மனிதர்களுள் மகானாகிப் போனார்- மக்கள்
மனதிலெலாம் சிற்பமாக ஆனார்;
ஜனவரியாம் முப்பதன்று கோட்சே- காந்தி
சுடர்நெஞ்சில் சுட்டான்மத வெறியால்…
பாரதத்தின் தந்தையாகி வந்தார்- இங்கு
பாழிருளை ஓட்டியொளி தந்தார்;
பாருக்கொரு அகிம்சைவழி சொன்னார்- அதைப்
போற்றிடுவோம்; ஒற்றுமையைக் காப்போம்!
அடிமைஎனும் விலங்குதனை உடைத்தார்- இங்கு
அன்னியனின் ஆதிக்கத்தை முறித்தார்;
கொடியர்முன்பும் அன்புமொழி பகர்ந்தார்- அந்தக்
கருணைதனை நெஞ்சினிலே ஏற்போம்!
அகிம்சையெனும் ‘தீப்பந்தம்’ படைத்தார்-அதில்
அதிகார ஆணவத்தை எரித்தார்…
அகிலத்தின் தியாகஜோதி யானார்- அவர்
அன்புதீபம் ஏற்றிடுவோம் இன்று…
பலமதங்கள், பலமொழிகள் நாடு- இது
பாசமக்கள் ஒற்றுமையின் வீடு!
சிலகொடியர் மதவெறியில் இன்று- இதைச்
சிதைத்திடவே அனுமதியோம் என்றும்!
‘குடியுரிமைத் திருத்தச்சட்டம்’ மற்றும்- நாட்டில்
கொடுமைகளைச் செய்கின்றார் முற்றும்…
காந்திதேச இறையாண்மை மார்பில்- கொடிய
கோட்சேக்களே, மீண்டும் மீண்டும் சுடாதீர்!
ந.காவியன்