tamilnadu

img

‘கலவரக் கும்பலிடம் ஒப்படைத்துவிடவா?’ அச்சமூட்டிய போலீசார்... தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே - 6

காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. “யாராவது போக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினால் கழிவறை சென்று திரும்பும் வரையிலும்  கம்புகளால் அடித்து நொறுக்குவார்கள். “நான் எனதுகால்சட்டையிலேயே பல முறை சிறுநீர்கழித்தேன். நாங்கள் எதுவும் சாப்பிடவேயில்லை. எங்களுக்கு முதன் முதலாக உணவு 27ஆம் தேதி காலையில்தான் வழங்கப்பட்டது. பூரியும் சப்ஜியும். காவலில் இருந்தவர்களுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் இரண்டுமட்டும் கொடுக்கப்படும். அதனை அனைத்துகைதிகளும் தங்களுக்குள் நாள் முழுவதற்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். காவலில் இருந்தவர்களுக்கு இரவில் மிகவும் குளிரும், ஆனால் போர்த்திக் கொள்ள ஏதும் கிடைக்காது”.

27ஆம் தேதி இரவு காவலில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக் காக வடகிழக்கு தில்லியில் உள்ள ஜிடிபிமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். “ஐந்தந்து பேர்களை ஒரு குழுவாக்கி நடத்தினர்” என்கிறார் அந்த 17 வயது சிறுவன். “அந்தமருத்துவர் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தார்.அவர் என்னிடம் நான் வலியில் உள்ளேனா என்றுகேள்வி எதையும் கேட்கவில்லை. அல்லது எனக்கு காயம் இருக்கிறதா என்றும் கேட்கவில்லை. அவர் என்னை சோதிக்கவேயில்லை. அவர் ஒரு துண்டுத் தாளில் எதையோ கிறுக்கினார். பின்னர் நாங்கள் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டோம்”.

அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது அந்த சிறுவன் அழுது கொண்டிருந்தான். அவனை வழக்குரைஞர்கள் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். “நான் எதுவும் செய்யவில்லை, நான் வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன், அப்போது என்னைகாவல்துறையினர் தூக்கி வந்துவிட்டனர்” என்றான். வழக்குரைஞர்கள் அவனது குடும்பத்தினருடன் பேச வழி செய்து கொடுத்தனர். “அவனது தாயார் நீதிமன்றத்திற்கு ஆதார் கார்டுடன் வந்தார். மாஜிஸ்திரேட் அதனை பார்த்த பிறகு  சிறுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

மார்ச் மாத கடைசியில் அவன் அங்கிருந்துவிடுவிக்கப்பட்டான். “அன்றிலிருந்து நான் வெளியில் எங்கும் போவதில்லை. என்னை  மீண்டும் தூக்கி போய்விடுவார்களோ  என நான் அஞ்சிக் கொண்டிருக்கிறேன்”  என்கிறான் அவன். ஆகஸ்ட் முற்பகுதியில் தில்லி காவல்துறை அந்த சிறுவன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவன்  கலவரத்தில் ஈடுபட்டதாகவும், வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தி, இதர குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற வேண்டியுள்ளதால் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டனர்.

காவலில் இருந்த 4 முஸ்லிம்களை  பிப் 24 தேதி இரவு சித்ரவதை செய்ததாக கசூரி கஸ் பகுதியில் உள்ள  காவல்நிலையம் மீது மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்தது. முஷ்டகின் ஒரு ஆட்டோ ஓட்டுநர். பஜன்பூராவில் தர்கா அருகில் உள்ள ஒரு தெருவில் அன்று மதியம் நின்றுகொண்டிருந்த போது அவர் காவலர்களாலும் இந்த கும்பல்களாலும்  தாக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். அவர் தலையில் முஸ்லிம் குல்லா அணிந்திருந்ததை வைத்து அவரை அடையாளம் கண்டு கொண்டனர். காவலர்கள், முஷ்டகினிடம், அந்த கும்பலைக் காட்டி அவர்களிடம் உன்னை நாங்கள் ஒப்படைத்துவிடலாமா?” என்று கேட்டதாக முஷ்டகின் தெரிவிக்கிறார் . காவல்துறை அவரை கட்டாயப்படுத்தி, ஒரு கையில் கோடாரியுடன் இருக்குமாறு போஸ் கொடுக்கச் சொல்லி, அந்த கூட்டத்தினரை பார்த்து அதனை வீடியோவாக எடுக்க சொன்னார்கள் “அது முஸ்லிம்கள்தான் கலவரத்திலும் கொலை சம்பவங்களிலும்  ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்க”  என்கிறார். முஷ்டகின்கசூரி கஸ் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்படுகிறார்.

காவல்நிலையத்தில் முஷ்டகின், “நீளமான மற்றும் கனமான தோல் பெல்ட்டால்” அடிக்கப்பட்டதாகவும், அந்த பெல்ட்டில், “என்னை வந்து பார், என்னை காதலி, நாம் மீண்டும் எப்போது சந்திக்கலாம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். இக்ரம்என்ற தையல்காரரும் கசூரி கஸ் காவல்நிலையத்தில் கைது செய்து அடைக்கப்பட்டவர். அவரும் அன்று இரவு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். இக்ரம், முஷ்டகின் மற்றும் மேலும் இருவர், சஃப்ரஸ் மற்றும் அமன்ஆகிய இருவரும் அந்த காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு அவர்களோடு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

அந்த நான்கு பேர்களும் பின்னர் போடப்பட்ட எப்.ஐ.ஆரில் ஒட்டு மொத்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். முஷ்டகின் மற்றும்இக்ரம் இருவரும் 3 மாதம் சிறையில் கழித்து பின்னர் பிணையில் வந்ததாக தெரிவித்தனர்.இக்ரம் மீதான எப்ஐஆர்-இல் பஜன்புராவில் உள்ள ஒரு காவல்துறை அறையை(பூத்) தீயிட்டு கொளுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ‘காரவன்’ ஏற்கனவே பாஜன்பூரா காவல் அறைக்கு அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மற்றும் முஸ்லிம்களின் ஒரு தொழுகை இடம் ஒன்றையும் இந்து கும்பல்கள் தீயிட்டு கொளுத்தியதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் காவல்துறை அறையே கொளுத்தப்பட்டதாக எந்த செய்தியும் இதுவரை இல்லை.

===பிரபி ஜித் சிங், அர்சு ஜான்===

தமிழில்: க.ஆனந்தன்

... தொடரும்

;