tamilnadu

img

திருட்டுத்தனம், தற்புகழ்ச்சி, முட்டாள்தனங்களால் நிறைந்திருக்கும் மோடி ஷாவின் ஆட்சி  -ஹர்தோஷ் சிங் பால்

பணமதிப்பு நீக்கம், 370ஆவது சட்டப் பிரிவு ரத்து, மிகக்குறுகிய கால பாஜக அரசாங்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் அதிகாலையில் மகாராஷ்டிராவில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து என்றிருக்கும் இந்தப் பட்டியலின் நீளம் திருட்டுத்தனம், தற்புகழ்ச்சி, முட்டாள்தனம் ஆகியவற்றால் நரேந்திரமோடி – அமித்ஷாவின் ஆட்சி நிறைந்திருப்பதை விளக்குவதற்குப் போதுமானதாக இருக்கின்றது. மோடி, ஷா இருவருக்கிடையிலான தொடர்புகளின் தன்மையையும், நாட்டிற்கு அவை ஏற்படுத்தப் போகின்ற ஆபத்துகள் பற்றியும் நம்மைப் போன்றவர்களுக்கு விளக்கும் வகையிலே இந்த அறிவுக் கூர்மையற்ற இந்த ஆட்சி இருக்கின்றது.

மோடியைப் பொறுத்த வரை பொதுவெளியில் அவரைப் பற்றி எழுப்பப்படுகின்ற பிம்பமே மிகமுக்கியமானதாக இருப்பதை இப்போது நன்கு அறிந்திருக்கிறோம். 2007ஆம் ஆண்டில் குஜராத்தில் தேர்தல் குறித்த செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, மோடியின் தனிப்பட்ட புகைப்படக் கலைஞரான விவேக் தேசாயுடன் நான் பேசினேன். அப்போது அவர் என்னிடம் முதலமைச்சரின் வீட்டில் காலை 6 மணிக்கே தொடங்கிய புகைப்பட அமர்வு குறித்து விவரித்தார். மோடிக்கான ஆடைகள் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன என்று என்னிடம் கூறிய தேசாய், "அவர் வெற்று அறையில் நின்று கொண்டு கற்பனையான கூட்டத்தின் முன்பாக பேசத் தொடங்கினார். அந்த பாணியில் பேசும்போது மட்டுமே அவருடைய சொல்லமைப்புகள் உயிர் பெறுகின்றன. அதன் காரணமாகவே உணர்ச்சிபூர்வமான நேர்காணல் அல்லது பொதுமேடைகளில் பேசுவதைத் தவிர்த்து, மற்றபடி அவரை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர்களை  அனுமதிப்பதில்லை. அந்த நாளில், அந்த புகைப்பட அமர்வு நான்கு மணி நேரத்திற்கு நீடித்தது” என்று தெரிவித்தார். ”எப்போதும் தனது இடுப்பிற்கு மேல் புகைப்படம் எடுக்கப்படுவதை மோடி உறுதி செய்து கொள்வார். எதையாவது வலியுறுத்துகிற வகையில் அல்லது தனது ஆள்காட்டி விரலை உயர்த்துவது என்று எப்போதுமே தன்னுடைய கை நடுப்பகுதியில் இருப்பதை மோடி உறுதி செய்து கொள்வார்” என்றும் தேசாய் கூறினார்.

குஜராத்திலிருந்து அவர் டெல்லிக்கு சென்ற பிறகும், பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. குஜராத்தில் இருந்ததைப் போலவே, விவரங்கள் குறித்து தன்னம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்ற அவரது தனிப்பட்ட கவனத்தால், அவருக்கு மிகநெருக்கமான திட்டங்களும்  தடுமாறவே செய்தன. ஒரு விளம்பரப் பிரச்சாரம் முடிந்ததுமே மோடியின் கவனம் வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். இந்த காரணத்தாலேயே மோடியால் செய்ய முடியாத, மோடியின் தோற்றத்தை பகட்டாக எடுத்துக் காட்டுபவராக அமித்ஷா ஆகிவிடுகிறார். கடந்த ஆட்சியின் போது, அரசாங்கத்தை நடத்துவதில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், மோடியின் தேர்தல் பிரச்சாரங்களை குஜராத்தில் செய்ததைப் போல அவரே கையாண்டார். வாக்குச்சாவடி வாரியான தனிப்பட்ட கவனம், மாநிலங்களில் பிரச்சாரத்தை வழிநடத்த சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் திறன், கட்சி கட்டமைப்பு இல்லாத இடத்தில் அதைக் கட்டமைக்கும் முயற்சி போன்றவை இதில் அடங்கும். தனது சுயபிம்பத்தின் மீது கவனம் செலுத்திய பின்னர் இதுபோன்றவற்றை ஷாவிடம் விட்டுச் செல்லவே மோடியும் பெரும்பாலும் விரும்புகிறார்.

