tamilnadu

img

பாட்டாளியின் தோழர் பாரதி..

இருநூறு ஆண்டுக்காலப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியப் பெருந்தேசத்தை விடுவிக்கும் வீரச் சமரில் எழுத்து ஆயுதம் ஏந்தியவர் மகாகவி பாரதி. சுதந்திரம் பெறுவது சர்வ நிச்சயம் என்கிற திடமனது அவருக்கு இருந்ததால்  ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று - தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே - கற்பனையில் மகிழ்ந்து பாடினார். வீரசுதந்திரம் வேண்டி மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் ஜனநாயகத்திற்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும்  போடப்பட்ட தடைகளைத் தகர்த்தெறிவதற்காகவும் கவிகளும் கட்டுரைகளும் தீட்டினார் பாரதி.

இத்தகைய சுதந்திரக் கவிஞனாகிய பாரதியின் சிந்தனை செந்தமிழ் நாட்டில் காலூன்றி, இந்தியாவைத் தழுவி, அதன் எல்லை கடந்து உலகெங்கும் வியாபித்திருந்தது.“ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின்  ஆட்சி பெரும்பாலும் சமத்துவக் கட்சியார், அதாவது போல்ஷ்விக் கட்சியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும், ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்தில் அதிகாரம் போல்ஷிவிஸ்ட்டுகளின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம் முதலாளிக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால், அங்கு கெரன்ஸ்கியின் ஆட்சி நீடித்து நடக்கவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பல வகைகளில் உதவி பெற்ற போதிலும்புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரைத் தப்பிவித்துக் கொள்ளும்பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய் நேச வல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுக நேரிட்டது.” 

ரஷ்யாவில் சோஷலிஸப் புரட்சி நடத்திய போல்ஷ்விக் கட்சியினரை (கம்யூனிஸ்ட் கட்சியினரை) பாரதி ‘சமத்துவக் கட்சியார்’ என்று அழைத்தார்.அந்தப் புரட்சியை ‘யுகப் புரட்சி’ என்று வர்ணித்தார். புரட்சியின் வீரநாயகனாம் லெனினை ‘ஸ்ரீமான் லெனின்’ என்று உயர்மதிப்போடு குறிப்பிட்டார். மார்க்ஸைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஐரோப்பியசோஷலிஸ்ட் மார்க்கத்தார்க்கு மூலகுரு கார்ல் மார்க்ஸ்” என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டார். பாரதிக்கு சர்வதேசப் பார்வை இருந்ததால்தான் இவ்வாறெல்லாம் அவரால் சொல்ல முடிந்தது.

“அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்    ஆயிரந் தொழில் செய்திடு வீரேபெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்    பிரம தேவன் கலையிங்கு நீரே!”

-என்று உழைக்கும் வர்க்கத்தைப் போற்றிப் புகழ் பாடினார் பாரதி. பாரதி வாழ்ந்த காலம் இந்தியாவில் பிரிட்டிஷ் முதலாளித்துவமும் உள்நாட்டு முதலாளித்துவமும் மோதிக்கொண்டிருந்த காலம். தொழிலாளி வர்க்கமும் தோன்றியிருந்த காலம். உலகில் பெரும் மாறுதல் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். ரஷ்யாவில் முதலாளித்துவத்தை வீழ்த்தி லெனின் தலைமையில் பாட்டாளிகள் சோஷலிஸப் புரட்சிநடத்தி வெற்றிபெற்ற காலம். இவற்றையெல்லாம் பத்திரிகையாளருமாகிய பாரதி நன்றாகவே அறிந்திருந்தார். 

போராடும் தொழிலாளர்களை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்
இந்தியாவில் தொழிலாளர்கள் மீதான ஆலை முதலாளிகளின் கொடுமைகளையும் காண்கிறார். இந்தியாவில்  முதலாளிகளின் கொடுமை தாங்க முடியாமல் வேறு மார்க்கம் இல்லாத நிலையிலேயே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குகிறார்கள் என்று கூறுகிறார். “இந்தியா”(12.6.1909) பத்திரிகையில்   “தொழில் நிறுத்திவிடுதல்”என்ற கட்டுரையில் பாரதி கூறுவதாவது:

