india

img

தோழர் மகேந்திர சிங் காலமானார்... சிபிஎம் அரசியல் தலைமைக் குழு அஞ்சலி...

புதுதில்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் மத்தியக் குழு உறுப்பினரும், மகாராஷ்டிரா மாநில சிஐடியு-வின் துணைத் தலைவருமான தோழர் மகேந்திர சிங், திடீரென மரணம் அடைந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தோழர் மகேந்திர சிங் ஞாயிறன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப்பின் குணமடைந் திருந்தார். அவருடைய வயது 77.பொறியாளராகப் பயிற்சி பெற்ற தோழர் மகேந்திர சிங், பணி செய்த காலத்தில், தொழிலாளர்களின் தலைவராக மாறினார். பின்னர் வேலையை விட்டுவிட்டார். 1971இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.தொழிற்சங்க அரங்கில் அப்போது புதிதாக அமைக்கப் பட்ட சிஐடியு-வில் இணைந்து செயல்பட்டார். 1985இல் அரிஸ்டோகிராட் கம்பெனியில் சிஐடியு-வுடன் இணைந்திருந்த சங்கம் மிகவும் தீவிரமான முறையில் போராட்டத்தை நடத்தி வந்த சமயத்தில், அதன் நிர்வாகத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களால் தோழர் மகேந்திர சிங், கொலைவெறித் தாக்குதல் தொடுக்கப்பட்டு அதிலிருந்து தப்பினார்.

தோழர் மகேந்திர சிங், 1987இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதன் செயற்குழுவிற்கு 1991இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2015இல் மத்தியக்குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இறக்கும் வரையிலும் இப்பொறுப்புகளில் நீடித்தார். தோழர் மகேந்திர சிங் 1994 முதல் 2015 வரையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மும்பை மாவட்டக்குழு செயலாளராக இருந்தார்.  அப்போது மும்பையில் கட்சியைக் கட்டி வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்களிப்பினைச் செய்தார். மேலும் 1986 முதல் 1989 வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிறுவன மாநிலப் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.தோழர் மகேந்திர சிங், எளிமையிலும் எளிமை யாக வாழ்ந்த தோழர்,  மிகவும் உயர்ந்த நேர்மையான தோழர், கட்சிக்கு மிகவும் விசுவாசமான தோழர். அரசியல்தலைமைக்குழு அவருடைய வாழ்க்கைத் துணைவி யார் சாவித்திரிக்கு தன் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.'

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
தோழர் மகேந்திர சிங் மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும்தெரிவித்தது. கட்சியின் மகாராஷ்டிரா மாநிலக்குழு விற்கு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

;