tamilnadu

img

பசியாற்றியவர்களும், பசியாறியவர்களும்...

மாமதுரை அன்னவாசல் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட தைபுரட்சி அமைப்பைச் சேர்ந்த கவிதா ராஜாமுனீஸ் (33) கூறுகையில், எனது ஊர் விரகனூர். கொரோனா காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதவிகள் செய்துள்ளோம். சுவெங்கடேசன் எம்.பி. ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட. கொரோனா காலத்தில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, மதுரை மக்கள் பற்றி சிந்தித்தவர். நாடாளுமன்றத்தில் எந்தக் கருத்தையும் துணிச்சலாகப் பேசக்கூடியவர். அன்னவாசல் திட்டம் ஒரு அருமையான திட்டம். இந்தத் திட்டம் தொடரவேண்டும்.  குறிப்பாக சாலையோரத்தில் வசிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அன்னவாசல் திட்டம் மூலம் பயன்பெற்றுவருகிறார்கள்.

**********

“நான் ஒரு ஹோட்டல் தொழிலாளி. கடந்த இரண்டு மாதங்களாக ஓட்டல் திறக்கப்படவில்லை. இதனால் எனக்கு வேலையில்லாமல் போய்விட்டது. நோய்வாய்ப்பட்ட எனது மகனால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது. எனது வருமானம் தான் குடும்பத்தின் அடித்தளம். வேலையின்றி சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு வந்த எனக்கும் எனது மகனுக்கும் மாமதுரை அன்னவாசல்” மதிய உணவுத்  திட்டம் எங்களின் ஒரு நேரப் பசியைப் போக்கியது. தினசரி இப்பகுதியிலுள்ள பையன்கள் வீட்டிற்கே வந்து கொடுத்துச் செல்கிறார்கள்.  கொரோனா காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் வீடு தேடிவந்து உணவளித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மதுரை எம்.பி.க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். -பெத்தானியாபுரம் காமராஜர் தெரு கண்ணம்மாள்

**********

“என்னுடைய மனைவி வீட்டு வேலைக்கு சென்றால்தான் எங்கள் குடும்பம் வாழமுடியும். கடந்த இரண்டு மாதங்களாக அவரை சில வீட்டினர் நோய்த்தொற்று காரணமாக  தற்போதைக்கு வேலைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் உணவுக்கு சிரமப்பட்டு வந்த தருணத்தில்  இப்பகுதியிலுள்ள தோழர்கள் சிலர் தினம்தோறும் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் தவறாது மதிய உணவு முட்டையுடன் அளித்து வருகிறார்கள். - மதுரை கோச்சடையைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி முருகானந்தம்

**********

மதுரை புறநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கல்லக்குத்தலில் மாமதுரை அன்னவாசல் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. 200 பேர் வரை பசியாறுகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மாணிக்கம். குள்ளத்தன்மையுடைய கை, கால் செயல்படமுடியாத மாற்றுத்திறனாளி. இவரது சொந்த ஊர் திண்டுக்கல். அம்மா, அப்பா காலமாகிவிட்டதால் தனது அக்கா வீட்டில் தங்கியுள்ளார். ஊரடங்கு காலத்தில் அன்னவாசல் அவரைக் காப்பாற்றி வருகிறது. அவரிடம் பேசியபோது, தோழர் முருகன் இருக்கிறார். அவர் தினம் தோறும் சாப்பாடு தருகிறார். சாப்பாடு நன்றாக உள்ளது. என்ற அவர் கூறிய செய்திதான் கண்கலங்க வைத்தது. எனக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கிறது. இதை வாங்க நான் திண்டுக்கல் செல்லவேண்டும். என்னை அழைத்துச்செல்வதற்குள் எனது அக்கா சிரமப்படுகிறார். எனக்கு நிவாரண உதவி மதுரையில் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்றார்.

**********

மாமதுரை அன்னவாசல் திட்டத்தில் சமையல் கலைஞராக மட்டுமல்ல தொண்டர் என்ற உணர்வோடும் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ள குருநாதன் கூறுகையில், “கொரோனா  காரணமாக நிகழ்ச்சிகள் ஏதுமின்றி வீட்டிலிருந்த என்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அழைத்து,  உணவு சமைப்பதற்கு வரமுடியுமா என்று கேட்டனர். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். நான் மட்டும் தான் அங்கு வேலை செய்ய வேண்டிய நிலை இருக்குமோ என்று நினைத்தேன். அங்கு சென்ற போதுதான் அங்கு பல தொண்டர்கள்  இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தினம்தோறும் அவர்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

முதலில் 100 பேருக்கு மட்டுமே உணவு தயாரிக்கச்  சொன்னார்கள். அது சில நாட்களிலேயே 250 பேராக அதிகரித்தது. 12 வகையான சாதங்களை சமைத்து கொடுக்கிறேன் தினசரி சமைக்கப்படும் உணவிற்கு தேவையான பொருட்களை முதல் நாளே தோழர்களிடம் கூறிவிடுவேன். காலையில் 8.30 மணிக்கு சமைக்க செல்லும்போது அங்கு அனைத்து பொருட்களும் தயாராக இருக்கும். தொண்டர்கள் உதவியால் எனது வேலை எளிதாக முடிந்துவிடுகிறது. சரியாக 11.30 மணிக்கு சமைத்து முடித்து விடுவேன். அது பார்சல் செய்யப்பட்டு பகல் ஒரு மணிக்குள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும். எனக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட  தோழர்களின் “அர்ப்பணிப்பு” உணர்வு என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. கொரோனாவிற்கு பின்னாலும் இந்த தோழமை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தத் “தோழமையை” நான் தக்க வைத்துக்கொள்வேன்.

**********

மதுரை சத்திரப்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் வெள்ளைச்சாமி (எ) பேமஸ் கூறுகையில், “இரண்டு மாதமாக சமைக்கிறேன். எனக்கு உதவியாக அன்னவாசல் தொண்டர்கள் இருக்கிறார்கள். காலை எட்டு மணிக்கு தொடங்கும் பணி 11 மணிக்கு முடிந்துவிடும். தொண்டர்களுடன் இணைந்து நானும் பொட்டலம் போடும் பணியில் ஈடுபடுவேன். இதுவரை 15 வகையான உணவுகளை தயார் செய்து கொடுக்கிறேன். வாரத்திற்கு நான்கு நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. தினம்தோறும் 200 பேர் பசியாறுகிறார்கள். சமையல் பாத்திரங்களை இலவசமாகக் கொடுத்துள்ளேன். நான்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பது எனக்கு கூடுதல் பலம் மட்டுமல்ல பெருமையாகவும் கருதுகிறேன். எனது சமையலை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பாராட்டியுள்ளார். இப்போது மாமதுரை அன்னவாசல் பாராட்டுகிறது. இதன் மூலம் என் போன்ற கலைஞர்களுக்கு ஒரு கௌரவம், மரியாதை கிடைத்துள்ளது.

 

;