“ஏழைத் தொழிலாளர்கள் சாமான்யத்திலே தமது ஜீவாதாரமாகிய தொழிலைக் கைவிட மாட்டார்கள். மேலேமுதலாளிகள் பொறுக்க முடியாத நிஷ்டூரங்கள் செய்தால்தான் இவர்கள் என்ன வந்தாலும் சரி நான் இவனிடம் வேலைக்குப் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும். அவர்கள் கையிலே வேலைநிறுத்தத்தைத் தவிர வேறு ஆயுதம் இல்லை. சகலவிதமான பலங்களும் முதலாளி பக்கத்திலேயிருக்கின்றன. ஆதலால், தொழில் நின்ற பிறகும் முதலாளி இலேசாக சமாதானத்துக்கு வரமாட்டான். தொழிலாளிகளின் வேண்டுதல்களுக்கு அவன் இணங்க மாட்டான். எப்படியும் இவர்கள் வறுமையின் கொடுமையால் நமது காலில் வந்து விழுவார்கள் என்பதை அவன் அறிந்திருக்கிறான். படிப்பு, அறிவு, யோசனை, பொருள் முதலிய அனைத்தும்முதலாளி பக்கத்திலிருக்கின்றது. தொழிலாளி பக்கத்திலேஅந்த சௌகரியங்களில் ஒன்றுமே இல்லை.  இந்தநிலையில் பொதுஜனச் சார்பும் முதலாளி பக்கத்தைச்சேர்ந்துவிடுமானால் தொழிலாளியின் பாடு அதோகதியாய்விடும். ஆதலால், ஏழைத் தொழிலாளிகள் வேறு உபாயமறியாமல் வேலை நிறுத்தும்போது பொதுஜனங்கள் அவர்களிடம் கோபங்கொள்ளாமலிருப்பது மட்டுமேயன்றி, அவர்களுக்குத் தம்மால் இயன்ற சௌகரியங்களெல்லாம் செய்துகொடுக்க வேண்டும். இதையெல்லாம் ஆலோசனை செய்தே தேசபக்த திலகமும், ஆபத்பாந்தவரும் ஆகிய ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலே கோரல் மில்ஸ் யந்திரசாலை விவகாரத்தில் தொழிலாளிகளின் பக்கம் அனுதாபஞ் செலுத்தினார். கஷ்டதசையி லிருப்பவர்கள் மீது இரக்கங் கொண்டு அவர்களுக்குத் துணைபுரியும் வழக்கத்தை நாம் எப்போதைக் காட்டிலும் இப்போது பலமடங்கு அதிகப்படுத்த வேண்டும்.”

பாரதி, தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் அவர்களின் போராட்டத்திற்குப் பொதுமக்களின் ஆதரவும் வேண்டுகிறார்.உழைப்பவரைச் சுரண்டி பணத்தில் கொழுப்பவர் மீதுகோபத்தை வெளிப்படுத்துகிறார். தமது ‘இந்தியா’ பத்திரிகையில் (ஜனவரி 5, 1907) “...இந்தச் சேம்பேறிகளைவிடக் கேடுகெட்ட சோம்பேறிகளாய் நமது தேசத்தில் எத்தனையோ பணக்காரர்களும் மிராசுதார்களும் ஜமீன்தார்களும் இருப்பதைப் பலவிடத்தும் காணலாம்.” என்றார்.தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத் தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டுதொழிற்சங்கம் உருவாக்கிக் கொள்வதை பாரதி வரவேற்றார். அதே தேதிய ‘இந்தியா’ பத்திரிகையில் அவர் கூறுவதாவது: “இப்போது நமது நாட்டில் ஆங்காங்கே பலதொழிற்சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன.இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும், வேலைநேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய்து கொண்டு வருகிறார்கள். இந்த பிரயத்தனங்களெல்லாம் முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை.”

பாரதியால் உபநயனம் செய்விக்கப் பெற்ற பட்டியலின இளைஞர் ரா.கனகலிங்கம் ஒருசமயம் பாரதியிடம், “சுவாமி, உங்கள் தேசிய கீதங்களை நல்ல இராகங்களில் பாடாமல் கும்மி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து முதலிய மெட்டுக்களில் ஏன் பாடுகிறீர்கள்?” என்று கேட்டாராம். அதற்குப் பாரதி, “என் பாட்டு தேசிய கீதமானதால் மூட்டைதூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் எல்லாரும் சுலபமாகப் பாடவேண்டும்” என்று பதிலளித்தாராம்.  தமது பாடல்கள் உழைக்கும் மக்களும் புரிந்து பயன்பெற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார் பாரதி. 

பாட்டாளிகளின் பாடலை ரசித்தார்
கிராமப்புறங்களில் உழைக்கும் மக்கள் பாடுபடுகிறபோது களைப்பு தெரியாமல் இருப்பதற்குப் பாட்டுப் பாடுவதுஉண்டு. அந்தப் பாட்டாளிகளின் பாட்டில் மனத்தைப் பறிகொடுத்தவர் பாரதி: ‘ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல் இடிக்கும் கோல் தொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும், சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும், பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம்ஒலிக்கக் கொட்டிஇசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும், வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டிலும் காட்டிலும் நாளெலாம் நன்று ஒலிக்கும் நாவு மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் பாவி மனம் தான்இறுகப் பற்றிநிற்பது என்னே
யோ?’ என்று ரசித்துச் சுவைத்துக் கூறுகிறார். 

