தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
திண்டுக்கல், ஆக. 18- அத்தியாவசியப் பொருளான பாலுக்கு மானியம் கொடுப்பதற்கு பதிலாக, ரூ.4 கொள்முதல் விலை உயர்வை காரணம் காட்டி ரூ.6 விற்பனை விலையை உயர்த்தியிருப்பது அநியாயமானது என்று தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பால்கொள்முதல் விலையை உயர்த்து ங்கள் என்று தொடர்ந்து நாம் கேட்டுக்கொண்டே இருந்தோம். அரசு இப்போது பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது. பால் உற்பத்தியாளர்களிடம் உற்பத்தி விலையை லிட்டருக்கு ரூ.4 என உயர்த்திவிட்டு விற்பனை விலை லிட்டருக்கு 6 ஆக உயர்த்தியுள்ளது அரசு. விற்பனை விலையை ரூ.6க்கு அதாவது 2ரூபாய் கூடுதலாக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? ரேசன் கடையில் மக்களுக்கு அரிசி இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. இந்த அரிசி கொடுக்கப்படவில்லை என்றால் தமிழக மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கி விடுவார்கள். அதே போல பாலும் ஒரு அத்தியாவசியப் பொருள். மக்களுக்கு நேரடியாக கொடுக்கும் பாலுக்கு மானியம் கொடுத்தால் என்ன நட்டம் வரப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.