1935 - வாகனம் நிறுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கும் உலகின் முதல் பார்க்கிங் மீட்டர் அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரில் நிறுவப்பட்டது. ஓக்லஹாமா அரசுப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான ஹோல்கர் தியூசென், ஜெரால்ட் ஹேல் ஆகியோர், வழக்கறிஞரும், செய்தித்தாள் உரிமையாளருமான கார்ல் மேகீ கேட்டுக்கொண்டதால் இதை உருவாக்கினர். இதற்கு, 1938இல் மேகீ காப்புரிமை பெற்றார். இதற்கு முன்பே 1928இல் ரோஜர் பேப்சன் என்ற அமெரிக்கர் ஒரு பார்க்கிங் மீட்டருக்கு காப்புரிமை பெற்றிருந்தார். ஆனாலும், அக்கருவி இயங்குவதற்கு, வாகனத்தின் மின்கலனோடு(பேட்டரி) இணைக்க வேண்டியிருந்ததால் அது பயன்படுத்தப்படவேயில்லை. மேகீயின் மீட்டர், சாவி கொடுக்கும் கடிகாரம் போன்று இயங்கி, மீதமிருக்கும் நேரத்தைக் காட்டியதுடன், நாணயத்தால் இயங்கும்படியும் அமைக்கப்பட்டிருந்தது.
1936இல் ரோட்ஸ் நிறுவனம் உருவாக்கிய கருவியில், சாவி கொடுப்பதற்கான ஆள் தேவை நீக்கப்பட்டு ஓட்டுநர்களே பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இக்கருவியே சிறுசிறு மேம்பாடுகளுடன் 1980கள்வரை பயன்பாட்டிலிருந்தது. 1967வரை பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதால், பார்க்கிங் ஊழியர்கள் இன்றும் ‘மீட்டர் மெய்ட்’ என்று அழைக்கப்படுகிறார்கள். 1980களில் டிஜிட்டர் மீட்டர்கள் அறிமுகமாயின. ஒவ்வொரு வாகனம் நிறுத்துமிடத்திற்கும் ஒரு மீட்டர் என்ற நிலைமாறி, ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது ஓரிடத்திலுள்ள அனைத்து வாகன நிறுத்துமிடங்களுக்கும் சேர்த்து ஒரே மீட்டரும், நாணயங்கள் தேவையின்றி, கடன் அட்டை, மொபைல் போன் ஆகியவற்றால் பணம் செலுத்தும் மீட்டர்களும் தற்போது வந்துவிட்டன. நாணயங்களோடு மட்டுமின்றி, நாணயங்கள் இல்லாத மீட்டர்களும்கூட திருட்டுப்போவது உலகம் முழுவதுமே பிரச்சனையாக உள்ளது. நவீன மீட்டர்கள், பார்க்கிங் நுழைவாயிலிலேயே, எந்த இடம் காலியாக உள்ளது, அதற்கு எப்படிப் போகவேண்டும் என்று வாகனத்திலுள்ள வழிகாட்டும் கருவியிலோ அல்லது ஓட்டுநரின் மொபைல் போனிலோ வழிகாட்டுவதுடன், நேரம் முடிவதை சுட்டிக்காட்டுவது, மேலும் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நிறுத்தியிருப்பது ஆகிய வசதிகளையும் அளிக்கின்றன. தெருக்கள் பொதுமக்களுக்கானவை, அவற்றில் காரை நிறுத்த கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதான வழக்குகளையும் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. உலகின் முதல் பலமாடி பார்க்கிங் 1901இலேயே லண்டனில் நிறுவப்பட்டுவிட்டது. காரை ஓட்டிச் செல்வதற்கான வழிக்கு இடத்தை வீணாக்காமல், எந்திரங்கள்மூலம் காரை உயர்த்தி பார்க் செய்யும் அமைப்பும், 1920களிலேயே அமெரிக்காவில் நிறுவப்பட்டுவிட்டது. (இரு சக்கர வாகனத்துக்குக்கூட பார்க்கிங் என்ற வசதியையே பார்க்க முடியாத நகரங்களைக்கொண்ட நாட்டில் வாழும் நமக்கு, இவையெல்லாம் ஏதோ வேறு உலகம்போல் தோன்றுவதில் வியப்பில்லை!)
-அறிவுக்கடல்