tamilnadu

img

மக்களின் பாடுகளை நமது குரல்கள் ஒலிக்கட்டும்

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் அந்த தேர்தலில் போட்டி எவ்வாறு இருந்தது என்பதுகுறித்து ஆழமானதொரு பரிசீலனை செய்யப்படும்.உலகப் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் காலகட்டத்தில்வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி, இத்தகைய ஆய்வை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.  யார் யாருக்கு எதற்காக வாக்களித்தார்கள், பல்வேறு கருத்துக் கணிப்புகள், எக்சிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மற்றும் அவற்றில் காணப்பட்ட பாரபட்சங்கள் ஆகியவற்றை ஆராய்வதோடு மட்டுமின்றி, தேர்தலில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள், இப்பிரச்சாரங்கள் எத்தகைய மக்களை இலக்காகக் கொண்டிருந்தது, இந்தப் பிரச்சனைகள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதற்கான பின்புலம் என்ன ஆகியவற்றைப் புரிந்து கொள்ள தேர்தல் பிரச்சாரங்கள் மிக நெருக்கமாக ஆராயப்படுகின்றன.  இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் இத்தகைய ஆய்வைமேற்கொள்ள நமக்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

வர்க்க குணாம்சமும், பிரச்சாரமும்
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வர்க்க குணாம்சமே அக்கட்சியின் தேர்தல் உத்தியை தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை ஆற்றுகிறது.  தேர்தல்கள் எல்லாம் கார்ப்பரேட்மயமாகிப் போய், ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களிடமும் தேர்தல் பிரச்சாரங்கள் ‘அவுட்சோர்சிங்’ செய்யப்பட்ட பின், உத்தரவாதம் செய்யப்பட்ட‘லாபத்துடன்’ தேர்தலில் வாக்காளர்களிடம் ‘விற்பனை’ செய்யப்பட வேண்டிய ‘பொருட்களாக’ அரசியல் கட்சிகள் மாறிப் போயின.  இத்தகையதொரு சூழலில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் சுரண்டும் வர்க்கத்தினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதால், தத்துவம், பிரச்சனைகள், மக்களின்கவலைகள் என்பன எல்லாம் பின்னுக்குப் போய்விடுகின்றன.இதன் காரணமாகவே, தங்களது தேர்தல் உத்திகளை வகுத்திடஆளும் கட்சி அணுகியுள்ள அதே ஆலோசக நிறுவனத்தை எந்த தயக்கமும் இல்லாமல் எதிர்க்கட்சிகளும் கூட அணுகுகின்றன.கார்ப்பரேட்மயமாகிப் போன தேர்தல்களிலும் கூட ‘அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது’ என்ற பரிசைத் தட்டிச் செல்ல முயல்கிற அரசியல் கட்சி ‘பொருளாக’ இருக்கையில், பிரச்சனைகளை முற்றிலுமாக தொடர்பற்றவையாக செய்திடஇயலாது. எனவேதான் தேர்தல் சமயத்தில் காலதாமதமாகவோ அல்லது மிதமிஞ்சிய முறையிலோ மட்டுமே பிரச்சனைகள் குறிப்பிடப்பட்டதைப் பார்க்கிறோம். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை விட பணம், அடையாளங்கள் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  ‘வணிகத்தில்’ தேர்தல்கள் என்பன விரிவானநடவடிக்கைகளாக ஆகிவிடுகின்றன.  எனவே, ‘தேர்தல் பிரச்சாரமாக’ அவை இருப்பதில்லை. மாறாக, ‘தேர்தல் நிர்வாகம்’என மாறிவிடுகின்றது.

பெருக்கெடுத்து ஓடிய பணம்

ஒவ்வொரு தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் பார்க்கும்போது, தேர்தல்கள் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றாக மாறிவருகின்றன.  பிரச்சாரத்திற்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலவு செய்வதுடன், எப்படியேனும் வெற்றி பெற்றிட இன்னும் கூடுதலாக பணம் அள்ளி வீசப்படுகிறது.  மே21ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த தேர்தலின்போது மூவாயிரத்து நானூற்றி ஐம்பத்தெட்டு கோடி பணமாகவும், பொருளாகவும் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது. 5000 கோடி ரூபாய் சமூக வலைதளத்தில் மட்டும் செலவிடப்பட்டிருப்பதாக ஊடக ஆய்விற்கான மையத்தின் மதிப்பீடு தெரிவிக்கிறது. (2014 தேர்தல்களின்போது இது வெறும் 250 கோடியாகவே இருந்தது.  தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் இட நேர மற்றும் இட ஒதுக்கீட்டை ஏற்பாடு செய்துதரும் நிறுவனமாகிய ‘ஜெனித் இண்டியா’ எனும் நிறுவனம்இந்த தேர்தல்களின்போது 2600 கோடி ரூபாய் விளம்பரத்திற்கென செலவிடப்படும் என மதிப்பீடு செய்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2014ஆம் ஆண்டில் பாஜகமற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயைச் செலவிட்டன.  தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு ஊடகதளங்களை எவ்வாறு பயன்படுத்தின என்பது பற்றிய புள்ளிவிவரங்களை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டது.  ‘கூகுள்மற்றும் முகநூல்’ ஆகியவற்றில் மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும் விட கூடுதலாக பாஜக செலவிட்டது.  பாஜக டிவிட்டரில்செலவிட்டதைப் போன்று 9 மடங்கு காங்கிரஸ் செலவிட்டது என அந்த அறிக்கை சொல்கிறது.  எவ்வளவு அதிகமாக தேர்தலில்நீங்கள் பணம் செலவழிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள்வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

