tamilnadu

img

மோடி-2 ஆட்சியின் முதலாமாண்டு நிறைவு ஜனநாயகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது தெளிவு - சித்தார்த் வரதராஜன்

[மோடியைப்பற்றி ஒரேயொரு விஷயம் தெளிவாகி இருக்கிறது. அவர் முதலமைச்சராகவும் பிரதமராகவும் இத்தனை ஆண்டு காலமும் இருந்திருந்தபோதிலும், அவருடைய தவறுகளிலிருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியும் அவருடைய ஆளுமை வழிபட்ட முறையால் ஏற்பட்டதேயாகும்.]

மோடி-2 ஆட்சியின் முதல் ஆண்டு காலத்தில் அவர் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் இளம் மாணவிக்கும், ஓர் இளைஞருக்கும் ஏற்பட்டுள்ள முரண்பட்ட விதிகளைப் பரிசீலத்தாலே போதுமானதாகும்.

அமுல்யா லியோனா, பதின்பருவ வயதில் உள்ளவர், கடந்த மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தேசத்துரோகச்சட்டப்பிரிவுடன் மற்றும் பல குற்றப்பிரிவுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் “பாகிஸ்தான் வாழ்க” என்றும் “இந்தியா வாழ்க” என்றும் கோஷமிட்டாராம். இதற்காக அவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு அமுல்யா லியோனா வாழ்க என்று கோஷம் பட்டதற்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில் கொல்வதற்காகக் குரல் கொடுத்த மற்றொரு நபர் அனுராக் தாகூர் மோடி அரசாங்கத்தின்கீழ் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக வீற்றிருக்கிறார். தில்லியில் பாஜக ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசியபோது அவர், “துரோகிகளைச் சுடுங்கள்” (“shoot the traitors”) என்று சத்தமிட்டார். துரோகிகள் யார் தெரியுமா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து ஷாஹின்பாக் பகுதியிலும் மற்றும் சில இடங்களிலும்  அமைதிவழியில் போராடிவந்த இளம் பெண்களையும், ஆண்களையும் பார்த்துத்தான் அவ்வாறு சுடுங்கள் என்று கத்தினார். உண்மையிலேயே அதனை அடுத்து சில தினங்களில் ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் பார்த்து ஒருவர் சுடும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது. எனினும், இவ்வாறு “சுடுங்கள்” என்று கூறிய தாகூருக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை.  இது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியால், அமைச்சருக்கு எதிராக ஏன் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்று கேட்டதற்கு, அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், அதற்கான “காலம் இன்னும் கனியவில்லை,” என்று பதில் அளித்திருக்கிறார். 

லியோனாவோ, தாகூரோ தனிநபர்கள் அல்ல.

அவசரநிலைக் காலத்திற்குப் பின்னர், சென்ற ஆண்டு அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய அளவிற்கு அதற்கு முன் எவரும் கைதுசெய்யப்பட்டதில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த மெகபூபா முப்தி கடந்த ஒன்பது மாதங்களாக சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.

