tamilnadu

img

பெரும் லாபம் ஈட்டும் பிபிசிஎல் தனியார்க்குத் தாரைவார்ப்பதா? - எளமரம் கரீம் எம்.பி.,

பெட்ரோலிய உற்பத்திப் பொருள்களின் விற்பனையில்  24 சதவீதம் பாரத் பெட்ரோலியக் கார்ப்பரேஷனுடையதாகும். 5000 கோடி ரூபாய்க்கு மேல் வருடாந்திர லாபம் ஈட்டுகிற கம்பெனிகள்தான் ‘மகாரத்னா’ பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. 2015-ஆம் ஆண்டுமுதல் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தொடர்ச்சியாக மகாரத்னா தகுதியில் உள்ளது.

தேசத்தின் மிகப்பெரிய பெட்ரோலியக் கம்பெனி யாகிய பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (பிபிசிஎல்) தனியார் ஏகபோக முதலாளிக்கு விற்ப தற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முடிவுசெய்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் “மகாரத்னா” என்ற அந்தஸ்து பெற்றுள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். உலகமயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்கள் விற்கவோ, மூடவோ செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இப்போதோ பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிற பொதுத்துறைக் கம்பெனிகளே விற்கப்படுகின்றன. தேசத்தின் அடிப்படைத் தொழிலாக விளங்கும் பொதுத்துறை களும் தனியார்மயம் ஆக்கப்படுகின்றன.

ஆறாவது பெரிய நிறுவனம்

1976-இல் ‘பர்மாஷெல்’ என்கிற தனியார் கம்பெனி அரசுடைமையாக்கப்பட்டு அது ‘பாரத் ரிஃபைனரீஸ்’ என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனமாக ஆக்கப்பட்டது. பிறகு 1977 ஆகஸ்டில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் மூலம் அது ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ ஆக மாற்றப்பட்டது. 1903-இல் இந்தியாவில் செயல்படத் துவங்கிய பர்மா ஆயில் கம்பெனி என்ற பிரிட்டிஷ் கம்பெனி பின்னர் விரிவாக்கப்பட்டு 1952-இல் ‘பர்மாஷெல்’ ரிஃபைனரீஸ்’ என்ற பெயரில் மாறியது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தக் கம்பெனிக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏராளமான நிலங்கள், கட்டடங்கள், கேஸ் பிளான்ட்டுகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் முதலானவையும் உண்டு. நியூ மாலிகர் ரிஃபைனரி, பீனா ரிஃபைனரி, மும்பை ரிஃபைனரி, கொச்சின் ரிஃபைனரி ஆகியவை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் உடைமையாக உள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அருகில் பெரும் ஸ்டோரேஜ் ஏற்பாடுகளும் விற்பனை மையங்களும் அமைந்துள்ளன. இந்த நான்கு கம்பெனிகளின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் ஒரு வருடத்தில் 38 .3 மில்லியன் மெட்ரிக் டன்னாகும். 2018-19இல் அதன் மொத்த விற்று வரவு 337622. 53 கோடி ரூபாயாகும். 1991 முதல் இன்றுவரை மத்திய அரசு ‘எக்ஸலன்ட்’ ரேட்டிங் கொடுத்துக் கொண்டிருக்கிற  நிறுவன மாகும் இந்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். இது இந்தியாவின் மிகப்பெரிய ஆறாவது தொழில் நிறுவனம்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தொடர்ந்து லாபத்தில் இயங்கிவருகிறது. நேர்முக-மறைமுக வரிகள், விற்பனை வரி முதலான இனங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கம்பெனி மிகப்பெரும் தொகையை அரசின் கஜானாவுக்கு வழங்கி வருகிறது. பெட்ரோலிய உற்பத்திப் பொருள்களின் விற்பனை யில் 24 சதவீதம் பாரத் பெட்ரோலியக் கார்ப்பரேஷனுடை யதாகும். 5000 கோடி ரூபாய்க்கு மேல் வருடாந்திர லாபம் ஈட்டுகிற கம்பெனிகள்தான் ‘மகாரத்னா’ பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. 2015-ஆம் ஆண்டுமுதல் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தொடர்ச்சியாக மகாரத்னா தகுதியில் உள்ளது. 

