tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டம் – பாஜகவின் பொய் பிரச்சாரத்தை எதிர்கொள்வது எவ்வாறு? பாகம் 4

இந்தியா பாகிஸ்தான் ஆகி விடுமா?

இந்தியாவில் 1947ஆம் ஆண்டு 9.5 சதவீதம் இருந்த முஸ்லீம்கள், 2011ஆம் ஆண்டில் 14.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறார்கள் என்று 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டுத் தரவுகளை மேற்கோள் காட்டி ஹிந்துக்களை அச்சுறுத்துகிறார்கள். 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை ஹிந்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகி இந்தியா முஸ்லீம் நாடாக மாறி விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இவர்களால் முன்வைக்கப்படுகின்ற இந்த அச்சுறுத்தலில் நியாயம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, மக்கள்தொகைப் பெருக்கம் என்பது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்வது நலம்.

மக்கள்தொகை வளர்ச்சி வேகம்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்பது இல்லாமல் முதல் கட்டத்தில் ஒரே சீரான அளவில் இருக்கின்ற மக்கள்தொகை, பின்னர் சற்றே அதிகரிக்கத் தொடங்கி இரண்டாவது கட்டத்தில், வெகுவேகமாக தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறது. எந்தவொரு மக்கள்திரளின் எண்ணிக்கையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயர்வதில்லை. அதற்கென்று ஒரு வரம்பு இருக்கும். அந்த வரம்பிற்கு மேலாக மக்கள்தொகை பெருகும் போது, அது தானாகவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மிகச் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் மூன்றாவது கட்டமாக ஒரே சீரான எண்ணிக்கையில்  வெகுகாலத்திற்குத் தொடரும். இந்த மூன்று கட்டங்களையும் வரைபடம் மூலம் தொகுத்தால் ’எஸ்’ வடிவ வளைகோடு கிடைக்கும்.  

image.png

மேலே இருக்கின்ற வரைபடம் 1750ஆம் ஆண்டு முதல் 2150ஆம் ஆண்டு வரைக்குமான நானூறு ஆண்டு கால உலகளாவிய மக்கள்தொகை பெருக்கத்தை விளக்குகின்றது. 1750 முதல் 1950 வரையிலுமான, இருநூறாண்டு கால முதல் கட்டத்தில் சுமார் 50 கோடியிலிருந்து 200 கோடி என்ற அளவிற்கு உயர்ந்த மக்கள்தொகை, பின்னர் அங்கிருந்து தொடங்குகின்ற இரண்டாம் கட்டமான 2100 வரையிலான நூற்றைம்பதாண்டு காலகட்டத்தில் 200 கோடியிலிருந்து 1000 கோடி என்பதாக அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மூன்றாவது கட்டத்தில் அதாவது 2100 முதல் 2150ஆம் வரையிலான ஐம்பதாண்டு காலகட்டத்தில் அதிக அளவில் மக்கள்தொகை பெருகாமல், 1000 கோடி என்பது 1100 கோடி என்ற அளவிற்கே அதிகரிக்கலாம் என்று இந்த படம் விளக்குகிறது. எந்தவொரு நாட்டையோ அல்லது இனக்குழுவையோ அல்லது எந்தவொரு மக்கள் தொகுதியையோ தனியாக எடுத்துப் பார்த்தால், இவ்வாறான முறையிலேயே மக்கள்தொகைப் பெருக்கம் இருக்கும். இரண்டாம் கட்டத்தில் இருந்த அதிவேகத்திலான மக்கள்தொகைப் பெருக்கம் மூன்றாவது கட்டத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்று சொல்வதைக் காட்டிலும், இருக்காது என்றே  உறுதியாகச் சொல்லாம்.

முஸ்லீம்களிடம் குறைந்து வரும் வளர்ச்சி வேகம்

ஹிந்துக்களின் மக்கள்தொகைப் பெருக்க வேகத்தை விட சற்றே அதிகமாக முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிக வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்த்தால், 2050ஆம் ஆண்டிற்குள் முஸ்லீம்களின் எண்ணிக்கை ஹிந்துக்களின் எண்ணிக்கையை மிஞ்சி விடும் என்று இவர்கள் சொல்வதெல்லாம் முற்றிலும் அபத்தமானது. ஒருவேளை ஹிந்துக்களின் மக்கள்தொகை மூன்றாவது கட்டத்தை எட்டியிருந்து, அப்படியே அதிகரிக்காமல் இருந்து, முஸ்லீம்களின் மக்கள்தொகைப் பெருக்கம் இரண்டாம் கட்டத்தில் உள்ளதைப் போன்ற அதிக வேகத்துடன் அதிகரிப்பது தொடர்ந்தால் இவர்கள் சொல்வது போன்று நடப்பதற்கு வாய்ப்ப்பு இருக்குமா என்றால் அப்படி இருப்பதற்கான வாய்ப்பும் நிச்சயம் இல்லை என்றே உறுதிபடச் சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதுதான் உண்மை. 1961-71இல் 20.76 சதவீதமாக இருந்த ஹிந்து மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி, 2001-11இல் 16.76 சதவீதமாக அதாவது நாற்பதாண்டுகளில் முன்பிருந்ததைவிட 20 சதவீதம் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் 1961-71இல் 32.49 சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி, 2001-11இல் 24.6 சதவீதமாக, அதாவது 25 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆக ஹிந்துக்களைக் காட்டிலும் கூடுதலாக முஸ்லீம்களின் மக்கள்தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் இவர்கள் இந்த 24.6 சதவீதம் (முஸ்லீம்கள்) என்பது 16.76 சதவீதத்தை (ஹிந்துக்கள்) விட கூடுதலாக இருக்கிறது என்பதை மட்டும் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

