tamilnadu

img

ஒரே நாடு - ஒரே மின்தொகுப்பு பாஜகவின் பகட்டு வேலை

பாஜக அரசு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ளது. அதன் புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2019- 20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி மாதத்தில் பியூஷ்கோயல் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையின் ஜெராக்ஸ் போன்று உள்ளது.  இந்த நிதி நிலை அறிக்கையில் ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு என்ற வார்த்தையையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என்ன ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு? ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு போன்றா? மின் தொகுப்பு என்பது பல இடங்க ளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல இடங்களுக்கு விநி யோகம் செய்யும் கட்டுப்பாடு ஏற்பாடு.மின்சாரத்தை சேமிக்க முடியாததால் தேவைப்படும் இடத்திற்கு அனுப்புவதும் தேவையில்லாத இடத்திற்கு குறைப்பதும் அதற்கேற்ற வகையில் மின்உற்பத்தியை கட்டுப்பாடு செய்வதும்தான் மின்தொகுப்பு. ஆங்கிலத்தில் கிரிட் என்று சொல்வார்கள்.  மாநில மின்விநியோக கழகங்கள் நட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன.அதை ஒழுங்குபடுத்துவதற்குத்தான் ஒரே மின்தொகுப்பு என்று சொல்லியிருக்கிறார்கள். கடனை எல்லாம் ஒழிப்பதற்குத்தானே உதய் திட்டம் கொண்டு வரப்பட்டது. உதய் மின்திட்டம் 2015 இல் கொண்டு வரப்பட்ட பொழுது மாநில மின்விநியோக கழகங்களின் கடன் இரண்டு லட்சத்து 84 ஆயிரம்  கோடி ரூபாய் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 2018 ஆண்டிலும் அதே அளவிற்கு கடன் உள்ள தாக தெரிவிக்கின்றார்கள்.  அந்தக்கடனில் 42 ஆயிரம் கோடி ரூபாய் அரசுத் துறை தரவேண்டுமாம். அரசுத்துறை அலுவலகங்கள், உள்ளாட்சி, காவல்நிலையம், தீயணைப்பு நிலையம் உட்பட உள்ள நிறுவனங்கள் மின்சாரம் பயன்படுத்தியதற்கான மின் கட்டணத் தொகையும் செலுத்தாமல் போனதால் இந்தக்கடன் என்று குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் போக்கவே ஒரு நாடு ஒரு மின்தொகுப்பு என்று தெரிவித்துள்ளார்கள்.

மின்தொகுப்பு மண்டலங்கள்
இந்தியாவில் தற்போது மின்தொகுப்பு எப்படி உள்ளது? இந்தியாவின் மின்தொகுப்பு 5 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. தில்லி, உத்தரப்பிரதேசம், அரியானா,பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் சேர்ந்து வடக்கு மண்டலம் எனவும் தமிழ்நாடு கேரளா,கர்நாடகா, ஆந்திர - தெலுங்கா னா மற்றும் பாண்டிச்சேரி தெற்கு மண்டலம், குஜராத் மகா ராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கோவா மேற்கு மண்டலம், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர்,ஜார்க்கண்ட் கிழக்கு மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் ஆகும். இவை அத்தனையும் 2013 இல் ஒன்றாக்கப்பட்டது.2012 வரை தெற்கு மண்டலம் ஒன்றாக சேரவில்லை. இந்த மின்தொகுப்பு மண்டலங்கள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து கண்கா ணிக்கப்படுகின்றது.(தகவல் : பவர் கிரிட் கார்ப்பரேஷன்) நமக்கு கிடைக்கும் மின்சாரம் 230 வோல்டேஜ் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கின்ற வகையில் மின்அளவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான அலைவரிசை எண் 49.7 லிருந்து 50.2 ®Q வரை பராமரிக்கப்படுகின்றது.மின்சாரம் அதிகமாக தேவைப்படும் மாநிலங்கள் என்று பார்த்தால் 7 மாநிலம் மட்டுமே. இவை தமிழ்நாடு, ஆந்திரா,  தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தில்லி ஆகியவை.