நூறாண்டுக் காலம் பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த பிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் அடிமை உழைப்பு செய்திடஇந்தியாவிலிருந்து ஆட்சியாளர்களின் உதவியுடன் ஏமாற்று ஆசைவார்த்தைகள் சொல்லியும், மிரட்டி நிர்பந்தப்படுத்தியும் பிரிட்டிஷ் முதலாளிகளால் கொண்டு செல்லப்பட்ட பெண்களின் பரிதாபத் துயர நிலைமையைப் பற்றிப் பாரதி நெஞ்சுருகப் பாடினர்:

“ நாட்டை நினைப்பாரோ-எந்தநாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னைவீட்டை நினைப்பாரோ -–அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல்கேட்டிருப்பாய் காற்றே-துன்பக்கேணியிலே யெங்கள் பெண்கள் அழுதசொல்மீட்டும் உரையாயோ-அவர் விம்மி அழவும் திறங்கெட்டுப் போயினர்கரும்புத் தோட்டத்திலே...” -என்று நெஞ்சுருகிப் பாடிச் செல்கிறார் பாரதி. மக்கள் தலைவர்- தேசபக்தர் யார்?

மக்கள் தலைவருக்கு இலக்கணம் சொன்னார் பாரதி:“எவனொருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பதைப் பற்றி ராப்பகல் வருந்துகின்றானோ, எவனொருவன் இந்த முப்பது  கோடி இந்தியனும் வயிறார உண்பதற்கு உணவும், உடுக்க உடையுமின்றித் தவிக்கின்றார்களே என மனமிரங்கி கண் சொரிகிறானோ, எவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்டநஷ்டங்களும் தனக்கு வந்ததாய் எண்ணி அனுதாபிக்கின்றானோ, இன்னும் எவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டு தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கின்றானோ அவன் ஒருவனே ஜனத் தலைவனாவான். அவன் ஒருவனே தேசாபிமானியாவான்.”

அறிவாயுதத்திற்குத் தடையா...?
பிரிட்டிஷ் ஆட்சியாளரால் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு ஆபத்து நேர்ந்தபோது அதை எதிர்த்து மனம் கொதித்து எழுதினார் பாரதி. 13.2.1910 “சூரியோதயம்” பத்திரிகையில் பாரதி இவ்வாறு எழுதினார்: “பத்திரிகைச் சுதந்திரத்தை ஆங்கிலேய அதிகாரிகள் கருவறுக்கத் தீர்மானம் செய்துவிட்டார்கள். இதுபோன்ற விஷயங்கள் வரும்போது ஜனங்கள் எதிர்த்து மன்றாடுவதற்கு இடமில்லாதபடி தொடக்கத்திலேயே பொதுக்கூட்டங்களைத் தடுக்குஞ் சட்டத்தைப்பரவச்செய்து வைத்துவிட்டார்கள். பத்திரிகைச் சட்டமேற்படுத்தி சிறிதேனும் சுதந்திர உணர்ச்சியேற்படுத்தக்கூடிய பத்திரிகைகளையெல்லாம் அமுக்கிவிட நிச்சயம் கொண்டிருப்பதை நமது ஜனங்கள் வாயினால் கூடாதென்று சொல்லக்கூட வழியில்லாமல் போய்விட்டது. சரீர ஆயுதங்களை முன்னாளிலேயே பறித்துக் கொண்டார்கள். இப்போதுஅறிவின் ஆயுதங்களையும் பறிக்கப் பார்க்கிறார்கள்.” பத்திரிகைகளை பாரதி “அறிவின் ஆயுதங்கள்” என்கிறார்!

பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் தோழர் வி.சக்கரைசெட்டியார். இவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர்; சுதந்திரப் போராட்ட வீரர்; புதுச்சேரியில் பாரதிக்குத் தோழராக பாவேந்தர் பாரதிதாசன் கிடைத்தது போல் தமிழ்நாட்டில் சக்கரை செட்டியார் பாரதிக்குத் தோழராகக் கிடைத்தார்.  இவர், 1955 செப்டம்பர் 11 அன்று ஜனசக்தி வார ஏட்டில்  பாரதிநினைவு நாள் கட்டுரையொன்று எழுதியிருந்தார்: “ஜாதி,மத, இன வேறுபாடுகள் அற்ற ஒரு உன்னத புருஷன் அவர்.இந்தப் பண்பாடுகள் செறிந்த தேச பக்தியையே அவர் பின்பற்றினார்; வலியுறுத்தினார். சமத்துவம், அபேதம் என்ற கோட்பாடுகளை வெறும் சிந்தனையளவில் சிறைப்படுத்தி வைக்கவில்லை அவர். சொல்லிலும் செயலிலும் அவற்றை அனுசரித்து நடந்துவந்தார். அவரது லட்சியமான சமுதாய, பொருளாதார விடுதலையைப் பூர்த்திசெய்ய வேண்டிய பணி இருக்கிறது. தமிழ் மக்கள் தமது தனிப்பெருங் கவியான பாரதியாரின் பெருமைகளையுணர்ந்து அவரது நாமம் என்றென்றும் பசுமையுடன் உள்ளத்தில் குடிபெறும் வகையில் தொண்டாற்ற வேண்டும். வாழ்க பாரதி!”  

தொண்டாற்றுவோம்! பாரதி நினைவைப் போற்றுவோம்!

===தி.வரதராசன்===

;