tamilnadu

img

நீங்கள் ஆட்சியில் இருப்பதே நாங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தால் தான்... சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

தில்லியின் வடகிழக்குப் பகுதியில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கர வன்முறை - கலவரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தில்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்ப்பந்தம் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும், பொருளாதார அறிஞருமான ஜெயதி கோஷ் உள்ளிட்ட அரசியல்தலைவர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் குவின்ட் இணைய இதழின் செய்தியாளர் ஐஸ்வர்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியுடன் மேற்கொண்ட நேர்காணல் இது. (தமிழில் : அ.அன்வர் உசேன்)

*    பத்திரிகையாளர் : குற்றப்பத்திரிக்கையில் குறிப்பாக தில்லி ஜாப்ராபாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை எண் 50ல்  உங்களுடைய பெயர் உள்ளது என்று தெரிந்தவுடன் அந்த தருணத்தில் நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

யெச்சூரி: எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! இந்த மதக்கலவரத்தில் என்னுடைய பெயர் எங்கே வருகிறது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!  இதனை வெறும் கலவரம் என்று அழைப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை இது ஒரு மோசமான மதக் கலவரம் ஆகும். ஒரு தரப்பின் மீது ஏவப்பட்ட வன்முறை!  இதில் எனக்கு என்ன தொடர்பு? \பின்னர் கவனித்ததில் இந்த தொடர்பு என்பது மிகவும் உறுதியற்ற நிலையில் பொய்யான வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் தான் இந்த மதக்கலவரத்திற்கு காரணம் என்று ஒரு தொடர்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படி வகைப்படுத்துவது என்பது மிகமிக கேலிக்குரியது!இது முற்றிலும் பொய்யான வகையில் புனையப்பட்ட ஒரு கதை! இந்த வன்முறை எப்படி உருவானது என்பது குறித்து ஒரு பொய்யான புதிய கருத்தாக்கத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனை ஏன் பொய்யாகப் புனையப்பட்ட கருத்தாக்கம் என நான் சொல்கிறேன்?

53 பேர் இந்த மதக்கலவரங்களில் கொல்லப்பட்டனர். அதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை.  குற்றப்பத்திரிக்கை இல்லை. பாஜக தலைவர்கள் பேசிய நஞ்சு கலந்த கருத்துரைகளை உலகில் உள்ள ஒவ்வொருவரும் பார்த்தனர்.  மத்திய அமைச்சர்கள் கூட மோசமானவெறுப்பு உரைகளை வெளிப்படுத்தினர். இந்த உரைகளின் காணொலி சமூக ஊடங்களில் மிகப்பரவலாக வலம் வந்தன.  வெறுப்பு உரைகளை தொடர்ந்து கலவரங்கள்! அந்த காலவரிசையை பார்க்க வேண்டும்.

                                         *************

*    யெச்சூரி அவர்களே, வெறுப்பு உரைகள் பற்றி முதல் தகவல் அறிக்கைகள் பதியப்படவில்லை என்பதை எங்களது குவின்ட் இதழ் கூட பலமுறை செய்திகள் வெளியிட்டு இருக்கிறது. எனினும் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். கலவரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து குற்றப்பத்திரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு முதல் தகவல் அறிக்கை எண் 60 காவல்துறையின் ரத்தன்லால் மரணம்/முதல் தகவல் அறிக்கை 65  உளவுத்துறையின் அங்கிட் ஷர்மாவின் மரணம்/ முதல் தகவல் அறிக்கை 102,103,104 ஆகியவை 9 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும் இந்துத்துவா குழுவின் வாட்ஸ்அப் நடவடிக்கைகள் குறித்தும் முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன.

யெச்சூரி:  ஆனால் எதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்? ஒரு வன்முறையை நீங்கள் புலனாய்வு செய்கிறீர்கள் என்றால் எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கு காரணமாக வெறுப்புரைகள் பரப்பப்பட்டன. உயிர்கள் பறிபோயுள்ளன. இதற்கு அல்லவா முன்னுரிமை தரப்பட வேண்டும்? இதற்கு மாறாக நீங்கள் எந்த திசைவழியில் செல்கிறீர்கள்?  அங்குதான் உள்நோக்கம் என்பது தலையெடுக்கிறது. தில்லி காவல்துறை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சாகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த புலனாய்வின் மோசமான திட்டம் என்னவெனில், சம்பவங்களின் வரிசைக்கிரமமான தொகுப்பை மாற்றுவதுதான். உள்துறை அமைச்சகத்தின் இந்தத் திட்டம் நாடாளுமன்றத்திலேயே வெளிப்பட்டது.  சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்கள்தான் தில்லி கலவரங்களின் சதிகாரர்கள் எனவும் காவல்துறை மிக வேகமாக நடவடிக்கை எடுத்து கலவரத்தை தடுத்தனர் எனவும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பாராட்டி பேசினார்.

                                         *************

*    ஏன் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது?