13,000 நிரந்தரத் தொழிலாளர்களும் இருபதாயிரத்திற்கு மேல் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இந்தக் கம்பெனியில் பணியாற்றுகிறார்கள். பொதுத்துறைக் கம்பெனி என்பதால் இடஒதுக்கீடு முறையில் பணிநியமனம் செய்யப்படுகிறது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கான இடஒதுக்கீடு தனியார் தொழில்களில் நடைமுறையில் இல்லை.

ரிலையன்ஸின் கைகளில் சேர்க்கும் முயற்சி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் அரசுக்கு இருக்கும் பங்குகள் 53.29 சதவீதமாகும். அது முழுவதை யும் தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு விற்பதன் மூலம் பொன் முட்டை இடுகிற வாத்தையே மோடி அரசு கொல்கிறது. பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எக்ஸோன் மொபில், ஆரம்கோ, இந்திய ஏகபோக நிறுவன மாகிய ரிலையன்ஸ் முதலான கம்பெனிகள் பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேஷனைச் சொந்தமாக்குவதற்கு அலைகின்றன. பின்வாசல் வழியாக இந்தப் பொற்கனியை ரிலையன்ஸின் கைக்குப் போகச்செய்வதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளதென்ற சந்தேகம் உள்ளது.

ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் கம்பெனி சுமார் 65 பில்லியன் டாலர் கடனில் உள்ளது. ஸ்டாண்டர்ட் அண்டு புவர் போலுள்ள ரேட்டிங் ஏஜென்ஸிகள், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் ரேட்டிங்கைக் குறைத்தால் சலுகை விலைக்கு இந்தக் கம்பெனியின் சொத்துக்களைக் தங்கள் கைவசம் ஆக்குவதற்குத் தனியார் ஏகபோக முதலாளி களால் முடியும். இப்போது மத்திய அரசின் முயற்சி ரிலை யன்ஸின் கைகளில் கம்பெனியைச் சேர்ப்பதாக உள்ள தென்கிற சந்தேகம் வலுவாக உள்ளது. தேசிய சந்தையில் எண்ணெய் விற்பனைத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத ரிலையன்ஸ்-க்குப் பாரத் பெட்ரோ லியக் கார்ப்பரேஷனைச் சொந்தமாக்கினால் 24 சதவீத சந்தை விகிதத்தை ரிலையன்ஸ் கைவசப்படுத்தும் நிலை ஏற்படும். இந்த முயற்சி தேச நலனுக்குத் தீங்காகும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனியார்மயம் ஆக்கப்பட்டால் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்குக் கிடைத்துவருகிற மானியங்களை இழந்துவிடுவார்கள். பங்குகள் மூலம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்காளியாக உள்ள பெட்ரோநெட் எல்என்ஜி என்ற கம்பெனியும் தனியார் ஏகபோக முதலாளியின் கைவசம் ஆகிவிடும். இயற்கை எரிவாயு விநியோகிக்கிற இந்த நிறுவனம் தனியார் கம்பெனி யின் உடைமையாக ஆகிவிட்டால் அது கேரளம் உள்பட தேசத்தின் தொழில்மயத்தையும், மக்களின் நலன்களையும் மோசமாகப் பாதிக்கும்.