அவர்களுக்கிடையிலான இந்த ஏற்பாடு நன்றாகவே வேலை செய்கிறது.. விரைவாக கோபமடைகின்ற மோடி யாராவது அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டாலோ அல்லது அவருக்கு சவால் விடுத்தாலோ தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமப்படுகிறார். தனக்கு திருப்தி ஏற்படுகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படாத ஊடகங்களுடனான உரையாடல்களிலிருந்து அவர் விலகி இருப்பதற்கான காரணமும் இதுதான். ஆனால் அமித்ஷாவோ இத்தகைய அமைப்பிற்குள் மிகச் சரளமாக இருக்கிறார். 2019 தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தின் முடிவில் ஊடகங்களிடம் முழுமையாக உரையாடியது அவர்தான். அந்த நேரத்தில் மோடி அவருடன் வெறுமனே மவுனமாக மட்டுமே அமர்ந்திருந்தார். தகவல்களை சரிவர அறிந்திராத ஊடக வர்ணனையாளர்கள் சிலர் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து தவறான கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். மோடி தனக்கான  ஆற்றலை மக்களிடமிருந்து பெறுகிறார் – இந்த உண்மையை ஏற்றுக் கொள்வது சங்கடமாக இருந்தாலும் - ஷா தனது ஆற்றலை மோடியிடமிருந்தே பெறுகிறார் என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.

இந்த அரசின் மீது ஷா கொண்டு வந்திருக்கும் முத்திரை ஏற்கனவே 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கத்தின் போதே தெளிவாகத் தெரிந்தது. முன்கூட்டியே அந்த முடிவை ரகசியமாகத் தெரிந்திருந்த ஒரு சிலரில் ஒருவராக இருந்த அவர், அதைப் பற்றி பொதுவில் கருத்து தெரிவிக்க முடிகிறவராகவும் இருந்தார். உண்மையில், பணமதிப்பு நீக்க அறிவிப்பு இப்போது ஒரு படிம அச்சாக மாறி விட்டது. ரகசியமாக மூடி வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட அனைவரையும் திணறடித்த அந்த பணமதிப்பு நீக்க அறிவிப்பு அடுத்த ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தல்களில் பாஜகவின் உடனடி அரசியல் நலனுக்கு உதவியது. ஆனாலும் அது பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. தங்களுடைய அரசியல் நலனுக்கு உகந்தது அல்லது இந்த நாட்டிற்கு சேதம் விளைவிப்பது என்ற இரண்டு விளைவுகளுக்கு இடையில், இவர்கள் இருவரும் எப்போதும் தங்கள் அரசியல் நலன் என்பதை மட்டுமே தேர்ந்தெடுப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பது இப்போது கிடைத்துள்ள அனுபவங்களிலிருந்து தெரிய வருகிறது.  

இதேபோன்றுதான் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அரசாங்கம் ரத்து செய்த போதும் நடந்தது. மிகச்சிறிய விவரங்களைக்கூட சட்டபூர்வமான முறையில் வடிவமைத்து, தங்கள் தரப்பை மிகுந்த உற்சாகத்துடன் பாராளுமன்றத்தில் ஷா முன்வைத்தார். பணமதிப்பு நீக்க அறிவிப்பை போன்று அதே திருட்டுத்தனம் கொண்ட இந்த நடவடிக்கையும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீண்டகாலத்திற்கு சங்கடத்தையே ஏற்படுத்தியது.

நீண்ட காலமாக கைவிடப்பட்டிருக்கும் அரசியலமைப்பு சார்ந்த ஒழுக்க நெறிகள் குறித்த கேள்விகளை இப்போது ஒதுக்கி வைத்து விட்டு, தேசிய பாதுகாப்பு  குறித்த  வாக்குறுதி மீது மோடியும் ஷாவும் எடுத்துள்ள முடிவு குறித்து காணலாம். பல்லாண்டுகளாக காஷ்மீரில் இருந்து வந்திருக்கும் "இயல்பு நிலை" மீண்டும் திரும்பி வருவதற்கான  வாய்ப்பே இப்போது இல்லை. அதிக அளவில் ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகள் பயன்படுத்தப்படுவதை குறைப்பதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இதுவரையிலும் உள்ளூர்  காவல்துறை மக்கள் போராட்டங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பது குறித்து பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்றாலும், சிறப்பு  அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பாக மத்திய அரசு  ஜம்மு - காஷ்மீர் காவல்துறையை நிராயுதபாணியாக்கி விட்ட நிலை, ஜம்மு - காஷ்மீர்  காவல்துறையை நீண்ட காலத்திற்கு இனிமேல்  நம்பியிருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. .

மேலும் மோடி மற்றும் ஷாவின் கீழ் இப்போது இருக்கின்ற காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையில் உள்ள  எந்தவொரு மூத்த அதிகாரியும்  தனது  துருப்புக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை  என்பதிலிருந்தே  அந்த தலைமையின்  தரம்  மிகத் தெளிவாகத் தெரிகிறது.  இத்தகைய  அதிகாரிகள் எதிர்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகும் போது தங்கள் கட்டளையை எதிர்பார்த்து நிற்பவர்களிடமிருந்து விசுவாசத்தை  எதிர்பார்ப்பது  வெறும் கனவாகவே இருக்கும். இதற்கிடையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருட்டறைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில்,  பள்ளத்தாக்கு பகுதிக்கு  கிடைக்கும் என்று கருதப்பட்ட வளர்ச்சிக்கான எந்த அறிகுறியும் காஷ்மீரில் காணக் கிடைக்கவில்லை.  மோடி, ஷா ஆகியோரின் அரசியலை  ஊக்குவிக்கின்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்  கருத்தியல்  பின்னணி  ஒன்றைத் தவிர, தேசிய பாதுகாப்பு குறித்து பார்த்தால் இந்த முடிவு பொருளற்றதாகவே இருக்கிறது.