பராமரிப்பு ஒழுங்கும் பயன்பாடும் உற்பத்தியும்
ஒரே மின்தொகுப்பு மூலம் பராமரிக்கப்படுவதால் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. மின்சாரம் தேவைப்படும் மாநி லங்கள் அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சிடாத வகையில் மண்டல ரீதியான கட்டுப்பாடு உள்ளது. தண்ணீர் போலத் தான் மின்சாரமும். தேவைப்படும் மாநிலம் அதிகமாக எடுத்துக்கொண்டால் மின்தொகுப்பில் உள்ள மற்றொரு மாநி லம் மின்சாரத்தை இழக்கும். மின்சாரத்தை உறிஞ்சும் மாநிலம் பயனாளியாகும் மின்சாரத்தை இழந்த மாநிலம் பாதிப்பிற்கு உள்ளாகும்.  இதனால் மின்நிலையங்கள் உற்பத்தி செய்வதின் கட்டுப்பாட்டை இழக்கும்.மின்உற்பத்தி கட்டுப்பாடு இழந்து தானாகவே மின் நிலையம் உற்பத்தி நின்றுபோகும். அதனால் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளதால் ஒட்டுமொத்த மின்தொ குப்பும் பாதிக்கப்பட்டு மின்சார உற்பத்தி நின்று போகும்.இத்தகைய பாதிப்பு சான்பிராஸிஸ்கோவில் நியூயார்க்கில் ஏற்பட்டது. லண்டனிலும் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசம்.  இத்தகைய பாதிப்பை இந்தியாவில் 2012 இல் சந்தித்தோம்.2012 ஆம் ஆண்டில் ஜுன் 30,31 தேதிகளில் இரண்டு நாட்களுக்கு 20 மாநிலத்தில் உள்ள 60 கோடி மக்கள் மின் விநியோகம் இல்லாமல் இருட்டில் மூழ்கினர். மிகப்பெரிய பாதிப்பை நாம் சந்தித்தோம். கோடை காலத்தில் அதிகமான மின்சாரத்தை ஒழுங்கற்று அராஜகமான முறையில் உறிஞ்சியதே இதற்கு காரணம் என்று பின்னர் கண்டுபிடித்தனர். மின்தொகுப்பு பராமரிப்பு ஒழுங்கு தவறிய காரணத்தினால் இப்பிரச்சனையை சந்தித் தோம். இப்படிப்பட்ட நிலை இருக்கும்போது நமது நாட்டின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்?

ஏமாற்று அறிவிப்பு
மின்உற்பத்தி என்பது ஒரே சீராக மாநிலங்களில் இருக்கிற தா? அரசின் கட்டுப்பாட்டில் மின்நிலையங்கள் உள்ளனவா? என்பதையெல்லாம் பார்க்காமல் ஒரு அறிவிப்பு செய்வது எவ்வளவு ஏமாற்றுத்தனம் என்று பார்க்கவேண்டும்.  குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான மின்உற்பத்தி நிலையங்கள் தனியார் கையிலே உள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மின் உற்பத்தி நிலையங்கள் அரசின்கட்டுப்பாட்டில் உள்ளன. தில்லி மாநிலத்திற்கு பெரும்பாலான மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து வழங்கப்படுகின்றது.பாண்டிச்சேரிக்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகின்றது. நிலக்கரி அதிகமாக கிடைக்கும் மாநிலங்களான ஒடிசா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகமில்லை. மின் நுகர்வு என்று பார்த்தாலும் கூட தில்லி, பஞ்சாப், அரியா னா, தமிழகம், ஆந்திர - தெலுங்கானா, மகாராஷ்டிரா,குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் தான் அதிகமாக நுகரப்படுகின்றது.

நுகர்வும் கட்டணமும்
தமிழகத்தின் ஒரு நபர் நுகர்வு ஆண்டுக்கு 1300 யூனிட் மின்சாரம் என்றால் இந்தியாவின் நுகர்வு 900 யூனிட் ஆக உள்ளது. சில மாநிலங்களில் மின்விநியோகம் என்பது பல ஏஜென்ஸியால் செய்யப்படுகின்றது. தில்லி ,மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள அதானி, அம்பானி, டாட்டா நிறுவனங்கள் மின்விநியோகம் செய்யப்படுகின்றது. மின் கட்டணம் என்று எடுத்துக்கொண்டால் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமாக உள்ளது. தமிழகம், பஞ்சாப், ஆந்திர - தெலுங்கானா மாநிலங்களில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இதர மாநிலங்களில் மின்கட்டணம் என்பது வித்தியாசமாக உள்ளது. இவை எதுவும் கணக்கில் கொள்ளப்பட்டதா என்று கேள்வி எழுகின்றது.


