நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய நபரை மீட்கும் பணியில் 8ஆவது நடைபெற்ற நிலையில், 6ஆவது நபரின் உடல் மீட்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி இரவு எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செல்வம் (25), முருகன் (25), முருகன் (31), செல்வகுமாா் (30), விஜய் (25), ராஜேந்திரன் (42) ஆகிய 6 பேரும் சிக்கினர்.
இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் மங்களூருவில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நெல்லை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், 8ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அவரை தேடும் பணி தொடர்ந்தது. இன்று மாலை 6வது நபரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. பாறைகளின் இடுக்குகளில் 10 அடி ஆழத்தில் ராஜேந்திரன் உடலை மீட்புப் படையினர் மீட்டனர்.