tamilnadu

img

பெண் கல்வியைப் பின்னுக்கு இழுக்கும் கொள்கை! -நா.முத்துநிலவன்

30-7-1886அன்று புதுக்கோட்டை திருக்கோ கர்ணத்தில் பிறந்து முதல் பெண் மருத்துவரான – கல்வியால் உயர்ந்த - அன்னை முத்துலட்சுமியின் பிறந்தநாளில் பெண்கல்விச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பற்பல போராட்டங்களால் முன்னேறி வந்திருக்கும் பெண் கல்வியை அழிக்க இப்போது வந்திருக்கும் “தேசிய கல்விக்கொள்கை 2019- வரைவு” அறிக்கை திட்டமிடுவதால் அதுபற்றிப் பேசவேண்டியதும் அவசியமாகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போதுதான் பெண்கள் படிக்கவும், வேலைக்குப் போகவும் விதவைகள் மறுமணம் செய்யவும், சட்டம் வந்ததோடு உடன்கட்டையேற்றம் முதலான கொடுமை ஒழிப்புக்கும் சட்டம் வந்தது. ஆனால், இதற்கே சனாதனிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.   வரலாற்றின் பெரும் பகுதியில், அனேக சமூகங்க ளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பைப் பெறவில்லை 19 , 20 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற  பெண்விடுதலை இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புக்களை ஓரளவு ஏற்படுத்தித்தந்தன.

பெண்கல்விக்காகப் பெருந்தொண்டு செய்தவர் சாவித்திரிபாய் பூலே. தன் இணையர் ஜோதிராவ் பூலேயுடன் இணைந்து, பெண்கல்விக்கென இந்தியாவின் முதல் பள்ளியைப் பூனேயில் 1848இல் ஏற்படுத்தி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் திகழ்ந்தார். அவரது பெயரில் இப்போது “சாவித்திரி பாய் பூலே பல்கலைக்கழகம்” பூனேயில் இயங்கிவருகிறது. 1882ஆம் ஆண்டு படித்த பெண்களின் விழுக்காடு வெறும் 2%தான்!  இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்த சராசரி 12%ஆக உயர்ந்த போதும் பெண்கல்வி 6%ஆகவே இருந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், மேல்வர்க்கக் குடும்பத்துப் பெண்களாகவே இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. சுதந்திர இந்தியாதான் பெண்களைப் படிக்க வைத்தது.  அதிலும் அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியல் சட்டம்தான் பெண்கல்வி, பெண்ணுரிமைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 1952இல் சென்னை மாகாணக் கல்விக்குழுவின் முன்பாக, தந்தை பெரியாரும் கோவை ஜி.டி.நாயுடுவும் நேரில் சென்று பெண்கல்வியின் அவசியத்தை வலி யுறுத்தி, பெண்களுக்கென தனியான பள்ளி, கல்லூரிகள் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியக் கல்விச் சராசரி 74 விழுக்காடாக இருந்தபோதி லும் இதில் பெண்கல்வி விழுக்காடு 65தான்! ஆண்கள் விழுக்காடு 84. இன்னும் பெண்கல்வி எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது!

சமீப காலமாக -சுமார் 30ஆண்டுகளாக- தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம் தேர்வுச் சராசரியை வெளியிடும் செய்தித்தாள்கள், “வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது” என்னும் செய்தியை வெளியிட்டு வருவதை நாம் அனைவரும் பார்த்து மகிழ்ந்தி ருக்கிறோம். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்று சந்தேகம் தர வந்திருப்பதுதான் தேசிய கல்விக் கொள்கை-2019 வரைவுஅறிக்கை!     பெண்கள் படிப்பதும் வேலைக்குப்போவதும் தவிர்க்க முடியாத அம்சமாக இன்று கருதப்படுகிறது.  ஆனால் வேலைக்குப் போகும் பெண்களில் பத்து விழுக்காடு பெண்கள் நடத்தை கெட்டவர்களாகிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரி சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டதை நாமறிவோம் இதுதான் மதம், அதிலும் வைதீக மதம் பெண்ணடிமையில் ஊறியது என்று நாம் சொல்வதற்கான நற்சான்று!                                                                                                         அண்மையில், சந்திரயான்-2 ஏவப்பட்டதில் இரண்டு பெண்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ரிது, வனிதா எனும் இரண்டு விஞ்ஞானிகளால்தான் இந்தச் செயற்கைக் கோளின் ஆணைகளும் நிர்வகிக்கப்படும். ரிது இந்தத் திட்டத்தின் இயக்குநர் (மிஷன் டைரக்டர்), வனிதா வடிவ மைப்பாளர் என்பது நாமெல்லாம் பாராட்டத் தக்க செய்தி யல்லவா? இது தொடர வேண்டாமா? ஆனால், இப்போது வந்திருக்கும் கல்விக்கொள்கை கூறுவதென்ன?

