tamilnadu

img

பிரதமர் உரை - சொன்னதும் மறந்ததும்!

பிரதமர் மோடி 30.06.2020 அன்று நாட்டு மக்க ளிடம் 6 வது முறையாக 16 நிமிடம் பேசினார். அந்த உரையின் சில முக்கிய கூற்றுகள்:

 5 கிலோ உணவு தானியங்களும் ஒரு கிலோ பருப்பும் நவம்பர் மாதம் வரைக்கும் நீட்டிக்கப்படும் என கூறிய மோடி அதற்கு காரணம் பல பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கின்றன என பட்டியலிட்டார்.  குரு பூர்ணிமா/ ரக்சா பந்தன்/ கிருஷ்ணர் ஜெயந்தி/ விநாயகர் சதுர்த்தி/ துர்கா பூஜை/ தசரா/ ஓணம்/ தீபாவளி/ சாத் பூஜை என மோடி குறிப்பிட்டார்.  ஆனால் ஜூலை இறுதியில் வரும் பக்ரீத் பண்டிகை/ முகரம்/ நவம்பரில் வரும் சீக்கியர்கள் பண்டிகையான குரு பிரப் மற்றும் சில கிறித்துவர்களின் பண்டிகைகள் குறிப்பிடப்படவில்லை. சாத் பூஜை என்பது சூரியனை கும்பிடும் பண்டிகை. இது பீகாரில் மட்டுமே மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் எந்த பண்டிகையையும் குறிப்பிட வேண்டிய தில்லை; அப்படி குறிப்பிட்டால் அனைத்து மதம் மற்றும் பிரிவினரின் பண்டிகைகளையும் குறிப்பிட வேண்டும். இப்பொழுது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. விமர்சனங்கள் வர வேண்டும்; இந்து உணர்வு மேலோங்க வேண்டும் என்பதுதான் திட்டமா?

 “எந்த ஒரு வீட்டின் அடுப்பும் எரியாமல் இருந்து விடக்கூடாது; எனவேதான் இந்த திட்டம்” என மோடி கூறினார். மக்களின் கோரிக்கை மாதம் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் ரூ.5000 முதல் ரூ.7500 வரை நிதி உதவி.  5 கிலோ என்பது போதாது. ஜன் தன் கணக்குக ளுக்கு ஒரு முறை 500 மட்டுமே தரப்பட்டது. வேறு எந்த நிதி உதவியும் தரப்படவில்லை.  இந்த நிலையில் எப்படி ஏழை மக்களின் அடுப்புகள் தொடர்ச்சியாக எரிய முடியும்?

இந்த உதவி 80 கோடி பேருக்கு தரப்பட்டுள்ளது என கூறிய மோடி “அமெரிக்காவை போல 4 மடங்கும் இங்கிலாந்து போல 12 மடங்கும் அதிகமானது” எனவும் “இந்த மகத்தான செயலை கண்டு உலகமே வியந்து நிற்கிறது” எனவும் சுய பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டார். உலகிலேயே தனது ஜி.டி.பி. யின் அடிப்படையில் மிக குறைவாக நிவாரணம் அளித்தது மோடி அரசாங்கம்தான்!  மேலும் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் என்பது 2011 மக்கள் தொகை அடிப்படையில் ஆகும். அதற்கு பின்னர் 15 கோடி மக்கள் தொகை அதிகரித்துள்ளது . இவர்க ளில் சுமார் 11 கோடி பேருக்கு ரேஷன் அட்டை இல்லை. இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களையும் உள்ள டக்கிய அனைவருக்குமான பொது விநியோகம் தேவை என வலுவான கோரிக்கை உள்ளது. ஆனால் மோடி அரசாங் கம் அது குறித்து கவலை கொள்ள தயாராக இல்லை.