அதே சமயத்தில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், ஆட்சியாளர்களுடன் நெருக்கமான தொடர்பினை வைத்திருப்பவர்கள் என்னவிதமான குற்றங்களைப் புரிந்தாலும் அவர்கள் பக்கம் புலனாய்வு அமைப்புகள் போகாமல் இருப்பது என்பதும் இப்போதிருக்கிற அளவிற்கு முன்னெப்போதும் இருந்ததில்லை. நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருந்தால், அல்லது அரசின் அரசியல் நிகழ்ச்சிநிரலை ஆதரித்தால், நீங்கள் வன்முறையை நியாயப்படுத்த முடியும், அதனை மேற்கொள்ளவும் முடியும், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழ முடியும், ஏழைகளை அவமானப்படுத்தி, துன்புறுத்திட முடியும். இவற்றுக்காகவெல்லாம் நீதிமன்றத்தின் வாசலை மிதிக்க வேண்டியிருக்குமோ என்று நீங்கள் கிஞ்சிற்றும் கவலைப்பட வேண்டாம். நியுசிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நீதிபதி, இந்தியாவில் முஸ்லீம்கள் பொருளாதாரப் பகிஷ்காரம் செய்யப்படுவதை நியாயப்பபடுத்தியதற்காக, பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இதே போன்று உத்தரப்பிரதேசத்தில் பேசிய இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எவ்விதநடவடிக்கையும் கிடையாது. அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர், அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் போதுமான காரணங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பல பகுதிகளில், ஆட்சியாளர்களுக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ, கிண்டலடிக்கும் உரிமையோ இப்போது கிடையாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கைகள் நிச்சயம். சென்ற வாரம், மத்தியப் பிரதேசக் காவல்துறையினர், ஓர் இதழாளர், பிரதமரை “தற்பெருமைகொள்பவர்” (“gappu”) என்று கூறியதற்காக ஒரு குற்ற வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ஆக்ராவில், உத்தரப்பிரதேச முதலமைச்சரை ‘நாய்’ என்று அழைத்ததாக ஒருவருக்கு எதிராகத் தேசத்துரோகக் குற்றப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்ற மாதம், காஷ்மீரில் ஓர் இளம் பெண், 2018இல் அவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தைப் பதிவேற்றம் செய்தது தொடர்பாக, பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்திடுவோம் என அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் சமீபத்தில் தொழிற்சாலையில் நடந்த விபத்த குறித்து ஆட்சியாளர்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கும் விதத்தில்  எண்ணற்ற கேள்விகள் கேட்டதற்காக, ஒரு பெண், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறு தனிநபர்கள் மீது வழக்குப் போடுவதன் நோக்கம், மற்றவர்களை பயமுறுத்தி மவுனமாக்கிட வேண்டும் என்பதேயாகும்.

திருத்தப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு, எவரொருவரையும் விசாரணையில்லாமல் அல்லது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல், பயங்கரவாதி என முத்திரை குத்துவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறது.

மோடி, ஒரு நிர்வாகி என்ற முறையில் கொரானா வைரஸ் தொற்றைக் கையாண்டதிலிருந்தும், எவ்விதமான திட்டமிடலோ, தயாரிப்போ இல்லாமல் திடீர் ஊரடங்கு பிறப்பித்ததனால் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்தும் படுதோல்வி அடைந்திருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காணமுடியும். 

எனினும் இதைவிட அவர் ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் அவமதிப்பு ஆழமானதும் விரிவானதுமாகும் என்றே நான் கருதுகிறேன். அவர் பிரதமராக முதல் தடவை இருந்த சமயத்தில், நீதித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், நாட்டின் பல்கலைக்கழக அமைப்பு, மத்திய விஜிலன்ஸ் கமிஷன், தகவல் அறியும் உரிமை, நாடாளுமன்றம் மற்றும் அதன் குழுக்கள் அனைத்தையும் அரித்து வீழ்த்தினார்.

அவர், இப்போது  ஆட்சியில் இரண்டாவது தடவையாக இருக்கும் சமயத்தில், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின்மீது அவர் பார்வை திரும்பி இருக்கிறது. மேலும் அவர் மத்திய தகவல் ஆணையத்தை அகற்றிவிட்டார். மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் குறித்து நீதித்துறை சுதந்திரமாக விசாரணை மேற்கொள்வதையே அரித்துவீழ்த்தி இருக்கிறார்.    

மோடியின் முதல் தடவை ஆட்சிக்காலத்தின்போது வளர்ச்சி குறித்து கூறியவை எல்லாம் காணாமல் போய்விட்டன. அப்போது பாஜகவின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு ஒரு போர்வையாக அது பயன்படுத்தப்பட்டு வந்தது.

மோடி-2 ஆட்சியின் முதலாண்டு, முஸ்லீம்களுக்கு எதிரான மனோபாவத்தை உருவாக்குவது தொடர்பானவைகளாகவே இருந்திருக்கின்றன. முதலாவதாக, முஸ்லீம் பெண்களை முறையாக விவாகரத்து செய்யாத முஸ்லீம் கணவர்களை, கிரிமினல் குற்றவாளிகளாக்கும் சட்டம் வந்தது.  (எனினும் இதையே இந்து கணவர்கள் எவ்வித பயமுமின்றி மேற்கொள்ளலாம்.) அடுத்து, ஆகஸ்ட் 5 அன்று, அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஆறு மாதங்கள் ஜம்மு-காஷ்மீர் எவ்விதமான தகவல் தொடர்புமின்றி துண்டிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போதும் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லை.  