பகுதி மக்களின் நன்மைக்காக

கொச்சின் ரிஃபைனரி சிஎஸ்ஆர் நிதியாக 2018-2019ல் கேரளத்தில் மட்டும் செலவழித்தது 28 .4 கோடி ரூபாயாகும். கம்பெனியின் சுற்றுப்புறப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக இந்தப் பணம் செலவழிக்கப் பட்டது. எந்தத் தனியார் கம்பெனி இவ்வாறு  பொதுமக்க ளின் நன்மைக்காக பணம் செலவழிக்கிறது? கொச்சி ரிஃபைனரியின் சுத்திகரிப்புத் திறன் அதிகரிப்பு வளர்ச்சித் திட்டம் சாதனை வேகத்தில் பூர்த்தியான பிறகு ‘பெட்ரோ கெமிக்கல் கிரேடு ப்ரொப்பிலின் - ஐப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஒரு பெட்ரோ கெமிக்கல் தொழில் நிறுவு வதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. எஃப்ஏசிடி-யின் கைவசம் உள்ள நிலத்திலிருந்து கேரள அரசு கையகப் படுத்திய நிலத்தில் 176 ஏக்கர் அம்பலமுகலில் நிறுவப்படும் பெட்ரோகெமிக்கல் தொழில் திட்டத்திற்காக வழங்கப்பட்டது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் வளர்ச்சித் திட்டங்க ளுக்கு ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனியார்மயமானால் மாநிலத்திற்குப் பெரும் பாதிப்பாகும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனைத் தனியார்மயம் ஆக்கும்போது அதன் பங்குகளெல்லாம் தனியார் ஏகபோகக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிடும். கொச்சி, கண்ணூர் விமான நிலையங்களில் எரிபொருள் வழங்குகிற முழு உரிமை இப்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷ னுக்கு உள்ளது. தனியார்மயமானால் அதுவும் தனியார் ஏகபோக முதலாளி கைவசம் போய்விடும். சர்வதேச எனெர்ஜி ஏஜென்ஸியின் கணக்கின்படி இந்தியாவின் எண்ணெய் உபயோகம் 2040ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும்  90 லட்சத்து 70 ஆயிரம் பேரல் ஆகும். தற்போது எண்ணெய் உபயோகம் 40 லட்சத்து 70 ஆயிரம் பேரலாகும். ஒவ்வோர் ஆண்டும் 5. 2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படு கிறது. அதேசமயம், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எண்ணெய் உபயோகம் குறையும் என்றும் ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்தச் சூழலில் இந்திய சந்தை வாய்ப்பைப் புரிந்துகொண்டு ஏகபோக பீமன்கள் நமது பொதுச்சொத்தைச் சலுகை விலைக்குக் கைவசப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

தேச நலனைப் பாதிக்கும் 

தனியார்மயத்தால் நாட்டின் எண்ணெய்ச் சுத்திகரிப்பும் விற்பனையும் பாதி அளவு ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்தில் போய்விடும். தொழிலாளர்களின் எண்ணிக்கை யிலும் குறைவு ஏற்படும்; தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்; புதிய வேலை வாய்ப்புகள் சுருங்கும்; தொழிலா ளர்களுக்குக் கிடைத்துவருகிற சலுகைகள் குறைக்கப்படும். அடிப்படையான இந்தத் துறையில் கொண்டுவரப்படும் தனி யார்மயம் தேசத்தின் நலன்களை மோசமாகப் பாதிக்கும்.

இந்திய மக்களின் நலன்களை மோசமாகப் பாதிக்கும் விதத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனியார்மயம் ஆக்கப்படுவதை எதிர்ப்பதற்கு மக்கள் எல்லோரும் முன்வர வேண்டும். ரயில்வே, பாதுகாப்புத்துறை உற்பத்தித் தொழில்கள், ஏர் இந்தியா, துறைமுகங்கள், நிலக்கரி ஆகிய வற்றில் ஆரம்பித்து தேசத்தின் மிக முக்கியமான துறைகளை யெல்லாம் தனியார்மயம் ஆக்குவதற்கு மத்திய பாஜக அரசாங்கம் முடிவுசெய்திருக்கிறது. முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மோடி அரசின் முதலாளித்துவக் கொள்கைக ளுக்கு எதிராக முழுசக்தியையும் திரட்டிப் போராட வேண்டும்!

நன்றி: தேசாபிமானி (22.10.2019) 
தமிழில்: தி.வரதராசன்



 

;