“இந்த மகத்தான செயலை கண்டு உலகமே வியந்து நிற்கிறது”, என தனது முதுகை தானே தட்டிக்கொள்கிறது மோடி அரசாங்கம். மிகவும் குறைவான இந்த உதவி இது வரவேற்கத் தகுந்தது என்றாலும் மகத்தான செயல் அல்ல. உணவு கிடங்குகளில் அவர் 10 கோடி டன் உணவு தானியங்கள் உள்ளன. மாதத்திற்கு 40 இலட்சம் டன் வீதம் 5 மாதங்க ளுக்கு 2 கோடி டன் உணவு தானியங்கள்தான் தேவை. அதற்கு பின்னரும் 8 கோடி டன் கிடங்குகளில் இருக்கும். இப்பொழுது அறுவடை செய்யப்படும் தானியங்களும் வரத் துவங்கிவிடும். உணவு தானியங்களை சேமிக்க இடம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

 “9 கோடி விவசாயிகளுக்கு ரூ 18,000 கோடி அவர்களின் வங்கி கணக்குகளில் பற்று வைக்கப்பட்டுள் ளது” என மோடி கூறினார். இது புதிய திட்டம் அல்ல; ஏற்கெனவே 2019 தேர்தலின் பொழுது ரூ 2000 வீதம் மூன்று தவணைகளில் ரூ.6000 தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இது இரண்டா வது தவணை. ஆனால் அப்பொழுது 14 கோடி விவசாயிக ளுக்கு இந்த உதவி அளிக்கப்படும் என மோடி கூறி னார். இப்பொழுது 9 கோடி விவசாயிகளுக்குதான் தரப் பட்டுள்ளது. அப்டியானால் 5 கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமமா?

“கோவிட் 19 தொற்றைத் தடுக்க சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது” என கூறுகிறார் பிரதமர். இந்தியாவில் முதல் தொற்று ஜனவரி 30 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. பிப்ரவரி மாதமே பல எதிர்கட்சி தலைவர்கள் ஊரடங்கு தேவை எனக் கோரினர். பிப்ரவரி இறுதியில் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் திரட்டப்பட்டனர். மார்ச் மாதத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படும் வரை ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. பின்னர் மார்ச் 24ம் தேதிதான் அதுவும் 4 மணி நேர அவகாசத்தில் ஊரடங்கு! இதுதான் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு என்கிறார் பிரதமர்!

 “உலகத்திலேயே கொரோனா மரண விகிதம் இந்தியாவில்தான் குறைவு. மற்ற தேசங்களை ஒப்பிடும் பொழுது நாம் சிறப்பாக செயலாற்றி உள்ளோம்” என்பது பிரதமரின் கூற்று. தொற்று எண்ணிக்கையில் இந்தியா இன்று உலகத்தில் 4ம் இடத்தில் உள்ளது. மரணங்கள் எண்ணிக்கையில் 8 வது இடத்தில் உள்ளது. பரிசோதனையில் இன்னும் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது. 10 இலட்சம் பேருக்கு இந்தியா வில் வெறும் 6396 சோதனைகள்தான் நடக்கின்றன.  அமெரிக்கா/ ரஷ்யா/ இங்கிலாந்து/ பிரான்ஸ்/ ஸ்பெயின் / கத்தார்/ பெலரஸ்/ பெல்ஜியம்/ ஐக்கிய அரபு அமீரகம்/ சிங்கப்பூர்/ போர்ச்சுகல்/ பக்ரைன்/ இஸ்ரேல்/ டென்மார்க்/ ஐஸ்லாந்து/ லிதுவேனியா/ மொரிஷியஸ் போன்ற பல நாடுகளில் 10 இலட்சம் பேருக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகம் எனும் விகிதாச்சாரத்தில்  பரிசோதனைகள் நடத்தப் படுகின்றன.

குறைவான பரிசோதனைகளுக்கே இவ்வளவு பாதிப்பு எனில் பரிசோதனைகள் அதிகரித்தால் என்ன நிலை என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். மோடி அரசாங்கம் மருத்துவ பாதுகாப்பிலும் சிறந்து செயல்படவில்லை; பொருளாதார பாதுகாப்பிலும் தேவை யான அக்கறை காட்டவில்லை. தான் சொல்வதை மக்கள் நம்பத் தயாராக உள்ளனர் எனும் எண்ணத்தில் பிரதமர் பொய்யான கருத்தாக்கத்தை உருவாக்க முயல்கிறார். பொய்களை அடையாளம் காணும் மக்களும் கணிச மாக உள்ளனர் என்பதை பா.ஜ.க. தலைவர்கள் மறந்து விடுகின்றனர்.

அ.அன்வர் உசேன்

 

;