tamilnadu

img

தொழிலாளரும் விவசாயியும் கரம் கோர்ப்பீர்.... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்...

மிகவும் சிதைக்கப்பட்டு நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதிநாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தொழிலாளர் நலச் சட்டங்கள், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான கடும் தாக்குதலாகும். சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்ட, தொழில் உறவுகள் சட்டம், பணியிடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றுடன் ஊதியங்கள் தொடர்பான சட்டமும் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாக மாற்றிட பகிரங்கமான முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த முயற்சிகளும் நவீன தாராளமய சீர்திருத்தக்கொள்கைகளின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் அளிக்காமல், அவர்கள் வேலை செய்தபின் எவ்விதமான இரக்கமுமின்றி விரட்டியடிப்பது (hire and fire), முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்குத் தடையாக இருந்திடும் சமூகப் பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் நீக்குவது ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டே இச்சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                                                                                                                                               **********************

தொழிலாளர் நலச் சட்டங்களின் வரையறைக்குள் வராத அளவிற்கு, தொழிற்சாலைகளின் அளவு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, மின்சாரம் உபயோகப்படுத்தும் தொழிற்சாலைகளும், 10 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளும், அல்லது, மின்சாரமின்றி 20 தொழிலாளர்களுக்கு மேல்பணிபுரியும் தொழிற்சாலைகளும் தொழிலாளர்நலச் சட்டங் களின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. இப்போது அந்த வரம்பு முறையே 20 என்றும் 40 என்றும்
மாற்றப்பட்டிருக்கிறது.

                                                                                                                                               **********************

ஒரே சட்டத்திருத்தத்தின் மூலம், தொழிலாளர் உறவுகள் சட்டத்தில் நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களில் 70 சதவீதமும், தொழிலாளர்களில் 74 சதவீதமும் எவ்விதச்சட்டப்பாதுகாப்புமின்றி வேலை செய்தபின் கூலியைப் பெற்று விரட்டிவிடப்படும் நிலைக்கு (hire and fire)கொண்டுவரப்பட்டு விட்டார்கள். முன்னதாக, 100 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரிந்துவந்த தொழிற்சாலைகளில் கதவடைப்பு செய்யப்பட வேண்டுமானால் அத்தொழிற்சாலை நிர்வாகம், மாநில அரசின் அனுமதியைப்பெற வேண்டும் என்று இருந்தது. அது இப்போது 300 தொழிலாளர்கள் என்று மாற்றப்பட்டுவிட்டது. மேலும், இதனை மேலும் உயர்த்துவதற்கான அதிகாரத்தை அரசாங்கம் ஓர்அறிவிக்கையின் மூலம் செய்துகொள்ளக்கூடிய விதத்தில்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. எனவே, 300 தொழிலாளர்களுக்கும் கீழ் பணிபுரியும் தொழிற்சாலைகள் சட்டப்படிக் கட்டுப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் பணிநிலைமைகள் எதையும் பின்பற்ற வேண்டிய நிலையாணைகள் எதையும் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

                                                                                                                                               **********************

இந்தச் சட்டத்திருத்தங்கள் அனைத்துமே இருக்கின்ற சட்டங்களைப் புறக்கணித்திட ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் அளித்திடும் விதத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, தொழில் உறவுகள் சட்டத்தில், “பொது நலன்” கருதி ஏதேனும் ஒரு தொழில் நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசாங்கம் கருதினால், இந்தச் சட்டத்தின்ஷரத்துக்களிலிருந்து விலக்கு அளித்திடலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் வெள்ளோட்டத்தை இப்போது மத்தியப் பிரதேசத்தில் பார்க்க முடிந்தது. மத்தியப் பிரதேச மாநில அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்,மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களை ‘நிறுத்திவைப்பு’ செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

                                                                                                                                               **********************

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் களை முறைசாராத் தொழிலாளர்களாக மாற்றவும், ஒப்பந்தத்தொழிலாளர்களாக மாற்றவும், கேசுவல் தொழிலாளர்களாக மாற்றவும் வகை செய்கிறது. குறைந்தகால அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் மற்றும்பணிக்காலத்துடன் வேலை அளிக்கக்கூடிய புதிய வடிவம்ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, பருவகாலப் பணிகளுக்கு (seasonal work) என்று கூறப்பட்டிருந்தபோதிலும், இதனை அவ்வப்போது நீட்டித்துக்கொள்வதற்கும், எவ்விதமான சமூகப் பயன்களையும் அளித்திடாமல் நிரந்தரப் பணி செய்திடும் வேலைகளுக்கும் நீட்டித்திட எவ்விதமான வரம்பும் இல்லை.

                                                                                                                                               **********************

இந்தச் சட்டமுன்வடிவின் முந்தைய வரைவில் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 பேர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அது இப்போது கொண்டுவரப்பட்டிருந்த சட்டமுன்வடிவில் 50 என உயர்த்தப்பட்டு, இப்போது நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் தொழில்நிறுவனங் களில் மூன்றில் இரண்டு பங்கு இப்போது ஒப்பந்தச் சட்டத்தின் ஆதிக்க வரம்பெல்லைக்கு வெளியே இருக்கின்றன.

