tamilnadu

img

பசுமை வீடுகள் தொகை அதிகரிப்பு

சென்னை, பிப். 14- முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், சூரியஒளித் தகடுகளை நிறுவுவதற்கான தொகை, வீடு ஒன்றிற்கு 30,000 ரூபாய், வீட்டின் கட்டுமானச் செலவிற்கான தொகையுடன் சேர்க்கப்பட்டு, ஒட்டு மொத்த கட்டுமானச் செலவு வீடொன்றுக்கு 2.1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெள்ளியன்று (பிப்.14) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கிராமப்புற, நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படாமல் உள்ள சிறுசிறு பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம்,உணவுபாதுகாப்பு, அணுகுசாலை, இடுகாடு, மின்விளக்கு போன்ற வசதிகளை கிராமப்புறங்கள் பெற ஏதுவாக ‘முதலமைச்சரின் கிராம தன்னிறைவு திட்டம்’ 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

ஆட்சேபணையில்லா புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களின் வீட்டு மனைகளை வரன்முறை செய்து வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ள நபர்களில் தகுதியான நபர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (ஊரகம்)  மற்றும் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ்  2020-21 நிதியாண்டு முதல் வீடுகள் கட்டித் தரப்படும்.  பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2 லட்சம் வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், அனைத்துப் பழங்குடியினர் குடும்பங்களுக்கும் வீட்டுவ சதியை வழங்கும் வகையில், அவர்களுக்கான 8 ஆயிரத்து 803 வீடுகள் உட்பட 20 ஆயிரம் வீடுகளும் கட்டித் தரப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (ஊரகம்) 3 ஆயிரத்து 99 கோடி ரூபாயும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடன்பத்திரம்

தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டம் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டப்படும். ஸ்மார்ட்சிட்டி திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 1, 650 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு ஆயிரத்து 450 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர், ஓசூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அம்மா உணவகம்

அம்மா உணவகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘லாப நோக்கமற்ற’ ஒரு சிறப்பு நோக்கு முகமையை அரசு உருவாக்க உள்ளது.  இத்திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

;