர மணியன், சி.அன்புமணவாளன்,  ஜி.நாகராஜன், த.அன்பழகன் மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.அறந்தாங்கியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான காரக்கோட்டையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தோழர் முத்துராமலிங்கத்திற்கு தனபாக்கியம் என்ற மனைவியும் கண்ணன் என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர்.

;