tamilnadu

img

முழுக்கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு,நவ.3-  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த அக்டோபர் 22 அன்று அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அக்டோபர் மாதத்தில் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர்தேக்கமுடியும் என்பதால் அணையிலிருற்து அதிகளவிலான உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழுக்கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது.  அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் நீர், உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;