வார்த்தை ஜாலங்கள்

பணபலம் மட்டுமின்றி, மக்களின் மனதில் செல்வாக்கு செலுத்தி, அவர்களது வர்க்கத்தின் ஆட்சி நீடிப்பதை எவ்வாறுஉத்தரவாதம் செய்வது என்பதற்கான உத்திகளும் அரசியல்கட்சிகளுக்கு உருவாக்கப்படுகின்றன.  2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின்போது தலா 5 பிரச்சாரக் கூட்டங்களில் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்களை இந்தியா டுடேயின் தகவல் உளவுத் துறை பிரிவு ஆய்வுசெய்தது.  2014ஆம் ஆண்டில் மோடி பேசிய 5 கூட்டங்களில்முக்கிய அழுத்தம் ‘ஏழை’ என்ற வார்த்தைக்கு கொடுக்கப்பட்டது.  அவரது பேச்சில் இந்த வார்த்தை மட்டும் 55 முறைஇடம்பெற்றிருந்தது.  ஆனால், 2019ல் இந்த வார்த்தை 44 முறைமட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது.  2019 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வறுமை மற்றும்வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகள் விரிவாகவிவாதிக்கப்படவில்லை.  மேலும் பிரதமர் மோடியின் சமீபத்தியஉரைகளிலும் இவை இடம்பெறவில்லை. 2014ஆம் ஆண்டில் ‘வறுமை’ பற்றி 19 முறை குறிப்பிட்ட மோடி, 2019ஆம் ஆண்டு பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது வெறும்மூன்று முறை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.  அதே போல்,2014ஆம் ஆண்டில் 6 முறை குறிப்பிடப்பட்ட ‘வேலையில்லாத் திண்டாட்டம்’ 2019இல் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை.  2014இல் ஊழல் பற்றி 10 முறை பேசியபோதும், 2019இல் வெறும் 6 முறை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.  வேலையின்மை, வறுமை ஆகிய மக்களை வாட்டும் பிரதானபிரச்சனைகள் பற்றி பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் எதுவுமேகுறிப்பிடவில்லை என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. மேலும், இவற்றிற்கு பதிலாக மோடி தன்னுடைய பேச்சுக்களில் எத்தகைய பிரச்சனைகளை முன்வைத்தார் என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு பிரச்சனையை உருவாக்குகிறது என 2014 தேர்தல் பிரச்சாரங்களின்போது 4 முறை குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2019இல் 15 முறை குறிப்பிட்டார்.  2019 தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் உரையில் இடம் பிடித்த‘பாகிஸ்தான், தீவிரவாதம்’ ஆகிய வார்த்தைகள் 2014 தேர்தல்களின்போது அவரது பேச்சுக்களில் இடம் பெற்றிருக்கவில்லை.  2014 தேர்தல்களின்போது ’தீவிரவாதி’ என்றசொல் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றிருந்தது.  ஆனால், 2019 தேர்தல் பிரச்சாரங்களில் ‘தீவிரவாதம்’, ‘தீவிரவாதி’ ஆகியவார்த்தைகள் 24 முறை இடம் பெற்றிருந்தன.  இவ்வாறாக,மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சனைகளிலிருந்து ‘தேசப் பாதுகாப்பு’ நோக்கி பிரதமர் தனது பேச்சுக்களைமாற்றினார்.  ‘தேசப் பாதுகாப்பு’ பற்றி தேர்தல்களில் விவாதிக்கக் கூடாதுஎன யாரும் குறிப்பிடவில்லை.  ஆனால் பிரச்சனை என்னவெனில், ‘தேசப் பாதுகாப்பு’ என்ற வார்த்தையை ‘போர்’ என்றவார்த்தையோடு ஒத்ததாகவும், சிறுபான்மையினரை – இங்கே இஸ்லாமியர்களை – ‘அந்நியர்கள்’ என பொருள் கொள்ளச் செய்வதேயாகும்.  உழைக்கும் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களில் வர்க்க ஒற்றுமை வலுப்பட்டுவருவதை காண முடிந்தது.  இவ்வாறு அதிகரித்து வரும் வர்க்கஒற்றுமையை சீர்குலைக்கவும், மக்களின் மனக்கவலையை அவர்களது வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவுமே இத்தகைய பிரிவினைவாத கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. ‘அச்ச உணர்வு முன்னுக்கு மேலோங்கி வந்தால் இதர சிந்தனைகளும் உணர்வுகளும் வேகமாகஒதுக்கித் தள்ளப்படுகின்றன’ என அமெரிக்க உளவியலாளர்கள் அமைப்பின் முன்னாள் தலைவர் ராய் ஐடெல்சன் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ‘உணர்ச்சிகள் தட்டி எழுப்பப்படும்போது நம் முன் வைக்கப்படும் விஷயங்களின் உண்மையான தரத்தை நாம் மறுதலித்திட நேரக்கூடும்.  மேலும், ‘சிந்தித்து, தெளிவாக பார்ப்பதற்கான நமது திறனையும் அது இழந்திடச் செய்யும்’ என அவர் குறிப்பிடுகிறார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்களை ஆய்வு செய்த இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் (மே 22), கீழ்க்காணும் கருத்தை தெரிவித்துள்ளது. “தேர்தல்களுக்கான தனது கருப்பொருட்களை பாஜக சுருக்கிக் கொண்டது.  தேசியவாதம் எனத் தொடங்கி, முந்தைய‘பலவீனமான’ அரசுகளுடன் ஒப்பீடு செய்து தனது வலுவானபதிலடியைத் தரக் கூடிய ஒரு வலுவான அரசை மோடி எவ்வாறு வழிநடத்துகிறார் என பாஜக தனது பிரச்சாரங்களில் பேசியது.  பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன், பாஜகவின் பிரச்சாரங்கள் மிகுந்த கசப்பானவையாகவும், தனிநபர்தாக்குதல்களாகவும் மாறிப் போயின. வலுவான பெரும்பான்மையினர் என்றும் இக்குரல் ஒலிக்கத் துவங்கியது.   மறுபுறத்தில்காங்கிரஸ் கட்சியோ, எங்கே தனக்கு ‘இந்து விரோதி’ என முத்திரை குத்திவிடுவார்களோ என அஞ்சி மதச்சார்பின்மை – மதவாதம் ஆகியன குறித்து விவாதிப்பதிலிருந்து விலகி நின்றது.  தேச விரோதி அல்லது பாகிஸ்தான் ஆதரவாளர் என்று தான் முன்னிறுத்தப்படுவோமோ என்ற அச்ச உணர்வுடன், துவக்கத்தில் ‘தேசியம்’ குறித்தும் பேசாமல் காங்கிரஸ் விலகி நின்றது.  ஆனால் இறுதியில், தனது அரசும் பல்வேறுதுல்லிய தாக்குதல்களை நடத்தியிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சொல்ல வைத்தது.பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் கட்சிகளே ஆகும்.  காங்கிரஸ் கட்சியைப் போல்இல்லாது, பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் வெறித்தனமான மதவாத கட்சி பாஜக என்பதே இவ்விருகட்சிகளிடையே காணப்படும் வேறுபாடாகும்.    

