கொரோனா தொற்று தமிழ்நாட்டு பெண்களை பாதிப்பதை காட்டிலும் தனியார் நுண் கடன் நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்கி பெண்கள் போராடும் செய்தியை கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உழைப் பாளி மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை ஏதும் செய்யாமல் நடைமுறைப் படுத்திய ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன. இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பெண்கள்கடனைத் திருப்பித் தர முடியாத நிலையில்இந்நிறுவனங்கள் பெண்களிடம் கடனைஅடைக்க சொல்லி நெருக்கடி கொடுத்து வரு
கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு விடுத்த அரசு உத்தரவு மூன்று மாதங்களுக்கு மக்கள்பெற்ற கடன்களை வசூல் செய்ய வேண்டாம்எனக் கூறியும் நுண் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து பெண்களை கடனை கட்ட கட்டாயப்படுத்துகிறது. இந்நிலையில் நுண் நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் மனோஜ்குமார் நம்பியார், பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கொரோனோ தொற்றுஎன்பது நகர்ப்புறம் சார்ந்த பிரச்சனை; கிராமமக்களிடம் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். நுண் கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்றபெண்கள் தங்களின் வறுமையை போக்குவதற்காக வாங்கிய கடன் தொகை தங்களின்வறுமையை போக்கமுடியாமல் மேலும் மேலும் கடன் பெற்று வாழ்நாள் முழுவதும்கடன் வலையில் சிக்கித் தவிக்கும் நிலையில், கொரோனோ நோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சமாளிக்க முடியாமல் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் நலிவடைந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் முக்கிய நோக்கம்
நமது நாட்டில் பெண்களுக்கான சுயஉதவிக்குழுக்கள் 1986 87 ஆம் ஆண்டுகளில்தொடங்கப்பட்டன. இதன் முக்கிய நோக்கம்கிராமப்புற ஏழை மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் உதவி அளிப்பதுகிராமப்புற பெண்கள் குழுவாக இணைந்து நேரடியாக அரசு வங்கிகளில் சேமிப்பு கணக்குத் தொடங்கி மாத சந்தா பணத்தை சேமித்து அதனை கொண்டும் வங்கிகள் தரும் கடனை கொண்டும் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடஊக்குவிக்கப்பட்டனர்.
மக்களையும் வங்கிகளையும் இணைக் கும் முக்கியப் பாலமாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இயங்கின. இவர்கள் மக்களுக்கு வேண்டிய திறனை வளர்க்க பல்வேறுதொழிற்பயிற்சிகளை அளித்து வந்தனர். இந்தியாவில் 3.3 கோடிப் பெண்கள் மகளிர்சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தத் திட்டம் தான் முதன்முதலாக கிராமப்புற மற்றும் ஏழைப் பெண் களுக்கு அரசு நேரடியாக கடன் அளிக்கும் திட்டமாக இருந்தது. இந்நிலையில் சிறப்பாகநடைபெற்று வந்த பெண்கள் சுய உதவிக் குழுக்களை அரசு திட்டமிட்டு அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் செயல்பட ஆரம்பித்தது.
சிறு நிதி வங்கிகள்
2013 ஆம் ஆண்டு வங்கித் துறையை தனியாருக்கு திறந்து விடுவது என்ற கொள்கை முடிவின்படி சிறு நிதி வங்கிகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் தனியார்வங்கிகள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி குறைந்தபட்சமாக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த வங்கிகள் செயல்பட அனுமதி அளிக் கப்பட்டது இந்தியாவில் இதுவரை 85 நிறுவனங்கள் நுண் கடன் வழங்கும் வங்கி நிறுவனங்களாக பதிவு செய்துள்ளன. இவற்றில்முக்கிய நிறுவனங்களாக எக்விடாஸ், ஜனலக்ஷ்மி, பந்தன் பேங்க், ஆசிர்வாத் உஜ்ஜிவன், கிராம விடியல், ஸ்மைல் சூரியா, ஐடிஎப்சி, எஸ்கேஎஸ் போன்றவைகளாகும். இந்த வங்கிகளை இந்தியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு சிறு வங்கி நுண் கடன் நிதி நிறுவனம் என்றபெயரில் ஏழை எளிய மக்களுக்கு கடன்வழங்கும் திட்டத்தோடு சிறிய கிராமங்களில் கூட தங்களுடைய செயல்பாட்டை தொடங்கி மக்களுக்கு சேவை அளிப்பதாக கூறி மக்களை தன் முழு கட்டுப்பாட்டில் சிக்கவைத்துள்ளன.
கழுத்தை நெரிக்கும் வட்டி விகிதம்
அரசின் பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கு ஆண்டுக்கு சராசரி வட்டி விகிதம்9% தான். செய்முறை கட்டணம், அபராதம்,கட்டாய காப்பீடு ஏதும் அரசு வங்கிகளில் இல்லை. ஆனால் தனியார் நிறுவனங்களில் கடன்களுக்கு ஆண்டுக்கு வட்டி 21 முதல் 26 சதவீதம் வரை உள்ளது. அதேபோல் நடைமுறையில் வாங்கிய கடனுக்கு வட்டி, காப்பீடு, செய்முறைக் கட்டணம், அபராதம் ஆகியவற்றை சேர்த்தால் 35% வரை மக்கள் கட்ட வேண்டி உள்ளது. மேலும் நபருக்கு நபர் வட்டியில் வேறுபாடுகள் காட்டப்படுகிறது. கடன் அளிக்கும் போது ஒரு வட்டியும் கடனை கட்டும்போது வேறு ஒரு ஒட்டியும் வாங்கப்படுகிறது. பல நுண் கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்காக எந்த நுண் கடன் நிறுவனம் மீதும் ரிசர்வ் வங்கி பெரிதாக எந்தநடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை.
