tamilnadu

img

சத்யபால்ஜி, ஒருவரையும் உயிருடன் விடமாட்டோம்.... தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே - 7

முதல்தகவல் அறிக்கை 57ல் குற்றம்சாட்டப்பட்ட ஆலம் மற்றும்இதரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம், அவர்கள் சஞ்சார் சிக்கன் கார்னர்க்கு தீ வைத்து கொளுத்தியதாக - ஆனால், அதனை எப்.ஐ.ஆரில் “பஞ்சாபி சிக்கன் கார்னர்” என சித்தரித்துள்ளனர். அந்த கடையின் உரிமையாளர் மும்தாஜ் அந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பதை அதன் சூழ்நிலைகளையும் விளக்குகிறார். அவர் சொல்லும் தகவல்கள், தில்லி காவல்துறையின் செயல்பாடு குறித்து பல சங்கடமான கேள்விகளை எழுப்புகின்றன.

2020 பிப். 23, ஞாயிற்றுக்கிழமையாதலால் கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்கிறார் மும்தாஜ். “நான் எனதுகடையிலிருந்து பார்த்த போது  150 மீட்டர்தொலைவிலிருந்த ஷெர்பூர் சவுக் பகுதியில் சுமார் 300-400 பேரடங்கிய கும்பல் ஒன்று ஜெய்ஸ்ரீராம் என்றும் மோகன் சிங் பிஷித் ஜிந்தாபாத் என்றும் கபில் மிஸ்ரா ஜிந்தாபாத்” என்றும் முழக்கங்களுடன் வந்து கொண்டிருந்தது.இரவு 8 மணி அளவில், அந்த இடத்திலிருந்து ஒரு கூட்டம் வந்து என் கடையை நோக்கி கற்களை வீசத் தொடங்கியது. மும்தாஜ் தொடர்ந்து கூறுகையில், “ என் கடை சிப்பந்திகளும் நானும்மேசைகளின் கீழே பதுங்கி எங்களை தாக்குதலி லிருந்து காத்துக் கொண்டு பின்பக்க வழியாக தப்பித்தோம். அப்போது சிலர் ஆயுதங்களுடன் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எனது சகோதரரே அதனை முதலில் கண்டார், எனது சிப்பந்திகள் கண்டனர், அவர்கள் அனைவரும் அது குறித்து சாட்சியம் தெரிவிக்க தயாராகஇருக்கின்றனர்”. “அவர்களின் கைகளில் கைத்துப்பாக்கிகள், பட்டா கத்திகள், லத்திகள், இரும்பு கம்பிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியஎல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன. 

நான் பின் வாசல் வழியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த போது அவர்கள் என்னுடைய கல்லா பெட்டியை சூறையாடிக்கொண்டிருந்த னர். நான் உள்ளே சென்று அவர்கள் பணத்தைஎடுப்பதை தடுக்க முயன்ற போது அவர்கள் கைதுப்பாக்கியை என் தலையில் வைத்தனர். அந்த கும்பல் அவர் கடைக்கு இரவு 10 மணி வாக்கில் தீ வைத்தனர்.”

“நான் அன்று இரவு அவசர போலீஸ் உதவிஎண்ணான 100க்கு குறைந்தபட்சம் 100 முறையாவது தொடர்பு கொண்டிருப்பேன்”. “எனது சகோதரர்களும் தொடர்பு கொண்டனர். ஆனால்எங்களுடைய அழைப்பு ஏற்கப்படவில்லை. தொடர்பு கிடைத்த போது நாங்கள் அவர்களை விரைவாக வரும்படியும் மிகப்பெரிய கும்பல் அங்கிருப்பதாகவும் தெரிவித்தோம். காவல் துறையும், தீயணைப்பு துறையும் கடை முழுவதும் எரிந்து முடிந்த பிறகே வந்தனர்.” - இப்படி விரிவாக விவரிக்கிறார் மும்தாஜ்.
அன்றிரவு இரண்டரை மணிக்கு ஒரு காவல் அதிகாரி மும்தாஜ் வீட்டிற்கு வந்து இந்தவழக்கின் விசாரணை அதிகாரியாக வேறொரு அதிகாரி (அவரது பெயர் ஹூக்கும் சிங்) நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். உடனடியாக தயால்பூர் காவல் நிலையம் சென்று அங்குஹூக்கும் சிங்கை சந்திக்குமாறு தெரிவித்தார். ஆனால், மும்தாஜ் அந்த காவல் நிலையம் சென்றபோது ஹூக்கும் சிங் தான் ஒரு கூட்டத்தில் உள்ளதாகவும், மறுநாள் தன்னை வந்து சந்திக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிப். 24 காலை 10 மணிக்கு தயால்பூர் காவல்நிலையத்தின் அன்றைய தினத்தில் அதிகாரியான தாரகேஷ்வர் சிங்கிடமிருந்து மும்தாஜூக்கு அழைப்பு வந்தது. காவல்நிலைய அதிகாரிமும்தாஜிடம் அவருடைய கடையின் சாமான்கள் கடைக்கு வெளியே சாலையில் கிடப்பதாகவும், அதனை அவர் உடனே வந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அவர் எடுக்கவில்லை என்றால் அவை அப்புறப் படுத்தப்படும் என்று தெரிவித்ததாக மும்தாஜ் கூறுகிறார். மும்தாஜ் தனது கடைக்கு சென்ற போது அங்கு காவல் நிலைய அதிகாரி மற்றும்இதர காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்த தாக தெரிவிக்கிறார்.