உண்மையான மாற்று
எனவே மக்களுக்கான உண்மையான மாற்றைஎழுச்சி பெறச் செய்யவும், சிபிஐ(எம்)மற்றும் இதர இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களால் மட்டுமே பாஜகவை முழுமையாக – அரசியலாக, சமூக தளத்தில், தத்துவார்த்த ரீதியில், பொருளாதார ரீதியில் மற்றும்தேர்தல்களில் – தோற்கடிக்க இயலும். இது மிகப் பெரிய கடினமான ஒன்றாகத் தோன்றக் கூடும். ஆனால், நமது வர்க்கம்மற்றும் அதன் பன்முகத்தன்மையிலான போராட்டங்கள் எனும் நமது பலங்களின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் இது சாத்தியமாகும். தேர்தல்களும் கூட உண்மையிலேயே ஜனநாயகப்பூர்வமானவையாகவும், பிரதிநிதித்துவத் தன்மையோடும் இருந்திட இவை அவசியமாகும். எப்போதுவலுவான எதிர்ப்பு இல்லாது, எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாதுமௌனம் காக்கின்றனவோ அப்போதுதான் ஒரு சிறு குழுவினர் தங்களது அடக்குமுறைகளை நீடித்திருக்கச் செய்ய இயலும் என்பதை நாம் ஒருபோதும் மறந்திடலாகாது. எது வேண்டுமானாலும் நடக்கட்டும். சுரண்டலுக்கு ஆளாகும் மக்களின் பாடுகளை எப்போதும் நமது குரல்கள் ஒலிக்கட்டும்.

;