9.79 கோடிப் பெண்களுக்கு...
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட நுண் கடன் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் 9.79 கோடி பெண்களுக்கு கடன்அளித்துள்ளது சுமார் ஆண்டிற்கு இரண்டு லட்சம் கோடி மதிப்பிலான கடன் தொகையை மக்களுக்கு அளித்துள்ளது .இவர்களின்ஆண்டு வளர்ச்சி விகிதம் 47.85 சதவீதம் ஆகும். ரூபாய் 83 ஆயிரத்து 876 கோடி மதிப்பிலான தொகையை தற்போது மக்கள் கடனாககையில் வைத்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான்இந்த நிதி நிறுவனங்கள் அதிகமாக பெண்களுக்கு கடனை கொடுத்துள்ளன. 1.83 கோடிப் பேர் கடன் பெற்றுள்ளனர். மேலும்இந்த நிதி நிறுவனங்களின் மிகப்பெரிய வெற்றி என்பது 98 சதவீத கடன் தொகையை இவர்கள் ‘திறமையாக’ மக்களிடம் வசூல் செய்து விடுகிறார்கள். மீதி இருக்கும் இரண்டு சதவீத வரா கடன்களைக் கூடகாப்பீட்டு நிறுவனங்களிடம் வசூல் செய்துவிடுகிறார்கள். வருடத்திற்கு ரூ.2 லட்சம் கோடியை இவர்கள் பெண்களிடம் கடனாகஅளிக்கும் போது சுமார் 25 சதவீத வட்டியை இவர்கள் பெற்றால் கூட ரூ.50,000 கோடி மதிப்புள்ள தொகை மக்களிடமிருந்து நுண்நிதி நிறுவனங்களுக்கு வட்டியாக கிடைக்கிறது.
காரணம் என்ன?
இந்த நுண்கடன் வங்கிகளின் ‘வெற்றி’க்கு மிக முக்கிய காரணம் ஏழைமக்களின் பணத் தேவைகளுக்கு அரசு வங்கிகளை அணுகும் பொழுது அரசு வங்கிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையும்அரசு ஏழைகளுக்கு கடன் வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதும் ஆகும் ஆனால்இந்த நுண் கடன் நிறுவனங்கள் மக்களின் வீடு தேடி வந்து கடன் கொடுக்கிறார்கள். ஏழை மக்களை நேற்று வரை வட்டி, மீட்டர்வட்டிக் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்; இன்று இதையே வர்த்தக ரீதியில் ஒழுங்குபடுத்தி சட்டப்பூர்வமாக நுண் கடன் வங்கிகள் மக்களிடம் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வறுமையின் கொடுமையில் நிற்கும் அப்பாவி மக்கள் தங்களின்ஒரே சொத்தான உழைப்பையும் வட்டியின்பெயரால் நுண்கடன் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு மீளவே முடியாத வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு ஏழைகளுக்கு இருக்கும் ஒரே நம் பிக்கை உழைப்பு. அந்த உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கின்ற கூட்டமாக இந்தநிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக அரசுத் துறை வங்கிகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பெரியநிபந்தனைகள் ஏதுமின்றி கடன் வழங்கவேண்டும். கிராமப்புற நகர்ப்புற பெண்களுக்கு அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த தொழில் சார்ந்த பயிற்சி அளித்துகடன் அளிக்க வேண்டும். மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேரிடர் காலங்களில் வட்டியில்லாக் கடன்களை வழங்க வேண்டும். மேலும் இத்தகைய மோசமான சூழலில் கடன் வசூலில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாநிலம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பு எண்கள் அறிவிக்கப்பட வேண்டும்.ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
==ஏ.ராதிகா===
மாநிலச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
#############
மைக்ரோ பைனான்ஸ் நெருக்கடி... பாதிக்கப்பட்டோருக்காக உதவி மையங்களை அமைத்தது வாலிபர் சங்கம்
மைக்ரோ பைனான்ஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதற்காக உதவி மையங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா பேரிடர் தொடர்ந்து நீடித்தும், உயர்ந்தும் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வாழ்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிலும், சுய உதவிக்குழுக்கள், நுண்நிதி நிறுவனங்களிலும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தி வரக்கூடியவர்கள் கடும் நெருக்கடியை இக்காலத்தில் சந்தித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும் பகுதியினர் இளைஞர்கள் ஆவர்.வேலைவாய்ப்பு இல்லாத சூழலிலும் இதனை கட்டவேண்டிய நெருக்கடியால் கடும் பிரச்சனைகள் உருவாகின்றன. மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த தீர்வும் உருப்படியானதாக இல்லை என்பது மட்டுமல்ல, மேலும் சுமையைஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மாதாந்திர தவணைதொகையை கட்டவில்லை என்று சொன்னால் கூடுதல் வட்டியும், கூடுதல் மாதாந்திரத் தவணைகளையும் கட்டக்கூடியநிலைமையை உருவாக்கியுள்ளது.
இதற்கு என்று உதவி மையங்களை (ஹெல்ப்லைன்) உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்ய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்வருகிறது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர், செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர்களை மாவட்ட வாரியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டுதங்கள் பிரச்சனையை சொல்வதற்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். மேலும் எங்களால் முடிந்த தலையீட்டை செய்வோம் என்பதையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.