tamilnadu

img

உதகை மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!  

உதகையில் 124ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  

நீலகிரி மாவட்டத்தில் 124ஆவது மலர் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும். 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  

இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்ட வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

‘ஊட்டி 200’ ஆண்டை முன்னிட்டு ஊட்டி 200 என்ற சிறப்பு மலர் அலங்காரம், நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், 6 பழங்குடியின மக்களின் உருவங்களை கொய்மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்தி நடவு செய்யப்பட்டும் மலர் தொட்டிகளில் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.  மேலும் குழந்தைகளை கவரும் வகையில், பல வகையான கார்ட்டூன் வடிவ அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள், மலர் கோபுரங்கள், பல்வேறு ரங்கோலிகள் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6 ஆயிரம் மஞ்சள்நிற கார்னேசன் மலர்களை கொண்டு மஞ்சப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு 25 அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி நடைபெறும் 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  

இதைத் தவிர, 15 தனியார் மற்றும் அரசுத்துறை அரங்குகள், போட்டியாளர் அரங்கும் அமைக்கப்படும். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்களை அமைத்து போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். மலர் கண்காட்சி நடைபெறும் இறுதி நாளில் சிறந்த பூங்காவிற்கான சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது.  

;