மும்தாஸ் அங்கிருக்கும் போது நடந்தவைகளை விளக்குகிறார்: ஒரு காவல் அதிகாரி தாரகேஸ்வர் சிங்கிடம் சென்று, “ஐயா, நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால்சிங்ஜி யிடமிருந்து அழைப்பு”என்று  தெரிவித்தார். சத்ய பால் சிங், அரசியலில் பாஜக வில் இணைவதற்கு முன்பாக மும்பை நகர போலீஸ் கமிஷனராக இருந்தவர். மும்தாஜ், தாரகேஸ்வர் சிங் போனில் பேசியதை நினைவு கூர்ந்து,“ஆகட்டும் சத்ய பால் ஜி, இன்று ஒருவரைக்கூடஉயிருடன் விட்டு வைக்க மாட்டோம்” என்றதாக தெரிவிக்கிறார்.சத்ய பால் சிங்குடன் பேசிய பிறகு தாரகேஸ்வர் அந்த இடத்தைவிட்டு அகன்றதாக மும்தாஜ் தெரிவிக்கிறார். அவர் அங்கிருந்து விலகியதும், ஒரு கும்பல் ஷெர்பூர் சவுக் கிலிருந்து அங்கு பகுதியை நோக்கி முன்னேறி வந்தது. அந்த கும்பலில் இருந்தவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளம் கூறுகிறார் மும்தாஜ், அவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எனவும் அவர் அடையாளம் சொல்கிறார். “அவர்கள் ஒவ்வொருவரையும் எனக்கு அடையாளம் தெரியும்” என்கிறார்.

அந்த கும்பல் அந்த பகுதியில் இருந்த வணிகநிறுவனங்களில் முஸ்லீம்களால் நடத்தப்படும் கடைகளின் பூட்டுகளை உடைத்து சூறையாடியது. “அவர்கள் (மெக்பூல் கடையின் பூட்டை உடைத்து, மெக்பூல் மோட்டார் மெக்கானிக் அவர் முஸ்லீம்) அவரது கடையிலிருந்த அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் திருடிக்கொண்ட அவர்கள் அதன் பிறகு அந்த கடைக்கு தீவைத்தனர்.” என்றார் மும்தாஜ்.மார்ச் 2 ஆம் தேதி மும்தாஜ் மீண்டும் தயால்பூர்காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்யமுயன்றார். அவர் புகாரில் அந்த கும்பலில்வந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பதிவுசெய்ய கோரியபோது காவல்துறை அந்த புகாரை வாங்க மறுத்துவிட்டது. அதிலுள்ள பெயர்களை நீக்கிவிட்டு அந்த கும்பல் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டு தனது கடையை தீயிட்டு கொளுத்தியதாக புகாரை மாற்றி எழுதிக் கொடுத்தார். அந்த புகாரையும் அவர்கள் வாங்க மறுத்து,அடையாளம் தெரியாத நபர்களால் தனது கடைதீ வைக்கப்பட்டது என மட்டும் எழுதித் தர சொல்லி அந்த புகாரையே பெற்றுக் கொண்டனர்.

....பிரபி ஜித் சிங், அர்சு ஜான்...

தமிழில்: க.ஆனந்தன்

===தொடரும்===


 

;