தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. இந்த நிலையில், மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களைச் இருந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெள்ளியன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் புதன்கிழமை ஒரேநாளில் எட்டுப் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக ஆறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள ஆறு பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் இருவர், ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் இருவர். மதுரையைச் சேர்ந்த இருவர் ஆவர். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் (26) அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய நபரின் ரத்த உறவுகள் எனக் கூறப்படுகிறது.