சென்னை, ஜூலை 28- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதியன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை தினமானது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனையின் ஆண்டு விழாவாகவே கருதப்பட்டு கொண்டாடப்படும் எனவும், இதற்கென மருத்துவமனையின் தலைவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரக் கல்வி, சேவைகள் தொடர்பான கண்காட்சியை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சாதனைகள், சேவைகள், புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவ மனையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள், சிறப்பாகப் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை விழாவின்போது சிறப்பிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.