tamilnadu

img

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேருக்கு சாகும் வரை சிறை

தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு  

தஞ்சாவூர், ஜன.13- கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு இளைஞர்களுக்கு சாகும் வரை  (வாழ்நாள் சிறை) தண்டனையும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். தில்லியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் உள்ள வங்கியில் வேலையில் சேர்வதற்காக 2018 -ஆம் ஆண்டு டிச.1-ஆம் தேதி  இரவு வந்தபோது நான்கு இளைஞர்களால் கும்பல் பலாத்காரத்துக்கு உள்ளானார். 

இதுதொடர்பான வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. காவல்துறையினர் 700 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக 33 பேர் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எம்.எழிலரசி வழக்கை விசாரித்து, அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகம் இன்றி நிரூபனம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நால்வருக்கும் கும்பல் பலாத்காரம் செய்த சட்டப்பிரிவின் கீழ் சாகும் வரை சிறை தண்டனையும், நால்வருக்கும் தலா 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் நான்கு பேரும் சிறையில் இறந்த பின்னரே அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அதுவரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

;