இந்த முடிவுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றவர்கள் பணமதிப்பு நீக்கம், 370ஆவது சட்டப் பிரிவு நீக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படுத்தியிருக்கும் தெளிவான  முடிவுகளிலிருந்து  தப்பிக்க முயன்றாலும், மகாராஷ்டிராவில்  அண்மையில்  நிகழ்ந்த  சம்பவங்கள் அவர்களை மிக மோசமான நிலைக்குத்  தள்ளியிருக்கின்றன. தேவேந்திர ஃபட்னாவிஸை  முதலமைச்சர் பதவியேற்க வைப்பதற்காக, அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல்  "அவசரத் தேவை"  என்று கருதி மாநிலத்தில் இருக்கும் குடியரசுத் தலைவரின் ஆட்சியை ரத்து செய்ய பிரதமருக்கு அனுமதி வழங்குகின்ற இந்திய அரசின் (விவகாரங்களைக் கையாளுவது)  12ஆவது விதியை நவம்பர் 23ஆம் தேதி  அதிகாலை 5.47 மணியளவில் மோடி  பயன்படுத்திக் கொண்டார். மகாராஷ்டிரா ஆட்சியதிகாரத்தில் இருந்து பாஜகவை  தூக்கியெறிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு வந்து சேர்ந்ததன்  விளைவாகவே இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.  அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சியிடமிருந்து தனக்கு கிடைக்காது என்பது  தெளிவாகிய பின்னர் பதவியேற்ற மூன்று நாட்களிலேயே ராஜினாமா செய்த ஃபட்னாவிஸ் மாநிலத்தின் மிகக் குறுகிய கால  முதலமைச்சரானார்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் காஷ்மீரைப் போலவே, இந்த திருட்டுத்தனமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சட்டபூர்வமான வழிகள் மீது அப்போது செலுத்தப்பட்ட அதே போன்ற கவனம், இப்போது மோடி விதி 12ஐப் பயன்படுத்தியதிலும் இருந்தது என்றாலும்,  பணமதிப்பு நீக்கம், காஷ்மீரைப்  போல அல்லாமல் இந்த நடவடிக்கையில் இருந்த அவர்களின் முழு முட்டாள்தனமும் தெளிவாகத் தெரிவதற்கு பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லாமல் போனதுதான் இப்போது வித்தியாசமாகிப் போனது. அரசாங்கத்தை  அமைத்தவர்களின்  அறநெறியை அவ்வாறு செய்யாதவர்களுடன் ஒப்பிடும் போது, இரண்டிற்கும் இடையே வித்தியாசம் எதுவும் இல்லாது இருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது. மோடி, ஷா இருவரும் தங்கள் செயல்களின் உடனடி விளைவுகளைத் தாண்டிப் பார்க்க இயலாதவர்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஊடகங்களின் மீது இப்போதுள்ள கட்டுப்பாடுகள் இல்லையென்றாகி விடும் போது, இவர்களை யாராலும் தோல்வியிலிருந்து  காப்பாற்ற  முடியாது போய் விடும்.

பெரும்பான்மை மனநிலையைத் திருப்தி செய்து தங்களின் அரசியல்  நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்ற மோடி - ஷாவின்  ஆட்சிமுறை வெகு சீக்கிரத்தில் வரலாற்றை வாசிப்பவர்களை  மகிழ்விப்பதாக இருக்கப் போகின்றது. பொதுமக்களால் கவனிக்கப்படாது இருக்கின்ற இவர்களின் தேசிய பாதுகாப்பை அரசியல் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்ற கருத்து வெறி, நிபுணர்களை சற்றும் கலந்தாலோசிக்காத தன்மை, ஜனநாயகப்பூர்வமான ஒருமித்த கருத்தை விரும்பாமை, தங்களுடைய செயல்கள் ஏற்படுத்தப் போகின்ற இடைக்கால, நீண்டகாலத் தாக்கங்களை கணிப்பதற்கான திறனின்மை போன்றவற்றைக் கொண்டதாக இருக்கின்ற இவர்களுடைய ஆட்சிமுறை மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நம்மை விரைவாக பேரழிவிற்கு இட்டுச் செல்லக் கூடியவர்களாக இவர்கள்  இருப்பது மட்டுமல்லாது, அத்தகைய ஆபத்துகளிலிருந்து  நம்மைக் காப்பாற்றப் போகின்ற தலைவர்களாகவும் இவர்கள் இருக்கப் போவதில்லை.

நன்றி https://caravanmagazine.in/politics/modi-shah-model-of-governance

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு,விருதுநகர்

 

 

 

 

;