tamilnadu

img

மருத்துவ சோதனை செய்து கொள்வீர்: சிபிஐ வேண்டுகோள்

உலக மக்களின் உயிர் வாழ்வுக்கு கொரானா வைரஸ் நோய் தொற்று பெரும் சவாலாகியுள்ளது. இதனை எதிர் கொண்டு, கொரானா வைரஸ் தொற்று பரவலுக்கு முடிவுகட்ட உலக நாடுகள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி 22ஆம் தேதியில் கரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 580 ஆக இருந்தது. அது 10 லட்சத்தை நெருங்கியிருக்கிறது. இந்த ஆட்கொல்லி நோயுக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 249 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக் கிறார். இந்தக் கொடிய கொரானா வைரஸ் தொற்று நோயை முற்றிலும் முறியடிக்க முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளி நிறுத்தல், விலகியிருத்தல், தனிமைப் படுத்தி கொள்ளுதல், போன்றவைகள் மிக மிக முக்கியமானது. இதற்காகவே நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மனிதனாக திரண்டு கொரானா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் போராட் டத்தை நடத்தி வரும் போது சிலர் கொரானா வைரஸ் நோய் தொற்றுக்கு மதச் சாயம் பூசுவது மதவெறி கொண்ட வக்கிரமாகும். இதனை அரசும் மக்களும் இணைந்து நின்று முறியடிக்க வேண்டும்.

ஒரு நிகழ்ச்சிக்காக புதுதில்லி சென்று திரும்பிய அனைவரும் தாங்களே முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சமூகத்தின் வேண்டு கோளாகும். இதனை உணர்ந்து  தாங்களே முன் வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.  இதில் இன்னும் எஞ்சியிருப்போர் அனைவரும் தங்களை உடனடியாக மருத்துவ சோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரானா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு நாட்டின் எல்லைகளோ, மத, சாதி, மொழி அடையாளங்களோ, கட்சி சார்பு நிலையோ காரணம் இல்லை என்ற அறிவியல் உண்மையினை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
 

;