tamilnadu

img

பேருக்கு ஊரடங்கு... யாருக்கு கொரோனா அச்சம்?

நாகப்பட்டினம்:
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கின் ஆரம்பக் காலக் கட்டத்தில் தில்லியூனியன் பிரதேச முதல்வர் கெஜ்ரிவால் கூறினார் “கொரோனாவோடு வாழப் பழகுங்கள்” என்று. இன்று அந்நிலை வந்துவிடுமோ என்றுதான் தோன்றுகிறது.மார்ச் 25 இல் முதல் கட்ட ஊரடங்கு துவங்கியபோது, நாகை மாவட்டத்தில் மொத்தம் 44 பேரே கொரோனா சிகிச்சையில் இருந்தார்கள். ஆனால், இன்று, எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. பார்க்கப் போனால்,பேருக்குத்தான் ஊரடங்கு இருக்கிறது. இளை ஞர்களிடம் இதுபற்றி எந்தவித எச்சரிக்கையும் விழிப்புணர்வும் காணப்படவில்லை.

விடுதிகளும் உணவு விடுதிகளும்
நாகப்பட்டினம், புதிய பேருந்து நிலையம் எதிரே 4 பெரிய லாட்ஜுகள் உள்ளன. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களி லிருந்து வந்தவர்கள் இந்த விடுதிகளில்தான் தனிமைப்படுத்தித் தங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். லாட்ஜுகளுக்கு வெளியே போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது. இதில்பெண் காவலர்களும் உண்டு. இந்தக் காவலர்கள் ‘நமக்கு எப்போது கொரோனா தொற்றுமோ’ என்னும் அச்சத்திலேயே இருக்கிறார்கள்.காவல் இருக்கும் இந்தக் காவலர்களையும் கடந்து, லாட்ஜுகளில் உள்ள கொரோனா தொற்றுள்ளவர்கள் மிக நாகரிக உடையில் அருகில் உள்ள ஹோட்டல்களுக்குக் கூட்டமாக வந்து உணவு உண்ணுகிறார்கள். எந்தக்கட்டுப்பாடும் இல்லை. நாகை புதிய பேருந்துநிலையம் அருகில் ஒரு பிரபலமான ஹோட்டல்இருக்கிறது. இந்த ஹோட்டல் அல்லாமல், அதன்4 கிளைகள் அருகருகே உள்ளன. லாட்ஜுகளில்உள்ளவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் ஒருமேஜையில் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இந்த ஹோட்டல்காரர்களுக்கு வியாபாரம்தான் முக்கியம். “ஏன் இப்படி இடைவெளி இல்லாமல் கூட்டமாகச் சாப்பிட அனுமதிக்கிறீர்கள்?” என்று பத்திரிகையாளர்கள், சமூகஆர்வலர்கள் கேட்டால், “நாங்கள் என்ன செய்யமுடியும்? அவர்களாகவே வந்து அமர்ந்து கொள்கிறார்கள்” என்று மிக அலட்சியமாகக் கூறுகிறார்கள்.

டாக்டர்களுக்கு கொரோனா
கொரோனாவின் தொடக்கக் காலத்தில் அமெரிக்கா போய் வந்த டாக்டர் குமரப்பா, தனக்குக் கொரோனா நோய்த் தொற்று உள்ளது எனத் தெரியாமல் பல பேருக்கு மருத்துவம் பார்த்தார். பின்புதான், அவருக்கே கொரோனா இருப்பது தெரிய வந்து, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது, நாகை நகராட்சி ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்து அந்த டாக்டரின் பெயரைக் குறிப்பிட்டு,அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என ஊர் முழுவதும் அறிவிப்புச் செய்யப்பட்டது. அவரது மருத்துவமனை, மருந்துக்கடை, வீடு எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டன.

தற்போது, நாகையில் பிரபலமாக உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் அன்சாரிக்கும் அவரது மருமகனுக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டு, திருச்சி மருத்துவமனையில் டாக்டர் அன்சாரி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அன்சாரியின் மனைவி நாகையில் அவரது இல்லத்தில் இறந்து விட்டார். அல்லும் பகலுமாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் அன்சாரிக்கு அவரது மனைவியின் மரணத்திற்கு வரமுடியாத துயர நிலை. அவரது மருத்துவமனை தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவந்த பலரது நிலை என்னாவாகும் என்பது கவலைக் குரியதாக உள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாதுறை மாவட்டப் பிரிவின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 30.07.2020 அன்றுநாகையிலும் மயிலாடுதுறையிலும் நடைபெற்றது. இவற்றில் தமிழக வருவாய்த் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அரசியல்கட்சிப் பிரமுகர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எனப் பலபேர் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டம் நடந்து 2 நாட்களில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு(சி.பி.ஐ.), மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்(திமுக), மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் (அதிமுக), நாகை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் முறையாக பரிசோதனை செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை பேருக்குத் தொற்று இருக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பொது
மக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டு, 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.

மீனவ கிராமங்களில் அபாயநிலை
நாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள மீனவகிராமங்களான நம்பியார்நகர், அக்கரைப் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்களுக்கு அண்மையில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அக்கரைப்பேட்டை யில் மீனவர்கள் 14 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மேலும் அதிகரிக்கக் கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்கள் மக்களுக்குக் கிடைக்காத நிலையும் அப்படிக் கிடைத்தால், மீன்களை வாங்குவதற்கு மக்கள் அச்சப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏன் இந்த நிலை? தம் பலம், தம் உடல்நலம் நிலையறிந்து முக்கியப் பிரமுகர்களும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் தம்மையும்காத்துக் கொள்ள வேண்டும்; மற்றவர்களை யும் காத்திட வேண்டும். ஆனால், இதனை யெல்லாம் மீறிப் பல முக்கியப் பிரமுகர்களும் அதிகாரிகளும் சில வணிக நிறுவனங்களும் ஆட்சி நிர்வாகமும் கொரோனா எச்சரிக்கை, விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக நடந்து கொள்வதால், கொரோனாவைச் சமூகப் பரவலாக்கும் அவல நிலை இன்று உருவாகி வருகிறது. “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்று எச்சரிக்கிறது திருக்குறள்.

===ந.காவியன்===

;