                                                                                                                                               **********************

புதிய சட்டத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும்பணி நிலைமைகள் குறித்து ஆழமாக முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் 30 தொழில் நிறுவனங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு, 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் பணி நேரங்கள் மற்றும்பாதுகாப்புத் தர நிர்ணயங்கள் சம்பந்தமாகக் கையாளும் சட்டத்தின் வரம்பெல்லையிலிருந்து சிறியதொழில்நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் பிரயோகிப்பது குறித்தும், பாதுகாப்புத் தரநிர்ணயங்கள் குறித்தும் நிர்ணயம் செய்து கொள்வதற்கு மாநில அரசாங்கங்களுக்கு விதிகள் ஏற்படுத்திக்கொள்ள அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

                                                                                                                                               **********************

தொழில் உறவுகள் சட்டத்தால் அணிதிரளும் உரிமையும், சங்கம் அமைக்கும் உரிமையும் கூட கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. சங்கங்களை அங்கீகரிப்பதற்கான வரன்முறை (criteria) எதுவும் இல்லை. சங்கங்களை அங்கீகரிப்பதற்காக தொழிலாளர்கள் மத்தியில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிவரும்கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. தொழிலாளர் களின் கூட்டுப்பேர நடவடிக்கை குறித்து எதுவும் கூறப்படவில்லை. இவ்வாறு நிலையாணைகள் எதுவும் இல்லைஎன்பதன் பொருள், ஒரு ஸ்தாபனத்திற்குள் ஒரேமாதிரியான பணிநிலைமைகள் இருக்காது என்பதேயாகும். வேலை பார்க்கும் தொழிலாளர்களில் பெரும் பகுதி, ஒப்பந்தத் தொழிலாளர்களாகவோ அல்லது காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட (fixed term) தொழிலாளர்களாகவோ இருப்பார்கள். இது, தொழிற்சங்கங்கள் செயல்படுவதில் சிரமங்களை உருவாக்கும்.

                                                                                                                                               **********************

மிகவும் ஆபத்தான தாக்குதல் என்பது, வேலை நிறுத்தஉரிமைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகும். தொழில்உறவுகள் சட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வதற்கு 14 நாட்கள் அறிவிப்பு கொடுத்தால் போதும் என்றிருந்தது. இதன்காரணமாக இடைப்பட்ட காலத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டிய தேவை இருந்தது. அந்த சமயத்தில் வேலைநிறுத்தம் அனுமதிக்கப்படாது. சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துமுடிந்தபின்னர், அதன்பின் ஏழு நாட்கள் கழித்து வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடியும். சமசரம் சம்பந்தமான வழக்குகள் நடைபெறும் சமயத்தில் மூன்று மாதங்களுக்கு வேலைநிறுத்தம் செய்யமுடியாது என்று மற்றொரு ஷரத்து இருக்கிறது. அத்தியாவசியப் பணிகளில் வேலை செய்திடும் தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமானால் ஆறு வார கால அறிவிப்பு கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வாறுஇருந்த ஷரத்துக்கள் எல்லாம் இப்போது அடிபட்டுவிட்டன. சமரச வழக்குகள் முடியும் வரை தொழிலாளர் கள் வேலைநிறுத்தத்திற்காக நோட்டீஸ் கொடுத்தாலும், மாதக்கணக்கான காலத்தில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடமுடியாது.

                                                                                                                                               **********************

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் குழப்பமானமுறையில் இயங்கிய நாடாளுமன்றத்தில், தொழிலாளர்களுக்கு விரோதமான இம்மூன்று சட்டமுன்வடிவுகளையும் கொண்டுவந்து மோடி அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இம்மூன்று சட்டமுன்வடிவுகளும், 2019இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிலைக்குழுக்களில் பரிசீலிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளிலிருந்து வித்தியாசமானவைகளாகும்.இப்போது கொண்டுவந்துள்ள சட்டங்களில், 300 பேர் வரை வேலை செய்திடும் தொழிற்சாலைகளில் கதவடைப்பு மற்றும் பணிநீக்கத்திற்கோ (retrenchment) முன் அனுமதி பெறுவதற்காக இருந்த கால வரையறை உயர்த்தப்பட்டிருப்பதுபோன்று பல புதிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

                                                                                                                                               **********************

தொழிலாளர்கள் மீது ஒரு வர்க்கத் தாக்குதலை நடத்தியிருக்கும் இந்தச் சட்டங்கள் புதிய இந்தியாவின் எதார்த்தநிலையை, இந்த ஆட்சியானது, பெரு முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் சேவைக்காகவே இருந்து வருகிறது என்பதை நன்கு அம்பலப்படுத்துகிறது. நவீன தாராளமயத்தின் தாளத்திற்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடவடிக்கைகள் பல பத்தாண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங் களை இடித்துத்தரைமட்டமாக்கி இருக்கின்றன. இந்தத் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களும், இத்துடன் விவசாயிகளைக் கடுமையாகத் தாக்கக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களும் இணைந்து, தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் மிகக் கொடூரமான தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.

                                                                                                                                               **********************

தொழிலாளர் வர்க்கம் தன்மீது ஏவப்பட்டுள்ள இக்கடுமையான தாக்குதலுக்கு எதிராக, ஒன்றுபட்டும், இடைவிடாதும் தொடர்ந்து போராட அணியமாகி வருகின்றன. மத்தியத் தொழிற்சங்கங்கள் இவற்றுக்கு எதிராக விடுத்த அறைகூவல்கள்மீது நாடு முழுதும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களில் தொழிலாளர்கள் மிகப் பெருமளவில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இது தொடக்கம் மட்டுமேயாகும். இப்போதுள்ள நிலைமை, இவ்விரு தாக்குதல்களுக்கும் எதிராக வலுவான அளவில் தொழிலாளர் - விவசாயி ஒற்றுமையைக் கட்டிஎழுப்பிட அறைகூவல் விடுத்திருக்கிறது. தொழிலாளர்கள்-விவசாயிகள் போராட்டங்களை விரிவாக்கிடவும், அவற்றை உக்கிரமான முறையில் கொண்டு சென்றிடவும் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமையைக் கட்டி எழுப்பிடுவோம்.

===தமிழில்: ச.வீரமணி===

;