tamilnadu

img

கொரோனாவை எதிர்கொண்ட பனியன் நகரம்

கொரோனா ஒழிப்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதே போல் திருப்பூர் மாநகரில் கொரோனாவை வெல்வதற்கு தன்னார்வ உழைப்பில் முன்நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தனிநபர்களின்   தன்னார்வலப் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா குறித்து வதந்திகள் பரவி வந்த பொழுது முறையான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அரசு நிர்வாகத்துடன் இணைந்து மார்ச் 15ஆம் தேதி முதல் வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகத்தின் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டுப்பிரசுரங்கள், கொரோனாவை எதிர்கொள்வது குறித்து ‘’வரும்முன் காப்போம் அச்சம் தவிர்ப்போம்” என்ற வாசகங்களை உள்ளடக்கி  மாநகர் முழுவதும் வீடுவீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆயிரக்கணக்கில் சுவரொட்டிகளை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் பணிகள்
திருப்பூரில் மாவட்ட, மாநகராட்சி வழங்கிய அடையாள அட்டையுடன் 100க்கும் மேற்பட்ட தோழர்கள்  தினசரி பணிகளில் ஈடுபட்டனர்.  30க்கும் மேற்பட்ட கிருமிநாசினி இயந்திரங்களை  சொந்தமாக  வாங்கி 100க்கு மேற்பட்ட பகுதிகளில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை  பல்லாயிரக்கணக்கான வீடுகளிலும், தெருக்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஊத்துக்குளி பகுதியில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக அரசு பள்ளியை மாற்ற உழைப்பு தானம் செய்து வாலிபர் சங்கத்தினர் உதவினர்.  

ஹெல்ப் லைப்
திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது திருப்பூர் மாவட்டத்தில் இருந்த பல்வேறு வெளிமாநிலத்தவர்கள் நிலைமை மோசமானது. தொழிற்சங்கம்,  விவசாயிகள் சங்கம், வாலிபர்,   மாணவர்  அரங்கங்களின்  மத்திய குழு உடனடியாக தொலைபேசி தகவல் உதவி மையத்தை அமைத்தது. மார்ச் 28ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறோம். 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15,000 பேர் வரை பட்டியலெடுத்து முதற்கட்டமாக அரசு நிவாரணத்தை நேரடியாக பெற்றுத் தந்தோம்.  தற்போது அவர்கள் சொந்த மாநிலம் செல்ல தேவையான இணைய உதவி உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

நிவாரணப் பணிகள்
தன்னார்வப் பணிகளில் உழைப்பும் உதவியும் ஒருபுறம் இருக்க. மறுபுறம் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை திரட்டி பகிர்ந்தளித்தது மிக முக்கிய பணியாகும். தற்போது வரை 80,000 கிலோ அரிசி, 7000 கிலோ பருப்பு, 2000 லிட்டர் எண்ணெய், ஆயிரக்கணக்கான கிலோ காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் திரட்டி  மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உடுமலை, அங்கேரிபாளையம், இடுவம்பாளையம் பகுதிகளில் உள்ள  ஆதரவற்றோர், முதியோர் போன்ற 750 நபர்களுக்கு சராசரியாக 35 நாட்கள் உணவு சமைத்து 25550 பொட்டலங்களாக பேக்கிங் செய்து தோழர்கள் வழங்கியுள்ளனர்.
நோய் எதிர்ப்புசக்தியை ஏற்படுத்தும் கபசுரக் குடிநீர் சுமார் 33 ஆயிரம் நபர்களுக்கு காய்ச்சி வழங்கியுள்ளனர். இன்று வரை மாவட்டம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் பணியாற்றி வருகின்றனர்.  விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்க முடியாமல் தவித்த போது மக்கள் வெளி வருவதை தவிர்க்கவும் நேரடியாக விவசாயிகளிடம் பெற்று எவ்வித லாபமுமின்றி எளிய தொகுப்பு விலையில் 60000கிலோ  காய்கறிகளை தொகுப்பாக்கி 20,000 வீடுகளுக்கு  வழங்கப்பட்டது.