யெச்சூரி:  ஏனெனில் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது அவர்களது நீண்டநாள் திட்டம். ஜனநாயக மதசார்பின்மை அடிப்படையில் அமைந்துள்ள நமது அரசியல் சட்டத்தை அவர்கள் சிதைக்க முயல்கின்றனர். அதற்கு மாறாக நூறு ஆண்டுகளாக கூறி வருகின்ற மத அடிப்படையிலான பாசிச இந்து ராஷ்டிரா கோட்பாடுகளை உருவாக்க முயல்கின்றனர். அது அவர்களுடைய மறைமுக நிகழ்ச்சி நிரல் அல்ல! பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர். இந்து ராஷ்டிரம் உருவாக வேண்டுமென்றால் இப்போது இருக்கின்ற அரசியல் சட்டம் அகற்றப்பட வேண்டும். எனவேதான் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

                                         *************

*    குல்ஃபிஷா பாத்திமாவின் வாக்குமூலத்தில் உங்களுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையால் கூறப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

யெச்சூரி: இந்த வாக்குமூலங்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது அந்த மூன்று இளம் போராளிகள் வாக்குமூலத்தின் பல பக்கங்களில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

                                         *************

*    அந்த மூன்று பேரில் குல்ஃபிஷா பாத்திமா தனது வாக்குமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த வாக்குமூலத்தில் உங்களுடைய பெயர் எப்படி இடம்பெற்றது?

யெச்சூரி:  நீங்கள் குல்ஃபிஷா பாத்திமாவிடம்தான் கேட்க வேண்டும்.

                                         *************

*    நாங்கள் குல்ஃபிஷா பாத்திமாவின் வழக்கறிஞர் மெஹ்மூத் பரிச்சாவிடம் கேட்டோம். அவர் குல்ஃபிஷா பாத்திமாவின்  வாக்குமூலம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் ஆதாரமில்லாதவை எனவும் கூறினார். மேலும் சாட்சி கூறும் சட்டப் பிரிவு 25ன் கீழ் இத்தகைய வாக்குமூலங்கள் செல்லத்தக்கவை அல்ல; இதற்கான மேலும் பொருத்தமான சாட்சியங்கள் இருந்தால்தான் இவை செல்லும் எனவும் கூறினார்.  

யெச்சூரி: நான் குல்ஃபிஷா பாத்திமாவை சந்தித்திருக்க வாய்ப்பு உண்டு. அதனை நான் மறுக்கவில்லை. எனினும் இந்த சந்திப்பு என்பது அவர் எனக்கு நன்றாக தெரியும் என்ற அடிப்படையில் அல்ல! என்னுடைய பெயர் எப்படி இதில் இழுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு நீங்கள் அவர்களிடம்தான் பதிலை கேட்க வேண்டும்.

                                         *************

*    இந்தக் குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் வந்தது குறித்து நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறீர்களா?

யெச்சூரி: இல்லை. நான் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என அவர்கள் விளக்கம் அளிப்பதில் மும்முரமாக உள்ளனர்.

                                         *************

*    விசாரணையில் உள்ளவர்களால் என்ன எங்களுக்கு சொல்லப்பட்டதோ அதனை உண்மையாக நாங்கள் பதிவு செய்திருக்கிறோம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்!

யெச்சூரி: அப்படி அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். 

                                         *************

*    நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று பயப்படுகிறீர்களா? உங்களது பெயர் வேறு சில குற்றப்பத்திரிக்கைகளிலும் இடம்பெறும் என்று கவலைப்படுகிறீர்களா?

அவசரநிலை காலத்தை கடுமையாகப் போராடி ஜனநாயகத்தை மீட்டெடுத்த அந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்! இந்த அரசாங்கம் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு நாங்கள் வென்றெடுத்த ஜனநாயகம்தான் காரணம்.நாங்கள் போராடினோம், ஜனநாயகத்தை மீட்டெடுத்தோம். அதே போல இப்போதும் போராடுவோம்! இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்! ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்களைத் திரட்டுவது என்பது எந்த விதத்திலும் தவறு இல்லை. அது அரசியல் சட்டம் நமக்கு கொடுத்துள்ள உரிமை. அமைதியான முறையில் மக்களை திரட்டுவதற்கு கொடுக்கப்பட்ட உரிமை! அதைத்தான் நான் செய்தேன். இந்த அரசியல் சட்டம் இருக்கும் வரை அந்த உரிமை எனக்கு உள்ளது. இந்த அரசியல் சட்டத்தின் கீழ் பல முறை நான் உறுதி எடுத்துள்ளேன். அதன் அடிப்படையில் எனது உரிமையை நான் நன்கு அறிவேன்.

                                         *************

*    இந்த புலனாய்வு தற்போதைய கட்டத்தை அடைந்துள்ள சூழலில் இதற்கு எதிராக இன்னும் நிறைய செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சிறையில் உள்ள இந்த செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கு இன்னும் கூடுதலாக மக்களைத் திரட்ட வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்களா? தேவையான அளவு ஆதரவும் ஒருமைப்பாடும் முன் வருகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?

யெச்சூரி:  ஆதரவும் ஒருமைப்பாடும் இன்னும் கூடுதலாக உருவாக வேண்டிய தேவை உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை. கணிசமாக ஆதரவும் ஒருமைப்பாடும் உருவாகி வருகின்றன. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.  ஆனால் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் பா.ஜ.க. அரசாங்கத்தின் முழு முயற்சியும் மக்களை மிரட்டுவதில் உள்ளது. நீங்கள் போராட முன்வந்தால் இந்த கதி தான் உங்களுக்கும் ஏற்படும் என ஆட்சியாளர்கள் மிரட்டுகின்றனர்.

                                         *************

*    அவ்வாறு மிரட்டுவதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா?

யெச்சூரி: அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற முடியாது. எங்களில் பலருக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற முடியாது. எனினும் இந்த அரசாங்கத்தின் இந்த 
மிரட்டல் வலையில் சிக்க வேண்டாம்; அஞ்ச வேண்டாம் என்பதுதான் நான் மக்களுக்கு முன்வைக்கும் வேண்டு கோள்.

;