மின்தடங்களின் நிலை...                                                                                                                                                                                                                                                                                                                                     மின்சாரம் கொண்டு செல்லும் மின்தடங்களும் போது மானதாக உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும். தற்போது 75 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் வழித்தடங்கள் மட்டுமே உள்ளன.எதிர்காலத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த உத்தேசம் உள்ளது.  தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மின்தடங்கள் போக புதிய மின்தடங்களுக்காக உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு மின்சா ரம் உற்பத்தி செய்யப்படுகின்றது என்றால் அதற்கான மின்தடம் அமைக்கப்பட்டு விட்டது என்று சொன்னால் புதிய மின்தடம் அமைப்பது ஏன் என்று கேள்வியும் எழத்தான் செய்கிறது. எட்டு வழிச்சாலை தேவையா என்ற கேள்வியை இதற்கும் பொருத்திப்பார்க்கலாம். தமிழகத்தில் தற்போது அமைக்கப்பட்ட மின் நிலையங்க ளின் மின் உற்பத்தி புதிய மின்நிலையம் அமைவது உட்பட கணக்கீடாக எடுத்துக்கொண்டால் வயது ஆன மின்நிலை யங்கள் போக புதியதாக மின் நிலையங்களும் சேர்த்து தமிழ கத்தின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளமுடியும்.பெருகி வரும் தேவையான ஆண்டுதோறும் 8 சதவீத தேவை கணக் குக்கு ஏற்றாற்போன்று மின்நிலையங்கள் அமைத்தால் போதுமானது.

அணிவகுக்கும் ‘ஏன்’கள்?
ஆனால் கடற்கரையோரங்களில் அமைக்க அரசு அனுமதி வழங்குவது ஏன்?அதுவும் தனியாருக்கு அனுமதி வழங்குவது ஏன்?  தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து அனல் மின்நிலை யங்களுக்கு பயன்படுத்தி அதை எரியூட்டி மின்உற்பத்தி செய்து விவசாயிகளின் நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் ஏற்பாடும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. நமது அண்டை நாடு களான இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் வெளிநாடு களுக்கும் கொண்டு செல்லும் ஏற்பாடு உள்ளது.

தனியார் நிறுவனங்களுக்காக...
இந்தியாவில் மின்உற்பத்தி நிறுவுதிறன் 3,56,848 (பிப்.2019 மத்தியஅரசின் அறிக்கை) மெகாவாட் என்றால் உற்பத்தி செய்வது 1,61,422 மெகாவாட் மட்டுமே. 45 சதவீத அளவில் தான் உற்பத்தி நடக்கின்றது. இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு நூறு சதவீத மின் இணைப்பு பெற பாஜக அரசு 2022 ஐ இலக்காக வைத்துள்ளது. வீடுகளுக்கு மட்டுமே மின்தேவை என்பது பூர்த்தி செய்யப் பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கான கூடுதல் மின்தேவை ஏற்படவில்லை. காரணம் புதிய தொழிற்சாலைகள் அமைய வில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் போனதையும் இதையும் சேர்த்துப்பார்க்கலாம்.இவை எதையும் கருத்தில் கொள்ளா மல் நிதி அமைச்சர் அறிவிப்பு உள்ளது என்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்கவே செய்யும்.  தற்போது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவுதிறன் 1,65,144 மெகா வாட் அதாவது 46.3 சதவீதம் ஆகும். இதில் 65 ஆயிரம் மெகா வாட் வரை மின்உற்பத்தி செய்யப்படவில்லை.அதற்கான காரணம் மாநில மின்விநியோக கழகங்களிடம் மின்சாரத்தைவாங்கு வதற்கு பணமில்லை.தனியார் என்றால் உடனுக்குடன் பணத்தை அளித்துவிடவேண்டும். விலையும் கூடுதலாக இருக்கும். எனவே தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. நிறுத்தி வைக்கப்பட்ட மின்நிலையங்களில் மீண்டும் மின்உற்பத்தி செய்யப்பட வேண்டும். அந்த மின்சாரம் மின்தேவையுள்ளவருக்கு விற்கப் படவேண்டும். தனியார் நட்டமடையாமல் பார்த்துக்கொள்வதன் நோக்கம் தான் ஒரு நாடு ஒரு மின் தொகுப்பு.

கட்டுரையாளர்: சிஐடியு, மாநில துணைத்தலைவர்

;