tamilnadu

img

நடமாடிய பல்கலைக்கழகம்... தோழர் தே. லட்சுமணன்

மறைந்த தலைவர் தோழர் டி.எல். அவர்களுடனான என்னுடைய தோழமை 1988ல் துவங்கியது. 32 ஆண்டுகள் அந்த தோழமை நீடித்தது.  இதில் சிறப்பு என்னவென்றால், அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசமும் 32.  திருவல்லிக்கேணியில் இயங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் துவங்கிய அந்த தோழமை, தோழர் பா.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளை உருவாக்கி வளர்த்தெடுப்பதிலும் தொடர்ந்தது.  

கருணை அறக்கட்டளை
1997 ஆம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கருணை அறக்கட்டளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில மைய வழிகாட்டுதலில் துவக்கப்பட்டது, குறிப்பாக அப்போதைய மாநில செயலாளர் தோழர் என். சங்கரய்யா அவர்களின் ஆலோசனைகளின்படி துவக்கி, அந்த அறக்கட்டளையின் சார்பில் மனவளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்காக முழுவதும் இலவசமாக சென்னையில் பகல் நேர அன்னை சிறப்புப் பள்ளி இன்றளவும் தனித்துவத்தோடு செயல்படுகிறது. இதற்காக பல முக்கிய பிரமுகர்களை உதவிசெய்ய வைக்க அப்போதைக்கு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களைக்கூட பொறுப்பாக்கியது கட்சி.

ஒரு தந்தையாக தன்னை அந்த அறக்கட்டளையில் இணைத்துக்கொண்டு, ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக அன்னை சிறப்புப் பள்ளியை துவக்கி நடத்த முக்கிய பங்காற்றினார் டி.எல். முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது, அந்த சிறப்புப் பள்ளியை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு வகையில் ஆலோசனைகளை அளித்து, அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தும் சிறப்புப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர், அவர்களுக்கு பயிற்சி தரும் சிறப்பாசிரியர்கள், பள்ளிகளின் தாளாளர்களை இணைக்கும் வகையில் மனவளர்ச்சி குன்றியோருக்கான கூட்டமைப்பை 2004 ஆம் ஆண்டு உருவாக்குவதில் அரிய பங்களிப்பை செய்தார் தோழர் டி.எல்.  அதன் தலைவராகவும் நீண்ட காலம் செயல்பட்டார்.  

மனவளர்ச்சி குன்றியோர்  வாழ்வுரிமை மாநாடு
இந்த அமைப்பின் சார்பில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வள்ளுவர் கோட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட்டது.  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களை அதில் பங்கேற்க வைப்பதில் முக்கிய பங்காற்றினார்.  அந்த மாநாட்டின் மூலமாகத்தான் தற்போது சுமார் 2.20 லட்சம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் தமிழகத்தில் தற்போது ரூ.1500 மாத உதவித்தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட அனுபவங்களின் அடிப்படையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், ஒற்றுமைக்காகவும் ஒரு சங்கத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டு 2010 பிப்ரவரியில் சென்னை கேரள சமாஜத்தில் நடத்தப்பட்ட அமைப்பு மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டது.  பின்னாளில் அது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் என மிளிர்ந்து கடந்த பத்தாண்டுகளிலேயே தமிழகம் முழுவதும் வாழக்கூடிய பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இச்சங்கத்தின் அமைப்பு மாநாடு முதல் இறுதிக்காலம் வரை அரிய பங்களிப்புகளை செய்தார் தோழர் டி.எல்.  குறிப்பாக அந்த அமைப்பு மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டும் அரசியல் சாசனத்திலும்கூட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்வைத்தவர் அவர்தான்.  பின்னர், நாடு முழுவதும் ஏற்கத்தக்க முக்கிய கோரிக்கையாக இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாக பழகுவது, அவர்களுக்கு புரியும் வகையில் அன்றாட அரசியலை எளிமையாக விளக்குவது, என மாற்றுத்திறனாளிகளை அரசியல் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே.  சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டங்களில் அவர் நிகழ்த்தும் நாட்டு நடப்பு அரசியல் உரையை கேட்கவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். அரை மணி நேரம் உரையாற்றுவதற்குகூட அதிக சிரத்தை எடுப்பார் டி.எல்.