அடுத்து, மோடி அரசாங்கம் உந்தித்தள்ளிய பிரச்சனை, 1992இல் பாபர் மசூதியை அதன் தலைவர்களும், ஆதரவாளர்களும் இடித்துத்தள்ளிவிட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற பாஜகவின் நீண்டகால நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும்விதத்தில் உச்சநீதிமன்றத்தில் அயோத்தி பிரச்சனை மீதான தீர்ப்பினைப் பெற வேண்டும் என்பதாகும். அதனையும் அவர்களுக்குச் சாதகமான முறையில் பெற்றுவிட்டார்கள்.  இதில் மிகவும் வேடிக்கையான அம்சம், சிவில் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. இடித்தவர்கள் மீதான கிரிமினல் வழக்கு இன்னமும் முடியவில்லை என்பதாகும்.

அடுத்து, சென்ற டிசம்பர் மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ‘சாதனையை’ எதிர்கொண்டது. அதாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முத்தலாக் சட்டத்தில் முஸ்லீம் கணவர்களைக் கிரிமினல்களாக்குவதுபோன்று, இந்தத் திருத்தச் சட்டத்தின்மூலமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களில் முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். ஆனாலும், மோடி அரசாங்கத்தின் நோக்கம், சமூகத்தில் மதத்தை ஒரு காரணியாக வைத்து மாசு ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும். உள்துறை அமைச்சர் அமீத் ஷா, கூறியுள்ளது என்னவென்றால், அஸ்ஸாமில் இருப்பதைப்போன்று தேசியக் குடிமக்கள் பதிவேடு அகில இந்திய அளவில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதாகும். நாட்டில் இதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் இப்போது அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் அடுத்த ‘சாதனை’, தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது, மதவெறி வன்முறைத் தாக்குதல்களை ஏவி அவர்களை அடக்கிவைப்பது என்பதாகும். இது தோல்வியடைந்தபோது அல்லது குரோனா வைரஸ் தொற்று குறுக்கிட்டதால், முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் தற்போது ‘இஸ்லாமியர் மற்றும் மார்க்சிய சிந்தனையாளர்களின் சதி’ என்கிற முறையில் திரிக்கப்பட்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஊழியர்கள், மிகவும் கொடுமையாக விளங்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ்  கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் முஸ்லீம்களுக்கு எதிரானது என்று  உலகம் முழுதும் நன்கு தெரியும் என்ற போதிலும், நாஜி ஜெர்மனியில் எப்படி யூதர்கள் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, யூதர்களையே கொன்று குவித்தார்களோ அதேபோன்றே,  தில்லியிலும், முஸ்லீம்களே தங்கள் வீடுகளை இடிக்கச் சதி செய்து தங்களின் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழித்துள்ளார்கள் என்று வழக்குகள் ஜோடிக்கப்பட்டு வருகின்றன.

மோடி ஆட்சியின் ஆறாவது ஆண்டு, ஜனநாயகத்தை நசுக்குவதிலும், முஸ்லீம்களுக்கு எதிரான பாதுகாப்பற்ற நிலையை வளர்ப்பதிலும் பெரிய அளவிற்கு சாதனைகளை ஏற்படுத்தி இருக்கிற அதே சமயத்தில், மோடியின் ஆட்சியில் பெரிய அளவிற்கு ஏற்பட்டுள்ள மூன்று தோல்விகளிலிருந்து அது எப்படி மீளப்போகிறது என்று  தெரியவில்லை. காஷ்மீர் கொள்கையில் அதன் தோல்வி, கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதில் அதற்கு ஏற்பட்டிருக்கும் படுதோல்வி, மற்றும் சமூக ஊரடங்கின் விளைவாக கோடானுகோடி ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எப்படிச் சரி செய்யப் போகிறது என்பவைகளாகும்.

