tamilnadu

img

பாகுபாடற்ற கல்வி எங்கே? எப்போது?

சமச்சீர்கல்வியை அமல்படுத்தக் கோரியும், கல்வி-சுகாதாரம் தனியார்மயம், நீட் தேர்வு, வகுப்புவாத மயமாக்கப்படும் கல்வித் துறை போன்றவற்றுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை அமல்படுத்தக் கோரியும் அதன் விழுமியங்களை பலப்படுத்தக் கோரியும் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் குரல் கொடுத்து வருபவர் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. ‘தீக்கதிர்’ நாளிதழுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல்: 

v சமச்சீர் கல்வி நடந்ததும் நடக்க வேண்டியவையும்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரியும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண வசூலை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்ற வலியுறுத்தியும் ‘இந்திய மாணவர் சங்கம்’ 2009 ஜூலை 14ஆம் தேதிகோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.இதில் மாணவர் சங்க உறுப்பினர்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இப்போராட்டங்களின் விளைவாக அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ‘தனியார் பள்ளி கட்டண ஒழுங்குமுறை சட்ட’த்தை ஆகஸ்ட் மாதத்தில் சட்டமாக இயற்றியது.அதைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கைவிட முயற்சித்தபோது, உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பலர் வழக்கு தொடர்ந்தார்கள். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம், மற்ற பாடத்திட்டங்களைவிட மேம்பட்டது என ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து குறிப்பிட்ட காலஇடைவெளியில் பாடத்திட்டத்தை தமிழக அரசு மேம்படுத்தவேண்டுமென்றும் வலியுறுத்தியது.இவ்வாறு பாடத்திட்டம் ஒன்றானது, பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வும் ஒன்றானது. ஆனால், சமமான கற்றல் வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் தப்பிக்கவும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் உயர்ந்தது என்றும் கற்பிதங்களை உருவாக்கவும் செய்தார்கள். தொடர்ந்து மெட்ரிக்குலேஷன் வியாபாரிகள், தங்கள் பள்ளிகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்ற ஆரம்பித்தார்கள். விளைவு, 2010இல் 250 சி.பி.எஸ்.இ. பள்ளிகளே இருந்த நிலையில், தற்போது 830 பள்ளிகளாக அவை அதிகரித்துள்ளன.

 v அரசுப் பள்ளிகளும்  அருகாமைப் பள்ளிகளே!

கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 12(ஊ)இன்படி பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவரின் பெயரை ஆன்லைனில் பதிவுசெய்தால் குடியிருப்புக்கு  அருகிலுள்ள ஐந்து பள்ளிகளின் விவரம் தெரியவரும். ஒருவேளை அக்குடியிருப்புக்கு அருகில் அதிகமான பள்ளிகள் இருந்தால், அதிலிருந்து ஜந்து பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்றவுடன் குலுக்கல் மூலமாக மாணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.ஒருவர் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் முதல் பள்ளியில் இடம் கிடைக்காவிடில், அடுத்தடுத்த பள்ளியென தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் இடம்கிடைத்துவிடும். எதிலும் இடம் கிடைக்கவில்லை என்றால்இரண்டாவது கவுன்சலிங்குக்கு அழைப்பார்கள். இவ்வாறு குடியிருப்புக்கு அருகில் தெரிவிக்கப்படும் பள்ளிகளின் பட்டியலில் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பதிவு செய்வதில்லை.இது ஏன் என அரசிடம் கேள்வி எழுப்பினால், “கல்வியுரிமை சட்டம் 12 (1) (உ) என்பது தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கான விதியே தவிர, அரசுப் பள்ளிக்கு அல்ல. அரசுப் பள்ளிகள் என்றால் எல்லோரையும் அதில் சேர்த்தே ஆக வேண்டும். அதனால், பட்டியலில் கொண்டு வரவில்லை” என்று சொல்வார்கள்.கேள்வி அதுவல்ல. வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிகளின் பட்டியலில் அரசுப் பள்ளிகளின் பெயர்களை அரசு ஏன் குறிப்பிட மறுக்கிறது? அருகமைப் பள்ளிகள் என வரிசைப்படுத்தி மக்களுக்குத் தெரிவிக்கும்போது அதில் அரசுப் பள்ளிகளை குறிப்பிடாதது எதைக் காட்டுகிறது என்றால், அரசும் அரசுப் பள்ளிகளை பள்ளிகளாகவே கருதவில்லை என்பதைத்தான்! உதாரணத்துக்கு, எல்லோருக்கும் ரேசன் கார்டுகொடுத்துவிடுகிறார்கள். ரேசன் கார்டு வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால்,ரேசன் கார்டு வேண்டும் என்று முடிவு செய்தீர்கள் என்றால், குறிப்பிட்ட ரேசன் கடையில்தான் பொருட்களைவாங்க முடியும். அதுபோல ஒவ்வொரு பகுதியிலும் அரசு,தங்கள் பள்ளிகளை அருகாமைப் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும். அப்போது எல்லோரும் பள்ளியில் சேர்ந்தாக வேண்டிய நிலை ஏற்படும்.

v தத்தெடுக்கும் திட்டமா? தாரைவார்க்கும் திட்டமா? 