தொடர் போராட்டங்கள் மூலம்... 
மாநிலம் முழுவதும் அலைந்து, திரிந்து அமைப்புகளை உருவாக்குவதற்கு அவர் எடுத்துக்கொண்ட அக்கறை அளவற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டம், மாத உதவித் தொகையை உயர்த்துவது, உதவித்தொகை வழங்குவதில் உள்ள கடுமையான விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி எண்ணற்றப் போராட்டங்களுக்கு தூண்டுகோலாக இருந்து வெற்றிபெற வைத்தது என கடந்த 24 ஆண்டுகளில் தோழர் டி.லட்சுமணன் அவர்களின் பங்களிப்பும், ஆலோசனைகளும் அளப்பரியவை.
கோரிக்கைகளை எப்படி உருவாக்குவது, அதிகாரிகளை எப்படி அணுகுவது, அறப்போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்பதில் வழிகாட்டுவதில் பல நுணுக்கங்களை கற்றுத்தந்தவர் தோழர் டி.எல்.  மாற்றுத்திறனாளிகளைப் போராட்டப் பாதைக்கு திருப்பியதோடு மட்டுமல்லாமல், கோரிக்கைகள் எப்படியும் வெற்றிபெற வைக்கும் வரை ஓயமாட்டார் அவர்.  அதன் காரணமாகவே 5 நாள், 6 நாள் போராட்டங்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளால் நடத்தி வெற்றிபெற முடிந்தது.முப்பத்திரெண்டு வயது சிறியவன் என்ற எண்ணத்தோடு அவர் எப்போதும் என்னை அணுகியதில்லை.  சிறுமைப்படுத்திப் பார்த்ததில்லை.  பல நேரங்களில் தோளில் கைபோட்டுக்கொண்டுதான் பேசிக்கொண்டிருப்பார்.  அவரிடம் பேசப்பேச உற்சாகம் பீறிடும். எந்த துறை சார்ந்த சந்தேகமானாலும், எப்போது வேண்டுமானாலும் அவரிடம் விளக்கம் பெற முடியும்.  அவரிடம் நேரம் காலம் பார்த்துப் பேசவேண்டும் என்பதெல்லாம் கிடையவே கிடையாது.  அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு நிமிட அளவே இருக்கும்.  என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் மற்றும் பொதுவாழ்விலும் எனக்கு அவர் ஒரு ஆசானாக திகழ்ந்தார் என கூறுவதில் மிகை ஒன்றுமில்லை.தோழர் டி.எல் அவர்களிடம் எந்த சந்தேகமானாலும், எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு தெளிவுபெறும் உரிமையை எனக்கு அவர் வழங்கி இருந்தார்.  அதற்கு நேரம்காலம் என்ற தடை ஏதும் இல்லை.   

தூதரக நூலகங்களில்...
தோழர் டி.எல். ஆங்கிலத்தில் அசாத்திய புலமை பெற்றவர்.  பல ஆங்கில வார்த்தைகள் உலகின் வேறு சில மொழிகளில் இருந்து உருமாறி, உருகி ஆங்கிலத்தில் உறைந்திருப்பவைகளாகும்.  அது எப்படி உருமாறி ஆங்கிலத்தில் கரைந்துள்ளது என்பது பற்றி எல்லாம் தெளிவாக விளக்குவார்.  சென்னையில் இயங்கக்கூடிய பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தூதரக நூலகங்களில் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்தார்.  அங்கு என்னையும் அழைத்து செல்வார்.  தேடித்தேடி புத்தகங்கள் எடுத்துக்கொள்வார்.  வாசிப்பிற்கு அவரிடம் யாரும் போட்டியிட முடியாது.  பல நாட்கள் அதிகாலை மூன்று, நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து வாசிப்பதை பழக்கமாக வைத்திருந்தார். அதைப்போன்று திரைப்படங்களின் காதலர்.  நல்ல பல திரைப்படங்களை முதலில்  சென்று பார்த்துவிடுவார். அந்த வகையில் அவர் ஒரு கலா ரசிகர் என்றே சொல்ல வேண்டும். 

அவைகளின் மூலம் அவர் பெற்றிருந்த இலக்கிய, திரை அனுபவங்களையும் அமைப்பிற்கும் கச்சிதமாக பயன்படுத்துவார். மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட  மற்றும் திரைப்படங்களை பார்ப்பதும், இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசிப்பதும், அவைகளின் கருத்தம்சங்களை கூட்டங்கள் வாயிலாகவும், அவர் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த மாற்றுத்திறனாளிகள் உரிமைக்குரல் பத்திரிகை மூலமும் மாற்றுத்திறனாளிகளிடம் எடுத்துச் செல்லவும் தவற மாட்டார். 
அவர் மறைவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்குரல் முகநூல் பக்க நேரலையில் செவித்திறன் பாதித்த ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நிமித்தம் நாவல் குறித்து அற்புதமான நூல் விமர்சனத்தை தோழர் டி.எல். வழங்கினார். சுமார் ஒரு மணி நேரம் வரை நிகழ்த்திய அவரது கடைசி உரை நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர் டி.எல். அவர்களின் மொத்த வாழ்க்கையை இரு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு “நடமாடிய பல்கலைக்கழகம்”!

கட்டுரையாளர்  : எஸ். நம்புராஜன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்

;