குரோனா வைரஸ் தொற்று அதிகமாகி இக்கிறது,

அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறைவாக இருக்கிறது

குரோனா வைரஸ்  தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசாங்கம் செய்துள்ள இமாலயத் தவறுகளிலிந்து இப்போது உயர்நீதிமன்றம் கூட பாதுகாக்க முன்வரவில்லை. உண்மையில், உச்சநீதிமன்றம், ஆரம்பத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் எவரும் நடந்துசெல்லவில்லை என்று,  அரசாங்கம் அளித்த அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், அவர்களின் துன்பதுயரங்களுக்கு முடிவே இல்லாது தொடர்ந்துகொண்டிருப்பதை அடுத்து இப்போது அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றமும் தன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்த நெருக்கடியை மோடி கையாளும் விதம் பேரழிவினை ஏற்படுத்திடும். மார்ச் 13 அன்று அவருடைய அரசாங்கம், பொது சுகாதார அவசரநிலை இல்லை என்று  வெளிப்படையாகவே அறிவித்தது. எனினும் 11 நாட்கள் கழித்து, பிரதமர் நான்கு மணி நேர அறிவிப்பில் நாடு முழுதுக்கும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இதேபோன்று உலகில் பல நாட்டுத் தலைவர்கள் ஊரடங்கு அறிவித்திருக்கிறார்கள் என்றபோதிலும், எவ்விதமான முன் தயாரிப்புமின்றி அறிவித்த ஒரே பெரிய தலைவர் மோடி மட்டும்தான்.

மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு என்ற திட்டத்தை மார்ச் 19 அன்று அறிவித்தபோதே, ஊரடங்கு குறித்தும் உறுதியாக இருந்திருந்தாரென்றால், கூடுதலாக ஆறு நாட்கள் அதன் விளைவுகளுக்காகத் திட்டமிடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆயினும் மத்தியப் பிரதேசத்தில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது, குரோனா வைரஸ் தொற்றை மதவெறிக்கும் பயன்படுத்துவது போன்ற அரசியல் குறிக்கோள்களைப் பின்பற்ற வேண்டியிருந்ததால் அன்றைய தினம் அதனைச் செய்திடவில்லை. எதார்த்தம் என்னவென்றால், சமூக ஊரடங்கு தோல்வியுற்றுவிட்டது. பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், மோடி அரசாங்கத்தின் அசிங்கமான இஸ்லாம் எதிர்ப்பு நிலை (Islamophobia) இப்போது வளைகுடா பிராந்தியத்திலும் இந்தியாவின் ராஜதந்திர உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அதன் தொடர்ச்சியாக பொருளாதாரப் பாதிப்புகளையும் உருவாக்கி  இருக்கிறது.

மோடி-1இன் ஆட்சிக்காலத்தின்போது அருண் ஷோரி, பாஜக அரசாங்கத்தை, கிண்டலாக, ‘மன்மோகன்சிங் + பசு’ என்றார். இன்றையதினம், குரோனா வைரஸ் தொற்றை மோடி அரசாங்கம் கையாளும் விதம், அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவித்துக்கொண்டிருத்தல், பெரும் வர்த்தகநிறுவனங்களின் நலன்களை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுத்தல், மக்களின் ஜனநாயக உரிமைகளை  நசுக்குதல், நீதித்துறையைத் தனக்குச் சாதகமாக மேலாண்மைசெய்தல் போன்றவற்றிலிருந்து அவருடைய ஆட்சி, இந்திரா காந்தியின் அவசரநிலையை ஒத்திருக்கத் துவங்கி இருப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இந்திரா காந்தியின் அவசர நிலைக்காலத்திலாவது ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடிக்கொண்டிருந்தன. அதனைக்கூட மோடியால் செய்ய முடியவில்லை.

மோடியைப்பற்றி ஒரேயொரு விஷயம் தெளிவாகி இருக்கிறது. அவர் முதலமைச்சராகவும் பிரதமராகவும் இத்தனை ஆண்டு காலமும் இருந்திருந்தபோதிலும், அவருடைய தவறுகளிலிருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியும் அவருடைய ஆளுமை வழிபாட்டு முறையால் ஏற்பட்டதேயாகும்.

அதிகாரங்களை மத்தியில் குவித்தல், எதேச்சாதிகாரம் மற்றும் பிளவுவாத, மதவெறி அரசியல் அவருக்கு நெருக்கடிகளை மீறுவதற்கு உதவி இருக்கிறது. கோவிட்-19 பரவுவதாலும், பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாலும் வரவிருக்கும் காலங்கள் நாட்டின் ஜனநாயகம், இதுவரையிலும் நாம் பார்த்ததைவிட மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகும்.

(நன்றி: தி ஒயர்)

(தமிழில்: ச. வீரமணி

;