1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம்உருவாக்கப்பட்ட நேரத்தில் கல்வி அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டது. புதிதாக விடுதலை அடைந்திருந்த இந்திய நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்கக்கூடிய வகையில் போதிய பொருளாதார வசதி இல்லை எனக் கூறப்பட்டதால் அரசின் பொருளாதாரம் மேம்பட மேம்படகல்வியை வழங்கும் பொறுப்பு முழுமையாக அரசின் வசம் இருக்க வேண்டுமென அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழிகாட்டியது. விடுதலை பெற்று 67 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். அப்படியென்றால் கல்வி அளிக்கும் பொறுப்பைஏன் தனியாருக்கு அரசு தாரைவார்க்க வேண்டும்? நிதிப் பற்றாக்குறை என்றால், அது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். கல்விக்காக வசூலிக்கப்படும் வரியை (ஊநளள) கல்விப் பணிகளுக்கு முழுமையாக செலவழிக்காது ஏன்? கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளை அதானி, அம்பானியிடம் தாரைவார்க்க முயல்கிறது மத்திய அரசு. அதே பாதையைப் பின்பற்றி மாநில அரசோ, தத்தெடுக்கும் திட்டத்தின் பெயரால் அரசுப் பள்ளிகளை, அதன் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வழிவகை செய்கிறது.  

v கல்வியைத் தீர்மானிக்கும் சந்தை

இன்று எல்லாவற்றையும்போல் கல்வியையும் சந்தைதான் தீர்மானிக்கிறது. மாநிலப் பாடத்திட்டம் கடந்த பத்தாண்டு காலத்தில் இரண்டு முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை சிறந்தது என முன்வைத்துப் பேசும் வாதம் அடிபட்டுப் போய்விட்டது. எனவே, சமச்சீர் கல்வி எதிர்ப்பாளர்கள் இப்போதுபுதிய வியூகத்தை வகுக்கின்றனர். ஒரு மாணவனோ மாணவியோ பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துப் பெற்ற மதிப்பெண்ணை கணக்கில்எடுக்காமல், தகுதித்தேர்வின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையைத் தீர்மானிக்கும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. விளைவு, மருத்துவம் படிக்க நீட் தேர்வுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில அரசும் நீட் தேர்வுக்கான ‘பாடத்திட்டம்’, ‘பாடநூல் ‘ என வெளிப்படையாக பாடத்திட்டத்தை உருவாக்கிவருகிறது. 

இது மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டமா? அல்லது நீட் தேர்வுக்கான பாடத்திட்டமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஏனெனில் 16, 17வயதுக்குரிய மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை கற்றுத் தராமல் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை ஏன் கற்றுத் தர வேண்டும்? கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மேல்நிலைக் கல்வியில் 15 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. மேலும் இத்தகைய செயல்பாடுகள் அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில், ஆசிரியர் துறைகளில் துறைசார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதில் பெரும் பின்னடைவை எதிர்காலத்தில் உருவாக்கும். 

v செய்யவேண்டியது என்ன?

உலகம் போற்றும் பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய அரசு, மாநகராட்சி பள்ளிகள் மக்களின் வரிப்பணத்தாலும், பல்வேறு தரப்பினரின் தியாகங்களாலும் உருவாக்கப்பட்டவை. இப்பள்ளிகளில் இப்போது சில வசதிக் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், கற்றல் செயல்பாடுகளில் அரசுப் பள்ளிகள் இன்றும் சிறந்து விளங்குவதை யாராலும் மறுக்கமுடியாது.  அரசுப் பள்ளிகளின் புவியியல் எல்லையை வரையறுத்து அருகமைப் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும். ஒரு பள்ளியில் எதெல்லாம் இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளதோ, அவையனைத்தும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாய்மொழி வழியில் கல்வி வழங்கி ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை மாணவர்கள் கற்கும் வாய்ப்பைஉருவாக்கிட வேண்டும். இதற்கான மக்கள் இயக்கத்தைக் கட்டமைத்து கல்வி மேம்பாட்டுக்கு வழிவகை செய்யவேண்டியதே ஜனநாயக அமைப்புகளின் முன் உள்ள முதன்மையான பணி. அரசுப் பள்ளிகள் சமூகத்தின் சொத்து! பாகுபாடற்ற கல்வி அரசுப் பள்ளியில் மட்டுமே சாத்தியம்.



;