1853 - ஸாரோ பாத்திரத்திற்கு அடிப்படையாகக் கருதப்படுவதுடன், மேற்கின் ராபின் ஹூட், எல்-டொரோடாவின் ராபின் ஹூட் என்றும் குறிப்பிடப்படும் ஜோக்வின் முர்ரியட் காரிலோ, ஆயிரம் டாலர் பரிசுக்காகக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கலிஃபோர்னிய தங்க வேட்டைக் காலத்தில், (தற்போது மெக்சிகோவின் மாநிலமாகவுள்ள) சொனோரா-விலிருந்து தங்கம் தேடி வந்தவர் முர்ரியட். கலிஃபோர்னியத் தங்க வேட்டை என்பது, 1848இல் அங்கு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலிருந்தும் அங்கு மக்கள் குவிந்த 1855வரையான காலத்தைக் குறிக்கிறது(விரிவாக ஜனவரி 24இல் பார்க்கலாம்). அவ்வாறு வந்தபோது, தங்கம் எடுப்பதில் நிலவிய போட்டியில், இவர்மீதான பொறாமையால், ஒரு கோவேறு கழுதையைத் திருடியதாகத் தவறாகக் குற்றம்சாட்டி, முர்ரியட்டின் சகோதரரைக் கொன்றதுடன், முர்ரியட்டுக்கு சவுக்கடியும் வழங்கினர் என்றும், முர்ரியட்டின் மனைவி பலராலும் வன்புணர்வு செய்யப்பட்டார் என்றும், அடிப்படையில் அமைதியான மனிதரான முர்ரியட், இவ்வறால் சினமுற்று, சகோதரரைக் கொன்றவர், மனைவியை வன்புணர்வு செய்தவர்கள் என்று அனைவரையும் குறுகிய காலத்தில் அழித்ததாகவும் பொதுவாக நம்பப்படுகிறது. இக்காலத்தில், குதிரைகளைக் கடத்தி விற்பது, கொள்ளையடிப்பது ஆகிய நடவடிக்கைகளில் இவரது கூட்டத்தினர் ஈடுபட்டதாகவும், கொள்ளையடிக்கும்போது பலரையும் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், இவர்களைப் பிடித்துத் தந்தால் பரிசு என்று கலிஃபோர்னியா மாநில அரசு அறிவித்தது. இவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட படையினர், 1853 ஜூலை 25இல் மூன்று மெக்சிக்கர்களைக் கொன்றதுடன், அவர்களில் ஒருவர் முர்ரியேட்டா என்றுகூறி, அவரது தலையை ஆல்கஹால் கொண்ட ஜாடியில் எடுத்துவந்து, பரிசுப்பணத்தைப் பெற்றனர். இத்தலை பல இடங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டபின் அது முர்ரியேட்டா இல்லை என்று கூறப்பட்டதால், 1854இல் மேலும் 5 ஆயிரம் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது தனிக்கதை! அது முர்ரியேட்டா இல்லையென்று, 1879இல் அவரின் சகோதரி அறிவித்தாலும், முர்ரியேட்டாவைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஜான் ரோலின் ரிட்ஜ் 1854இல் எழுதிய ‘கொண்டாடப்படும் கலிஃபோர்னியக் கொள்ளையன்: ஜோக்வின் முர்ரியேட்டாவின் வாழ்வும் சாகசங்களும்’ என்ற நூலை அடிப்படையாகக்கொண்டே, ஸாரோ பாத்திரத்தை 1919இல் ஜான்ஸ்டன் மெக்-கல்லி உருவாக்கினார்.