காஞ்சிபுரம், செப். 22 தமிழகத்தில் தொழில்களையும், தொழி லாளர்களையும் வீரஞ்செறிந்த போரட்டத்தால் பாதுகாப்போம் என்ற சூளுரையுடன் சிஐடியு 14வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் ஞாயி றன்று (செப்.22) நிறைவடைந்தது. மாநாட்டின் நிறைவுநாளில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க மையத்தின் சிஐடியு 14வது மாநாடு 19ஆம் தேதி துவங்கி மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை யில் நான்கு நாட்கள் காஞ்சியில் நடைபெற்றது. மாநாட்டில் 741 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் சமர்பித்த வேலை அறிக்கையின் மீது பிரதிநிதிகள் தொழில்களையும் தொழி லாளர்களையும், விவசாயத்தையும் விவ சாயத் தொழிலாளர்களையும் இயற்கைவளங் களையும், பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூர்மையான விவா தங்களை முன்வைத்தனர். அவற்றையெல்லாம் தொகுத்து தொழில்களையும், தொழி லாளர்களையும் வீரஞ் செறிந்த போரட்டத்தின் மூலம் பாதுகாப்போம் என்று பொதுச் செய லாளர் சுகுமாறன் கூறினார்.
அகில இந்திய மாநாட்டுக்கு ரூ. 1.20 கோடி நிதி
மாநாட்டை வாழ்த்தி சிஐடியு கர்நாடக மாநிலச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் பேசி னார். மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் உரை யாற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் இ.முத்துக்குமார், நன்றி கூறினார். அகில இந்திய மாநாட்டு நிதியாக பல்வேறு அமைப்பு களின் சார்பில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மாநில நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
நவ.19ல் இருசக்கர வாகன பிரச்சாரம்
குறைந்தபட்ச கூலி 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், உள்ளாட்சித் துறையில் துப்புரவு பணிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அப்புறப்படுத்துவதற்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்ட தொகுப்பு களாக மாற்றுவதை கைவிட வேண்டும், சிறு குறுந் தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நவம்பர் மாதம் 19ஆம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில், ஒன்றியங்களில் இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்வது என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாபெரும் பேரணி
மாலை நான்கு மணியளவில் காஞ்சி புரம் டோல்கேட் பகுதியில் இருந்து வான வேடிக்கை, மேலதாளங்களுடன் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி துவங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொழிலாளர்களின் ஆவேச முழக்கங்களுடன் காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற பொதுக் கூட்ட மேடையை வந்தடைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் வரவேற்றார். இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென், அகில இந்தியத் தலைவர் கே.ஹேமலதா, அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாதன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச் செய லாளர்கள் ஆ.கருமலையான், வி.குமார், கே.திருச்செல்வன், துணைத் தலைவர் ஆர்.சிங்கார வேலு ஆகியோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி நன்றி கூறினார்.
படங்கள் : செ.கவாஸ்கர்,
செய்தி : அம்பத்தூர் ராமு, பார்த்திபன்