tamilnadu

img

இந்நாள் ஜுலை 18 இதற்கு முன்னால்

2013 - அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம், (சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனுடன்) திவாலானதாக அறிவித்தது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய உள்ளாட்சி திவால் இதுதான். ஒருவரோ, ஒரு நிறுவனமோ மற்றவர்களுக்குத் தரவேண்டிய நிலுவைகளைத் தர முடியாத நிலை நொடித்துப்போதல்(இன்சால்வென்சி) என்றும், அதிலிருந்து மீள முடியாத நிலையில், சட்டத்தின் உதவியை நாடுதல் திவால்(பேங்க்ரப்ட்சி) என்றும் அழைக்கப்படுகின்றன. நிதிப் பரிமாற்றங்களைச் செய்யப்பயன்படுத்திய பென்ச் என்பதன் இத்தாலியச் சொல்லான பேங்க்கோ என்பதிலிருந்து பேங்க் என்ற சொல் உருவானது. அத்தொழிலில் திவாலாகிறவர், அதை அடையாளப்படுத்த பென்ச்சை உடைத்துவிடும் பழக்கம் ஜெனோவாவில் இருந்ததிலிருந்து, உடைந்த பென்ச் என்பதைக் குறிக்கும் பேங்க்கோ ரோட்டா என்பதிலிருந்து பேங்க்ரப்ட்சி என்ற சொல் உருவானது. கடன் தவணைகளை மாற்றியமைத்துக்கொடுத்தோ, திவாலானவரின் சொத்துகளை விற்றோ நிலுவைகளைத் தீர்ப்பதற்கு அரசு உதவிசெய்வது நடைமுறையாக உள்ளது. திவால் நடைமுறைகள் இல்லாத பண்டைய கால கிரேக்கத்தில், நொடித்துப்போனவர் கடன் தீரும்வரை குடும்பத்துடன் உடலுழைப்புச் செய்யும் கடன் அடிமை முறை இருந்துள்ளது. இடைக்கால கிறித்தவத் திருச்சபைச் சட்டங்கள், நொடித்துப் போனவரின் அடிப்படைத் தேவையான பொருட்களை விட்டுவிட்டு, மற்றவற்றை எடுத்துக்கொண்டு அவரைப் புதிதாக வாழ அனுமதித்தன. இவற்றினடிப்படையிலேயே உலகின் முதல் திவால் சட்டம் 1542இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது.

1557இல் ஸ்பெயின் திவாலானதாக இரண்டாம் பிலிப் அரசர் அறிவித்தார். 1840களில் அமெரிக்க மாநிலங்கள் பலவும் திவாலாயின. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, 1844இல் இயற்றப்பட்ட கூட்டுப் பங்கு நிறுவனச் சட்டம், நிறுவனங்களின் திவாலுக்குத் தனி நடைமுறைகளை உருவாக்கியது. அமெரிக்காவின் முதல் திவால் சட்டம் 1898இல் உருவானது. நொடித்துப்போகும் உள்ளாட்சிகள் வரிகளை உயர்த்திக்கொள்ளும் நடைமுறையை, பெரும் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் செயல்படுத்த முடியாததால், உள்ளாட்சிகளின் திவாலுக்கான தனிப்பிரிவை(9) அமெரிக்க அரசு உருவாக்கியது. அதன்படி, 1937இலிருந்து இதுவரை சுமார் 700 நகராட்சிகள் அமெரிக்காவில் திவாலாகியுள்ளன. டெட்ராய்ட் உட்பட, இவற்றில் பலவற்றிலும், அவை தரவேண்டிய ஓய்வூதியத்தைத் தர முடியாததே திவாலுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ரூ.56.58 லட்சம் கோடி கடனுடன், 2008இல் அமெரிக்காவின் லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதே உலகின் மிகப்பெரிய திவால் ஆகும்!