இரத்ததான முகாம்கள்
அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு போதிய இரத்தம் இல்லை என நம் தோழர்களை தொடர்பு கொண்டபோது வாலிபர் சங்க இரத்ததான கழகம் மூலம் 134 யூனிட்டும் சிஐடியு சார்பில் 25 யூனிட்டும் என மொத்தமாக159 யூனிட் வழங்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் மற்றும் வி.பி. சிந்தன் நினைவு தினம் உள்ளிட்ட நாட்களில் 7 இரத்த தான முகாம்கள் மூலமாக ரத்தம் வழங்கப்பட்டது. ஒருபுறம் நிவாரணப்பணியும் மறுபுறம் குருதிக்கொடையும் என சேவையும் தியாகமுமாய் ஒருங்கிணைந்து வாலிபர்கள் களத்தில் நின்றனர் .

மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புற கலைஞர்களுக்கு
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கேட்பாரற்று இருந்த  மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மூலம் ஆயிரக்கணக்கான பேருக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரண உதவிகளும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. அவிநாசி, தாராபுரம்,திருப்பூர் போன்ற  பகுதிகளில் கிராமப்புற கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் நிலையை உணர்ந்து நிவாரணப் பொருட்களை நேரில் சென்று வழங்கியும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவி பெற்றுத் தந்தோம்.

அரசு நிர்வாகத்தோடு இணைந்து
கொரோனாவை எதிர்த்து மக்களை காக்கும் போராட்டத்தில் முன்வரிசை போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோருக்கு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டுசென்று சீர் செய்யப்பட்டது. குடிநீர் ,காய்கறி, மார்க்கெட், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தோர், ரேசன் வினியோகம் அவசரத் தேவைகளுக்காக சென்றுவரும் நடைமுறையை எளிதாக்குவது நிர்வாகப் பணியை பரவலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கும் உணவுக்கு வாகனம் இல்லாமல் குப்பை வாகனம் மூலம் வழங்குவதை தடுத்து நிறுத்தி வேறு வாகனங்கள் மூலம் வழங்க உறுதி செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்களை அழைத்து வர தனி பேருந்துகள் மூலம் இன்றுவரை உறுதிசெய்யப்பட்டது.  சுகாதாரப் பணியாளர்களுக்கு முகக் கவசம் வழங்காததை கண்டித்து குரல் கொடுத்த சிஐடியு உடனடி தேவைக்கு தன் சொந்த செலவில் முகக் கவசங்கள் மற்றும் சோப்புகள் வழங்கினர். மேலும் நலவாரிய உதவிகளைப் பெற்றுத் தர தற்போது வரை மக்களோடு உடனின்று அரசு நிர்வாகத்தோடு முறையிட்டு வருகிறார்கள். இத்தகைய பணிகளை திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் களப்பணிக்குமான இடைவெளியை குறைத்து செவ்வனே முன்னின்று பணியாற்றி வருகிறது

இணையம் செயல்பாடு
வீட்டில் தனித்திருக்கும் பொதுமக்கள், குழந்தைகள் ,பெண்கள் மாணவர், இளைஞர்களுக்கு கொரோனா அச்சம் போக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கான சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் வகையில் தினமும் முகநூல் நேரலை மூலம் சமூக, அரசியல் கருத்துரை, இசை, பாடல், பாரம்பரிய கலை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் (நேரலை மூலமாக), புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்க புத்தகத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் தனித் திறமைகளை வளர்க்க கவிதை போன்ற போட்டிகள் இணையத்தில் நடத்தப்படுகின்றன. 

அனைத்து பணிகளையும் கூட்டாக ஒருங்கிணைத்து ஒவ்வொரு துறைக்கும்(அறிவியல் ,சிறுகுறுதொழில்,கிராமப்புறங்கள் உள்ளிட்டு) ஏற்ப குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு எதிரான நம்முடைய ஒன்றுபட்ட போராட்டம் தொடரும்.

நாம் வெல்வோம் ஓர் நாள்...

 

தெள.சம்சீர் அகமது 
மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம், 
திருப்பூர் மாவட்டக்குழு

;