tamilnadu

img

பள்ளி திறக்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

திண்டுக்கல்:
ஜூன் மாதம் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு, பல்வேறு சூழலில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வர இருக்கும் குழந்தைகளின் மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. அச்சத்திலும், பதற்றத்திலும் இருக்கும் குழந்தைகள் நேரடியாகத் தேர்வு மையத்திற்கு வரச் சொல்வது ஒரு நியாயமற்ற நடவடிக்கை.கற்றலுக்கு அடிப்படை மாணவர்களின் மனநிலை ஆகும். லட்சக்கணக்கான குழந்தைகள் சாமானியர்களின் குழந்தைகள் ஆகும். ஒரு மாதத்திற்கும் மேலாக வருமான இழப்பையும், அது சார்ந்த நெருக்கடிகளையும் குடும்ப கஷ்டத்தையும் வீட்டுக்குள்ளேயே முடங்கி எதிர்கொண்டுவரும் குழந்தைகள் உடனடியாக தேர்வுக்கு தயாராக முடியாது. 
குறிப்பாகப் பள்ளி திறந்து குறைந்தது 15 வேலை நாட்கள் வகுப்பு நடந்த பின்பே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டும். பள்ளிகள் திறப்பதிலும் தேர்வுகள் நடத்துவதிலும் அவசர போக்கை கைவிட வேண்டும். புதிய புதிய அறிவிப்புகளால் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பதற்றம் அதிகரிக்கிறது என்பதை உணர வேண்டும்.பத்தாம் வகுப்பில் படிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை வாய்ப்பின்றி இடம் பெயர்ந்த குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் கணக்கெடுப்பை போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, அவர்கள் பொதுத் தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்.

இணையதள கல்வி
சுயமாக கற்றல் என்பது கல்லூரி மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும். கணினியிலோ செல்பேசியிலோ வகுப்பை எதிர்கொள்ளும் மனநிலையானது பள்ளி குழந்தைகளுக்கு  ஒரு கற்றல் வழிமுறையாக இருக்கலாமே தவிர முழு கற்றல் முறையாக மாறிவிடக் கூடாது. முறையான கற்றல் அனுபவத்தை பெற்றவர்கள் இதுபோன்ற பரிந்துரைகளை செய்ய மாட்டார்கள். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தை பயன்படுத்துவதற்கு இவை பயன்படுமே அன்றி அதையே தீர்வாக கருதிடக் கூடாது. 
இணையதள வழிக்கற்றல் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பைத் தருவது இல்லை. பாகுபாடு உடையது. இருப்பவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறவும், இல்லாதவர்கள் பின் தங்கி நிற்கவும் செய்துவிடும், குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், இணையதள வகுப்பறை கற்றலுக்கு உதவியாக இருக்கலாம். வகுப்பறை கற்றலுக்கு மாற்றாக கருத இயலாது.தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது வேறு. பேரிடர் காலத்தில் அதைப் பயன்படுத்தி வகுப்பு நடத்துவது, பாட வேளையாக அதைக் கருதுவது என்பது வேறு. பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்பிற்கு மாற்றாக இணையதள வகுப்பு நடத்தப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. இணையதள வழியில் வகுப்பு நடத்தப்படுவதைப் பாடத்திட்ட வேலை நாளாக அங்கீகரிக்க இயலாது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் உள்ள மத்தியப் பாடத்திட்டப் (CBSE/ ICSE) பள்ளிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகள் இணையதள வழியாக வகுப்புகள் நடத்துவதையும் அதை வேலை நாட்களாகவும், கற்றல் கற்பித்தல் நாட்களாகவும் கருதக் கூடாது. இது போன்ற நிகழ்வுகளை உடனடியாக நிறுத்தத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளிகளும் இத்தகைய வகுப்பு நடத்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி பெற்றோரை இணையதளவகுப்பிற்கான கருவிகளைப் பெற்றுத்தர வற்புறுத்தக் கூடாது. வசதி உள்ள குழந்தைகள், வசதி அற்ற குழந்தைகள் இருவருக்கும் சமமான கற்றல் சூழலை உருவாக்க வேண்டிய அரசு, சுகாதாரப் பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் கட்டாயப்படுத்தி இணையதள வகுப்பு நடத்துவது குழந்தை உரிமை மீறல் சமமற்ற கல்வியியல் நடவடிக்கை ஆகும்.

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளிக்கு வரும் குழந்தைகள் உடல் நிலை, மனநிலை, பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் கொண்டே பள்ளிகளை திறக்க வேண்டும். நோய்ப் பரவலுக்கான அதிக வாய்ப்புள்ள சூழல் இருப்பின் குழந்தைகளின் உயிரை முக்கியமாக கருதியே காலச்சூழல் சாதகமான பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்.வழக்கமாகவே விஜய தசமி வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தாமதமாக சேரும் மாணவர்கள் கற்றல் திறன்களை அடைந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எனவே பள்ளிகளை துவக்குவதில் அவசரம் காட்டக் கூடாது.

பாதுகாப்பு
அ)மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விலையின்றி முக கவசத்தை அரசே வழங்க வேண்டும். பள்ளி சீருடைகளுடன் இணைத்து இவற்றையும் வழங்க வேண்டும். இதற்கான தயாரிப்பு பணிகளை இப்போதே கேரள மாநிலம் துவங்கியுள்ளது. அதேபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான கிருமிநாசினி போன்றவற்றை அரசே வழங்க வேண்டும், கிருமிநாசினி விலை அதிகமாக இருக்குமேயானால் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்களை கூட பள்ளிகளில் பயன்படுத்தலாம்.
ஆ) பள்ளிகளில் 15 நாட்கள் இடைவெளியில் கப சுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

வேலை நாட்கள்
கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மாநிலத்தில் உள்ள நிலையையும் கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தல் பாதிக்காத வகையில் முடிவுகளை மேற்கொள்ளவும் தேர்வுகளை திட்டமிடவும் மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும்.வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் வகுப்புகளில் போதிய இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்வதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும்.கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் சில வகுப்புகளுக்கு காலை எட்டு முப்பது மணி முதல் 12 மணி வரையிலும், சில வகுப்புகளுக்கு பிற்பகல் ஒரு மணி முதல் நான்கு முப்பது மணி வரையிலும் வகுப்புகளை பிரிக்கலாம். அதேபோல் ஒற்றைப்படை வகுப்புகள் ஒருநாளும் இரட்டைப்படை வகுப்பில் மறுநாளும் என்று பள்ளிகள்  செயல்படலாம். அதே நேரம் கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்கள் எதிர் கொள்ளாத அளவிற்கு போதிய திட்டமிடலுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிகளில் நெருக்கடிகளை தவிர்ப்பதோடு கழிப்பறை நேரம் ,உணவு இடைவேளை நேரமும் கூட்டம் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே வகுப்பு வாரியாக கால அவகாசம் கொடுத்து இடைவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பள்ளி வளாகத்தில் இரண்டு நுழைவாயில் இருப்பதை உறுதி செய்யலாம். கணினி ஆய்வகங்கள் 4 அடி இடைவெளி விட்டு மாற்றியமைக்க வேண்டும்.  உள்ளூர் சுகாதார துறைகளின் ஒத்துழைப்போடு வாரம் ஒரு முறை மருத்துவ சோதனைகள் சுகாதார நடவடிக்கைகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். மாணவர்களுக்கு சிறிது காலத்திற்கு புத்தகப்பை கொண்டுவருவதில் இருந்து விலக்கு அளிக்கலாம்.

பேட்ரிக் ரெய்மாண்ட்,பொதுச்செயலாளர்,  
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

;