tamilnadu

img

பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களை தனி நபருக்கு பட்டா அளித்த விவகாரம் அனைத்துக் கட்சியினர் போராட்டம் அறிவிப்பு

பொன்னமராவதி, செப்.22- புதுக்கோட்டை பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள அமரகண்டான் கிழக்கு குளக்கரையின் மேல் பகுதியில் ஆரம்ப காலத்தில் அழகு நாச்சியம்மன், அடைக்கலம் காத்தார் ஆகிய ஆலயங்களின் புரவி எடுப்பு குதிரை பொட்டல்களாக இருந்துள்ளன. மேலும் மன்னர்கள் காலத்தில் இலவச நீர் பந்தல் மடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பேருந்து நிலையம், பயணிகள் ஓய்வறை, தீயணைப்பு பணிமனை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, வாடகை கார் ஸ்டாண்ட் உள்ளிட்டவை அந்த இடத்தில் இருந்தன. இந்நிலையில் 1980-க்குப் பிறகு இருந்த சில அதிகாரிகளால் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த அரசுக்கு சொந்தமான அந்த இடங்கள் அனைத்தும் தனி நபர்களுக்கு பட்டா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசுக்கு சொந்தமான நீர் பந்தல் தனி நபர்களால் பத்திரம் போடப்பட்டுள்ளது. சிஐடியு-வின் முயற்சியால் அனைத்து கட்சி மற்றும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து 2003-ஆம் ஆண்டு முதல் மறியல், பொது வேலை நிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை அடுத்து விசாரணை நடத்தி முறைகேடாக பட்டா போடப்பட்டுள்ளது ரத்து செய்யப்படும் என 2009-ஆம் ஆண்டில் பொன்னமராவதி வருவாய்த் துறையினர் தெரிவித்து இருந்தனர். இதன்பின் பத்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் முறைகேடாக பட்டா பெற்ற தனி நபர் ஒருவர் சர்ச்சைக்குரிய இடங்களில் வேலி அமைக்க முடிவு செய்து சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை அறிந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், அனைத்து சங்க நிர்வாகிகள் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து, இது பேரூராட்சி, காலம் காலமாக பயன்படுத்தி வந்த இடம். ஆகவே இந்த இடத்தை மீட்க பேரூராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.  மேலும் வருவாய் துறையினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். அரசு துறையில் இருந்து நடவடிக்கை இல்லாததால் உடனடியாக சி.பி.எம் உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாகிகள் கூடி ஆலோசனை செய்தனர். இதில் உடனடியாக மாவட்ட ஆட்சியரை அனைத்து கட்சி நிர்வாகிகளும் சந்தித்து முறையிடுவது என்றும், நடவடிக்கை இல்லை என்றால்  பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் பிஜேபியின் சேதுபதி அம்பலகாரர் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் அடங்கிய அமரகண்டான் சொத்து மீட்புக் குழுவும் அமைக்கப்பட்டது.

;