“பெண்களுக்குக் கல்வியை எளிதாகப்  பெறச்செய்வதே வறுமையை ஒழிக்க மற்றும் வன்முறையை ஒழிக்கவும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நல்வாழ்விற்கான தடை களை நீக்கவும் அடுத்த தலைமுறைகளை மேம்படுத்தவும் உள்ள தெளிவான பாதையாகும். எனவே இந்திய சமுதா யத்தை முன்னேற்றுவதற்கு பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே முக்கிய உத்தியாகும்” (தே.க.கொ.வரைவு-6.2) அட அட என்ன ஒரு தீர்க்க தரிசன வார்த்தைகள் என்று நாம் மகிழ்ந்து கொள்ளலாம், சந்தேக மில்ல! ஆனால் அதற்கான திட்டம் என்ன என்பதில் தான் இடிக்கிறது கொள்கை விளக்கம்! 3,5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு களால் பொதுத்தேர்வு நடத்தப்படும் (தே.க.கொ.வரைவு-4.9.4) பிறகு, 9ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைக்கப்பட்டு ஆண்டுதோறும் இரண்டு  பருவத்தேர்வுகள் மொத்தம் எட்டு, ஒவ்வொரு பருவத் தேர்விற்கும் மூன்று பாடங்கள் வீதம் 24தேர்வுகள் நடத்தப்படும் (தே.க.கொ.வரைவு-4.9.5)

ஆயிற்றா? ஏற்கெனவே வாய் கோணலாம்! இதுல கொட்டாயி வேறயா? என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். பரிட்சைகளைக் கண்டுபயந்துதான் நமது பிள்ளைகள் பள்ளியை விட்டுஓடுகிறார்கள் என்று இப்போதுதான் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சிக்கான தேர்வு இல்லை என்று உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் இவர்கள் 3,5,8வகுப்புகளில் மாநில அரசு (தன் பொறுப்பிலோ, தனியார் பொறுப்பிலோ) நடத்தும் தேர்வுக ளால் எத்தனை லட்சம் எழுதப்படிக்க அறியாத சரஸ்வதிகள் நாட்டில் உலவ போகிறார்களோ தெரியவில்லை! இதில் ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகிறது- அதாவது “தேர்வு இருந்தால்தான் பசங்க படிக்கிறார்கள்” என்பதுஒரு சமாளிப்பு. தேர்வில் 35 மதிப்பெண்ணுக்கும் 34 மதிப் பெண்ணுக்குமான அறிவுவேறுபாடு என்ன வந்துவிடப் போகிறது என்பதொன்று கிராமத்தில் அறியாசனங்கள் இன்னும் “புள்ள ஃபெயிலாயிருச்சு, இனிமேல எதுக்குப் படிக்க வச்சிக்கிட்டு, சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணி விரட்டி விட்றப் போறேன்” என்று சொல்வது,  பெண்கல்விக்கு வைக்கும் கொள்ளியே அன்றி வேறென்ன?

சரி இது ஒரு பெரும் சிக்கல் என்றால், சமாளித்து படித்து முன்னேற நினைத்து படிப்பைத் தொடரும் பெண்பிள்ளை, ஆண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தரப்போகும் கதை களை நினைத்தால் கதை கந்தலாகிறது! “குழந்தைகள் பஞ்சதந்திரம், ஜாதகா, இதோபதேசம் போன்றவற்றை இந்தியக் கலாச்சாரம் மூலம் கற்றுத் தரப்படும்” (தே.க.கொ.வரைவு-4.6.8.7) என்ன கதைக ளாம்? அறத்தைப் போதிக்கும் திருக்குறள் கதைகளை அல்லவாம்! “வஞ்சகமாக எப்படி ஜெயிப்பது என்பதை மட்டும் பார்! அறமாவது மண்ணாங்கட்டியாவது” என்றே “நல்ல” வழிகளைத் தந்திரமாகச் சொல்லித் தரும் “பஞ்ச தந்திரக் கதைகள்” குழந்தைகளின் மனதில் குரூரத்தையே வளர்க்கும். அதிலும் தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓரளவு சிறந்தி ருக்கும் மாணவர் கல்வி நிலையைப் பற்றி அறியாத நிலையில், பாடப்புத்தகங்களைக் குறைந்த விலையில் தரப்போகிறதாம் இந்தக் கல்விக்கொள்கையை வழங்கிய மத்திய அரசு! இதைக் கண்டு சிரிப்பதா அழுவதா தெரிய வில்லையே? இதோ பாருங்கள்:

“புதுமையான பாடப் புத்தகங்கள் பொது மற்றும் தனியார் கொள்கைகள் வழி வகுக்கப்பட்டு, ஆசிரியர்க ளுக்கும் மாணவர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்” (தே.க.கொ.வரைவு-4.8.5) தேர்வு தேர்வு தேர்வு என்று அச்சமூட்டும் தேர்வு முறையே போதாது என்று “என்ட்ரி தேர்வு” மற்றும் “எக்ஸிட் தேர்வு” என்பதென்ன? அதாவது 3,5,8, மற்றும் 8முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரையான அத்தனை தேர்வுகளிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி தேர்ச்சியடைந்து விட்டாலும், அதற்குமேல் நேரடியாகக் கல்லூரி வகுப்பில் நுழைந்துவிட முடியாத படி –மருத்துவக் கல்விக்கு நீட் போல –அனைத்துக் கல்லூரி நுழைவுக்கும் ஒரு என்டிஏ தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டுமாம். அதிலும் தேர்ச்சி பெற்று கல்லூ ரிக்குப் பணத்தைக் கொட்டிச் சேர்ந்து படித்து முடித்தாலும் பிறகும் ஒரு “எக்ஸிட்” தேர்வு எழுதித்தான் வெளியே வரமுடி யுமாம்! என்னாங்கடா இது என்கிறீர்களா? இதுதாங்க புதிய தேசிய கல்விக்கொள்கை-2019! இப்போது, மீண்டும் அன்னைமுத்துலட்சுமியின் கல்வி மேன்மைக்கு வருவோம். 

ஆண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கூண்டு வண்டி வைத்துக் கொண்டு, முகத்தை மறைத்துக் கொண்டு, முதன் முதலாக கல்லூரிக்கு வந்து படித்த பெண் என்ற பெருமையை அவர்தான் போராடிப் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் மாணவி யாக இவ்வாறே சேர்ந்து, அவர்தான் மருத்துவக் கல்விபெற்ற முதல் மாணவி என்ற பெருமையும் பெற்றார். இந்தக் கல்வியால் அவருக்குக் கிடைத்த பெருமை என்ன தெரியுமா? அன்றைய சென்னை மாகாண முதல்வரின் மகன் சுந்தர் ரெட்டியே வந்து பெண் கேட்ட போதிலும், (1)தொடர்ந்து மருத்துவராகப் பணிபுரிய வேண்டும், (2)தனது சுதந்திர மான பெண்கல்வி வளர்ச்சிப் பணிகளைத் தொடர வேண்டும். மற்றும் (3)சுயமரியாதைக்கு குறைவு வரும்படி நடக்காதிருக்க வேண்டும் என்பதான உறுதி மொழிகளைப் பெற்ற பின்னரே அவரை மணக்க முன்வந்து அவ்வாறே வாழ்ந்தார்.

அவரது பெருமைகள் சொல்லி மாளாது! இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் முதலான அவரது பெருமை கள் அனைத்துக்கும் அடிப்படை அவரதுகல்வி சட்டமன்றத் தில் சண்டமாருதம் செய்யும் –அவரது புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சகாவான – திருமயம் சத்திய மூர்த்தியைக் கண்டு அனைவரும் அஞ்சிக் கிடக்க, இவர் கேட்ட கேள்வியில் அவரே அசந்து வாயடைத்த சம்பவமும் நடந்தது. அதுவும் அன்னை முத்துலட்சுமி கற்ற கல்வியால்தான் என்பது அந்தக் கல்விக்கே பெருமை! இப்போது, இன்றைய முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்த நாளில், அம்மையார் போலப் பெண்களை நாம் படிக்க வைக்கப் போகிறோமா? அல்லது பொதுவாகவே ஏழைக் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளிலிருந்து விரட்டி குலத்தொழிலுக்கு விரட்டும், குறிப்பாக கிராமத்துப் பெண் குழந்தைகளின் கல்வியைப் பறித்து, “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைக்கும்” பண்டைய வேதகால இருட்டில் பெண்களைத் தள்ளப்போகிறோமா? என்பதுதான் நம் முன் நிற்கும் கேள்வி! 

கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்

;