tamilnadu

img

பன்மை உலகைப் பாதுகாப்போம்... ஜீ ஜின்பிங் (ஜனாதிபதி - மக்கள் சீன குடியரசு)

(ஐக்கிய நாடுகள் சபையின் 75வது அமர்வு இணைய வழியாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் பொது விவாத நிகழ்வில் செவ்வாயன்று பங்கேற்று பெய்ஜிங்கிலிருந்து காணொலி வாயிலாக மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உரையாற்றினார். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரை இங்கு தரப்படுகிறது)

இந்த ஆண்டு, பாசிசத்திற்கு எதிரான உலகப் போரின் மாபெரும் வெற்றியின் 75ஆம் ஆண்டையும், அதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதையும் குறிக்கிற ஆண்டாகும். பாசிசத்திற்கு எதிரான உலகப்போரின் படிப்பினைகளையும் வரலாற்று அனுபவங்களையும் கவனத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களும் கோட்பாடுகளும் அடங்கிய ஐநா சாசனம் உருவாக்கப்பட்டது; அந்த சாசனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறோம். 

வைரஸ் நிச்சயம் வீழ்த்தப்படும்
மனிதகுலமாகிய நாம் இன்றைக்கு கோவிட் 19 என்ற, உலகையே உலுக்கியிருக்கிற, இப்போதும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிற வைரசுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில், அரசாங்கங்களின் முயற்சிகளை, மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை, விஞ்ஞானிகளின் அயராத உழைப்பை, உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்களின் உறுதிமிக்க கட்டுப்பாட்டினை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல்வேறு நாடுகளின் மக்கள் இந்த மாபெரும் போராட்டத்தில் ஒன்றிணைந்திருக்கிறோம். இருள் சூழ்ந்த தருணத்தை நமது துணிச்சலாலும் தீர்மானகரமான உணர்வாலும் பொறுமையான நடவடிக்கைகளாலும் ஒளிமிக்கதாக மாற்றுவதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய பேரழிவிற்கு எதிராக மோதிக் கொண்டிருக்கிறோம். இந்த வைரஸ் நிச்சயம் வீழ்த்தப்படும். இந்தப் போரில் மனிதகுலம் நிச்சயம் வெற்றிபெறும்.

கோவிட் 19 வைரஸை எதிர்கொள்ளும் இந்தப் போராட்டத்தில் நாம் மக்களையும் அவர்களது வாழ்வையும் முதன்மையாக முன்னிறுத்த வேண்டும். அறிவியல் பூர்வமான மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்து வளங்களையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். ஒரு நோயாளி கூட சிகிச்சை அளிக்கப்படாமல் விடுபட்டுவிடக்கூடாது. வைரஸ் தொற்று பரவல் நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆதாயம் தேடும் முயற்சி கூடாது
இந்த வைரஸை எதிர்கொள்ளும் போராட்டத்தில், நாம் ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் ஆதரவுடனும் செயல்பட வேண்டும். அறிவியலின் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். உலக சுகாதார அமைப்பு முதன்மைப் பங்கு வகித்து செயல்பட விட வேண்டும். சர்வதேச அளவில் தொற்று பரவலை முறியடிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாறாக, இந்தப் பிரச்சனையை அரசியலாக்குவதற்கு முயற்சிப்பதோ அல்லது அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிப்பதோ முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

- இந்த வைரஸை எதிர்கொள்ளும் போராட்டத்தில் நாம் நீண்டகால அடிப்படையிலான ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும். முறைப்படுத்தப்பட்ட வழிகளில் நமது வணிகங்களையும், பள்ளிகளையும் மீண்டும் திறந்திட வேண்டும். நாம் வேலைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது; சரிந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்க வேண்டியிருக்கிறது; சமூக ஒழுங்கை மீண்டும் நிறுவவேண்டியிருக்கிறது; அதன் அடிப்படையான இயக்கு சக்தியை மறுகட்டமைப்பு செய்யவேண்டியிருக்கிறது. 

- உலகின் பெரிய பொருளாதாரங்களாக இருக்கக்கூடிய நாடுகள் பெரிய (macro) பொருளாதாரக் கொள்கையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டிய தேவைஇருக்கிறது. நாம், அவரவர் சொந்த பொருளாதாரங்களை மட்டும் மீண்டும் இயக்குவது என்ற நிலைக்குச் செல்ல முடியாது, மாறாக ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கிறது.

- இந்த வைரசை எதிர்கொள்ளும் போராட்டத்தில், வளர்முக நாடுகளின் தேவைகளை, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கடனிலிருந்து நிவாரணம், சர்வதேச உதவிகள் போன்ற நடவடிக்கைகளை உரிய காலத்தில் சர்வதேச சமூகம் இவர்களுக்கு மேற்கொள்ள வேண்டும்; நீடித்த வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதையும் வளர்முக நாடுகள் தங்களது கடினமான நிலையிலிருந்து மீண்டு வருவதையும் உறுதி செய்ய வேண்டும்.

உலகமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வோம்
75ஆண்டுகளுக்கு முன்பு, பாசிசத்திற்கு எதிரான உலகப்போரில் மகத்தான வெற்றி பெறும் பொருட்டு சீனா வரலாற்றுப் பூர்வமான பங்களிப்புகளைச் செய்தது; ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதிலும் ஆதரவு அளித்தது. இன்றைக்கு அதே விதமான பொறுப்புணர்வுடன், கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலுக்கு எதிரான சர்வதேசப் போரில் சீனா செயலூக்கத்துடன் பங்கேற்றிருக்கிறது; உலக பொது சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தனது பங்கினை செலுத்துவதில் முனைப்புடன் இணைந்திருக்கிறது.
 

;