tamilnadu

img

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜாமினில் உள்ள முன்னாள் பெண் அமைச்சர் பங்கேற்பு

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமினில் வெளிவந்த முன்னாள் பெண் அமைச்சர் மஞ்சு வர்மா பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம் முஜாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில், 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர், முன்னால் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய நண்பர்கள். இதனால், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மா வீட்டிலும் சோதனை நடத்தினர். 


அச்சோதனையில், மஞ்சு வர்மாவின் வீட்டில் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.


உச்ச நீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில், சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதை அடுத்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வர்மாவும் சரணடைந்தார். பின்னர், அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அந்த மேடையில், ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் வெளிவந்த மஞ்சு வர்மா தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு, முன்வரிசையில் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

.

;