 

image.png

மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், பிறப்பு விகிதமும், இறப்பு விகிதமும் ஏறத்தாழ சமமாக இருக்க வேண்டும். அறிவியலும், மருத்துவமும் நன்றாக வளர்ந்துள்ள இந்த காலத்தில் இறப்பு விகிதமும், பிறப்பு விகிதமும் ஒருபோதும் சமமாக இருக்கப் போவதில்லை. இவையிரண்டும் குறைந்து கொண்டே போவதுதான் இன்றைய பொதுவான நிலைமை. இறப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் அதிகம் குறைந்து வருவதுதான் உலகளாவிய நிலைமை. ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை (ஒரு பெண்ணுக்கு பிறக்கின்ற குழந்தைகள்) குறைந்து கொண்டே போனாலும், மக்கள் தொகை அதிகரிப்பதற்கு இறப்பு விகிதம் குறைந்து கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. வயதானவர்களைக் கொண்டு நிரம்புகின்ற உலகம் தனது மக்கள்தொகையை குறைத்துக் கொள்வதே இறுதியில் நடக்கும்.

இதுமட்டுமல்லாது, மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கின்ற நாடுகளாக, பொதுவாக சமூக, பொருளாதார காரணிகளில் மிகவும் பின்தங்கியிருக்கின்ற நாடுகளே இருக்கின்றன. அவ்வாறான போக்கே தனியாக எந்தவொரு மக்கள்திரளிடமும் இருக்கும். அதேபோன்ற நிலைமைதான் இந்தியாவிற்குள் இருக்கின்ற வெவ்வேறு மாநிலங்களை ஒப்பு நோக்கினாலும் தெரிய வரும். உத்தரப்பிரதேச முஸ்லீம்களின் மக்கள்தொகைப் பெருக்கம் கேரளாவில் உள்ளவர்களைப் போன்று இருப்பதில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், முஸ்லீம்கள் (24.60 சதவீதம்) ஹிந்துக்களைவிட (16.76 சதவீதம்) அதிக அளவில் வளர்ச்சி விகிதம் கொண்டிருப்பது சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதையே காட்டும். உத்தரப்பிரதேச முஸ்லீம்கள் கேரள முஸ்லீம்களை விட பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக கல்வியில், வேலை வாய்ப்பில் பின்தங்கியிருகிறார்கள் என்பதே உண்மை. இந்தியாவில் அவ்வாறு பின்தங்கிய நிலையில் முஸ்லீம்கள் இருப்பதை சச்சார் குழு அறிக்கை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டவும் செய்திருக்கிறது. சச்சார் குழு அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்ற அரசாங்கம் முஸ்லீம்களின்  மக்கள்தொகை பெருகுவதாக கூறுவது வருத்தமே தருகிறது. 

2250ஆம் ஆண்டில் சாத்தியம்!?

குறிப்பிட்டதொரு பிரிவினர் மட்டும் திட்டமிட்டு தங்களுடைய எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான சாத்தியம் இருப்பின், அது மிகக் குறுகிய காலத்திற்குள் நடக்க முடியாது. இருபிரிவினரின் மக்கள்தொகைப் பெருக்க வேகத்தின் வித்தியாசத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கிடையே எண்ணிக்கை கூடும் அல்லது குறையும். இப்போது உள்ள வேகத்தில் மக்கள்தொகை பெருகினால், இவர்கள் சொல்வது போல ஹிந்துக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக முஸ்லீம்களின் எண்ணிக்கை வருவதற்கு இன்னும் குறைந்தது 225 ஆண்டு காலம் தேவைப்படும். அதாவது 2250ஆம் ஆண்டில் அதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் இப்போது ஹிந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே இருக்கின்ற மக்கள்தொகைப் பெருக்க வேகம் இந்த 225 ஆண்டுகளுக்கும் இப்போதுள்ளவாறு அப்படியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அதற்கான மிகமுக்கியமான நிபந்தனை. இந்த நிபந்தனை நிறைவேறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை, தொடர்ந்து மக்கள்தொகைப் பெருக்க வேகம் குறைந்து கொண்டே வருவதை ஏற்கனவே பார்த்தோம். அவ்வாறிருக்கும் போது, இவர்கள் முன்வைக்கின்ற வாதங்கள் முற்றிலும் அபத்தமாகவே இருக்கின்றன.  

இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலையும் நாம் இங்கே கவனிக்கலாம். இப்போதுள்ள மக்கள்தொகைப் பெருக்க வேகம் ஒருவேளை 225 ஆண்டுகளுக்கு அப்படியே தொடர்ந்து, முஸ்லீம்களின் எண்ணிக்கை ஹிந்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகி விடும் என்றே கொள்வோம். ஆனால் அவ்வாறு முஸ்லீம்களின் மக்கள்தொகை ஹிந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கப் போகின்ற அந்த 2250ஆம் ஆண்டில், இப்போது இந்தியாவில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்கள்தொகை, இப்போது உள்ளதைப் போன்று  ஏறத்தாழ 100 மடங்கு அதிக எண்ணிக்கையில். அதாவது  சதுர கிலோமீட்டருக்கு 33500 பேர் என்ற அளவில் இருக்கும். இப்போது ஒட்டுமொத்தமாக பூமியில் உள்ள மக்கள்தொகையைப் போன்று பதினாறு மடங்கு அதிகமாக, இந்தியாவில் மட்டுமே 11000 கோடிப்பேர் இருப்பார்கள் என்று இந்த கணக்கு சொல்கிறது. ஆனால் அதுவும் பொய்யாகவே இருக்கும். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்த இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி 17.64 சதவீதம் என்பதால், 2250ஆம் ஆண்டில் அங்கே 7900 கோடிப் பேரே இருப்பார்கள் என்பதுதான் கணக்கு. ஹிந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்த இந்தியா வேறாக இருக்கும் என்பதே உண்மை. மதிரீதியாகப் பிரித்து, தனித்து கணக்கு போட்டால் மட்டுமே இவர்கள் சொல்வதைப் போன்ற மடத்தனமான முடிவுகள் கிட்டும்.

இன்றைய வளர்ச்சி விகிதத்தில் எதிர்பார்க்கப்படும் மக்கள்தொகை (கோடியில்)

ஆண்டு

(16.76% வளர்ச்சி விகிதம்)

ஹிந்து

(24.60% வளர்ச்சி விகிதம்)

முஸ்லீம்

(17.64% வளர்ச்சி விகிதம்)

இந்தியா

2020

112.22

21.43

141.71

2050

184.77

44.42

239.46

2100

424.18

149.75

574.05

2150

973.81

504.06

137.61

2200

2235.62

1701.39

3298.93

2250

5132.41

5734.86

7908.22

 

இவ்வாறு 5500 கோடி ஹிந்துக்களைவிடக் கூடுதலாக ஒரு முஸ்லீம் இந்தியாவில் நிச்சயம் இருப்பார்கள் என்பதை உங்களால் நம்ப முடியும் என்றால், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றால், நிச்சயம் இவர்கள் சொல்வதைப் போல இந்தியா முஸ்லீம் நாடாக மாறி விடும் என்பதை உறுதியாக யார் வேண்டுமென்றாலும் நம்பலாம். அவ்வாறு 2250ஆம் ஆண்டில் ஹிந்துக்களைவிட அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இருந்தாலும், இந்தியா இப்போதுள்ளவாறே தொடர்ந்து மதச்சர்பற்ற நாடாகவே இருப்பதாகக் கொண்டால், இந்தியா முஸ்லீம் நாடாவதற்கு, அதாவது கிரேட்டர் பாகிஸ்தான் ஆவதற்கு வாய்ப்புகளே ஏற்படாது என்பது நிச்சயம். இந்த கணக்குகள் எதுவுமே தேவையில்லை.

ஆனால் இவர்கள் முன்வைக்கின்ற வாதங்களின் மூலம் தங்களுடைய நோக்கங்களை இவர்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியுமென்றல், 2250ஆம் ஆண்டு வரையிலும் நாம் காத்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஹிந்து ராஷ்ட்ரத்தை லட்சியமாகக் கொண்ட இவர்கள் இன்னும் ஆட்சியில் தொடர்வார்களேயானால், வெகு சீக்கிரமே ஹிந்து நாடாக இந்தியா மாற்றப்பட்டு விடும் கொடுமை அரங்கேறும் என்பது நிச்சயம்.  உண்மையில் ஹிந்துக்கள் யார் என்பது குறித்த உணர்வு அனைவரிடமும் ஏற்படுகின்ற சூழலில், ஐந்து சதவீதம் இருக்கின்ற இவர்களை விட முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பார்கள் என்ற அச்சம்தான் இதற்கான உண்மையான காரணமாகவும் இருக்ககூடும்.  இன்றைய சூழலில் இவர்களின் ஹிந்துராஷ்ட்ரத்திற்கு எதிரான போராட்டக் களம் சரியான முறையில் தயாராக இருப்பதை மனித நேயம் கொண்ட அனைவரும் உணர்ந்தே இருக்கின்றார்கள். இவர்களுடைய இத்தகைய வாதங்கள் செல்லுபடியாகாதவை என்பதால்,  இந்த வெற்று வாதங்களை மறுத்து புறக்கணிப்பதே நலம்.

(தொடரும்)

முனைவர் தா.சந்திரகுரு

;