tamilnadu

img

வல்லமை தாராயோ...பாரதி! - தி.வரதராசன்

மகாகவி சுப்பிரமணிய பாரதி இளம் வயதில் -அதாவது 19வது வயதில் எட்டயபுரம் ஜமீனில் சமஸ்தானப் பணியில் சேர்ந்தார். காலையில் ஜமீன்தாருக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் வாசித்துக் காட்டுவது, நாட்டு நடப்புகளைச் செல்லுவது, அரண்மனை யில் வித்துவான்கள் செய்கிற வாதப் பிரதிவாதங்களில் பங்கேற்பது இவைதான் பாரதியின் அன்றாடப் பணிகள். இப்படியிருக்க, 1904-இல் சர்வஜனமித்திரன் என்ற பத்திரி கையில் பணக்காரர்களையும், அவர்கள் செய்துவந்த அட்டூழியங்களையும் கண்டித்து பாரதி ஒரு கட்டுரை எழுதியிருந்ததை மற்றவர்கள் மூலமாக எட்டயபுரம் ஜமீன்தார் கேள்விப்படவே பாரதி மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. 

தமிழாசிரியர்

இதைத் தொடர்ந்து வேறு பணியைத் தேடி எட்டய புரத்தைவிட்டுப் புறப்பட்டார் பாரதி. அவர் சென்ற இடம் மதுரை. இங்கு சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவர் இங்கு 1904 ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 10 வரை தான் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதிக நாட்களல்ல நூறு நாட்கள் மட்டுமே. சம்பளமோ பதினேழரை ரூபாய். வறுமையில் வாடிய பாரதியின் குடும்பத்திற்கு இது கட்டுப்படியாகவில்லை.  மதுரையில் தமிழாசிரியர் பணியை விட்டு விலகி சென்னைக்குப் புறப்பட்டார் பாரதி. தமிழ்நாட்டில் முத லாவது அரசியல் பத்திரிகையாக 1882-இல் துவக்கப் பட்ட, சென்னை அரண்மனைக்காரத் தெருவில் இருந்த, தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் கொண்ட“சுதேச மித்திரன்” பத்திரிகையில் துணையாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 22. அங்கே அவ ருக்கு ஆங்கிலத்தில் வரும் செய்திகளைத் தமிழில் எழுதித் தரும் மொழிபெயர்ப்பு மற்றும் பிழைதிருத்தும் பணி. “ரஸம் கெடாமல் தமிழில் மொழிபெயர்க்க உன்னைத் தவிர யாரால் முடியும்? பாரதி நீ அருமையாகத் தமிழ் எழுது கிறாய். உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம்” என்று உளம் பூரித்துப் பாராட்டினார் தேசிய தலைவர்களில் ஒருவரும் சுதேசமித்திரன் ஆசிரியருமான ஜி.சுப்பிரமணிய அய்யர். (ரஸம் கெடாமல் என்றால் சுவை கெடாமல் என்று அர்த்தம்)

சுதேசமித்திரனில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அந்தப் பத்திரிகையில் சில கவிதைகள் மட்டுமே எழுதினார். மொழி பெயர்ப்பும், பிழைகள் திருத்துவதுமே அவரது முக்கியப் பணி. அரசியலில் பாரதி தீவிரவாதி என்று கருதியதால் அவரை  தலையங்கம் எழுதும்படி அய்யர்  விட்டதில்லை என்கிறார் பாரதியின் நெருங்கிய சகாவான  வ.ராம சாமியாகிய வ.ரா. எப்படி இருந்தாலும் ஜி.சுப்பிரமணிய அய்யர் மூலமே பாரதி இதழியல் கற்றார் என்பதே உண்மை. 

சுதேசமித்திரனில்  இருந்து இந்தியாவுக்கு...

ஒருகட்டத்தில், ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர் அரசியலில் கோபால கிருஷ்ண கோகலேயின் மிதவாதக் கொள்கையைப் பின்பற்றுவது பாரதிக்குப் பிடிக்காததால் சுதேசமித்திரனிலிருந்து வெளியேறினார்.1906-ஆம் ஆண்டு சென்னையில் துவக்கப்பட்ட “இந்தியா” பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். “இந்தியா பத்திரிகை ஒருவருடைய சொந்த லாபத்தின் பொருட்டாக ஏற்பட்டதன்று. ஒருவருடைய பொழுதுபோக்கே னும் ஜீவனமேனும் நோக்கமாகக் கொண்டும் இப்பத்திரி கையை நாம் ஆரம்பிக்கவில்லை. பாரத தேசம் ஸ்வராஜ்யம் பெறவேண்டுமென்ற ஒரே தாகத்துடன் இப்பத்திரிகை வாரந்தோறும் பிரசுரமடைகிறது.” என்று அறிவித்தார் பாரதி. (1908 நவம்பர் 7)

பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியா பத்திரிகைக்குக் கடும் நெருக்கடியும் மிரட்டலும் விடுத்ததால் இந்தியா பத்திரிகை  பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1908-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. பத்திரிகை புதுச்சேரியிலிருந்து வெளிவந்தபோது அதன் முகப்புப் பக்கத்தில் மேலே சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் என்ற வார்த்தை கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த  வார்த்தைகள் பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கமாகும். இதை பாரதியின் இந்தியா தனது இலட்சியமாகப் பொறித்துக் கொண்டது! பத்திரிகைப் பணியின் மூலமாக இந்தியாவின் மற்றும் உலகின் அரசியல், சமூக நடப்புகளையும் போக்குகளையும் உன்னிப்பாகக் கவனித்து அறிந்தார் பாரதி. தினமும் இரவில் ஆங்கிலப் பத்திரிகைகளை வாசிப்பார். முக்கிய மான செய்திகளைச் சிவப்புக் கோடிட்டுக் குறித்துக் கொள்வார். பயோனீர், ஸ்டாண்டர்டு, மெயில், அமிர்த பஜார், வந்தே மாதரம் ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளைத் தினமும் வாசிப்பது வழக்கம்.

1910 பத்திரிகைச் சட்டம்

பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து தேச சுதந்திரத்திற்காகக் குரல் எழுப்பும் பத்திரிகைகளுக்கு எதிராக 1910-இல் பிரிட்டிஷ் அரசு பத்திரிகைச்  சட்டம் என்பதன் பேரால் கொண்டுவந்த அடக்குமுறைச் சட்டத்தினால், பிரெஞ்சுப் புதுச்சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இந்தியா பத்திரிகை தடுக்கப்பட்டது. இதனால் பத்திரிகைக்குப் பெருத்த நஷ்டம். பத்திரிகை நிறுத்தப் பட்டது. 1920-இல் பாரதி மீண்டும் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் துணையாசிரியாகப் பணியில் சேர்கிறார். சுதேசமித்திரனில் பாரதியின் எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவரலாயின. இப்போது சுதேசமித்திரன் ஆசிரியர் ரங்கசாமி அய்யங்கார். ஜி.சுப்பிரமணிய அய்யர் ரங்கசாமி அய்யங்கார்க்குப் பத்திரிகை அச்சகத்தை விற்றுவிட்டி ருந்தார்.

‘ஸ்ரீ மான் லெனின்’

சுதேசமித்திரனிலும், இந்தியாவிலும் பாரதி பணி யாற்றிய காலத்தில் அவர் எழுதாத பொருளில்லை. அன்றைய இந்திய, உலக அரசியல் நிலைமைகளை  கூர்ந்த ஞானத்துடன் எழுதினார். தேசியம், தேசபக்தி, அரசியல், சமூகம், பெண் விடுதலை, தமிழ்மொழி, இதி காசம், இயற்கை, ஆன்மிகம் என விரிந்த பரப்பில் அறிவைப் பாய்ச்சி கவிதைகளாக-கட்டுரைகளாக எழுதிக் குவித்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக லெனின் தலைமையி லான ரஷ்யப் புரட்சியைக் கவிதையால் வாழ்த்தியதுடன் கட்டுரைகளிலும் புரட்சியை அகம் மகிழ்ந்து பாராட்டியவர் பாரதிதான். உலக முதலாளித்துவக் கூட்டம் செய்த துஷ் பிரச்சாரத்திற்குப் பதிலடி கொடுத்து எழுதினார். புரட்சி நாயகன் லெனினை “ஸ்ரீமான் லெனின்” என்று போற்றி னார்; கார்ல் மார்க்ஸின் கட்டுரையைப் படித்த பாரதி, 1909 ஏப்ரல் 10-ஆம் தேதிய இந்தியா பத்திரிகையில் “ஐரோப்பா வில் சோஷலிஸ்ட் மார்க்கத்தார்க்கு மூலகுருவாகிய கார்ல் மார்க்ஸ்” என்று மார்க்ஸை மிகச் சரியாகப் பெருமிதத்து டன் குறிப்பிட்டு எழுதினார்.

பெண்ணுரிமை  முழக்கத்தின் நாயகன்

பெண்ணின் பெருமையையும், பெண் விடுதலை யையும், ஆண்-பெண் சமத்துவத்தையும் பேசுவதற் கென்றே ‘சக்கரவர்த்தினி’ என்ற பத்திரிகையைப் பயன்படுத்தி னார் பாரதி. 

பாரதி “பெண் விடுதலை வேண்டும்” என்றார்; “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்றார்.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” -
என்று  முழங்கினார்.

பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், மதுக்கடை களை மூடவும் வலியுறுத்தி சென்னைக் கோட்டையை நோக்கி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய நானூறு கிலோ மீட்டர் நடைப்பயணத்தை இன்று அந்த மகாகவி இருந்திருந்தால் களத்திற்கு அவரே மகிழ்வோடு வருகைதந்து  - கவிஇசைத்து வாழ்த்தி - கொடி அசைத்துப் பயணத்தைத் துவக்கிவைத்திருப்பார்!



 

;