tamilnadu

img

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ்.... வன்முறையால் வெற்றிபெற முயற்சி

நாகர்கோவில்: 
கேரள எல்லை அருகில் உள்ள தமிழக பகுதிகளான மருதங்கோடு, முழுக்கோடு ஊராட்சிகள் மக்களின் வாழ்க்கை முறையில் மட்டுமல்ல அரசியலிலும் கேரள சாயலைக் கொண்டுள்ளது. கேரளத்தில் தங்களது ஆதரவு தளத்தை அதிகரிக்க வன்முறையிலும் படுகொலையிலும் ஈடுபடுவது ஆர்எஸ்எஸ் வழக்கம். அங்குள்ள மக்களால் புறக்கணிக்கப்பட்ட அதே பாணியை இந்த பகுதியில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள் ஆர்எஸ்எஸ்- பாஜக சங்பரிவார் அமைப்பினர். ஆர்எஸ்எஸ் வன்முறையால் சலிப்புற்ற இளைஞர்கள் அண்மைக் காலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து வருகிறார்கள்.

அதன் நேரடி விளைவாக அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரண்டு ஊராட்சிகளையும் சிபிஎம் கைப்பற்றியது. அதிலும், பாஜகவிடமிருந்த மருதங்கோடு ஊராட்சியில்  தாய், தந்தை, மகன் என்கிற பரம்பரை அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த அமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்த பகுதியின் வட்டாரக்குழு செயலாளர் சசிகுமாருடன் இணைந்து செயல்பட்ட பெரும் இளைஞர் படை அந்த வெற்றியை சாத்தியமாக்கியது. அரை நூற்றாண்டு காலமாக சிபிஎம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவரும் முழுக்கோடு ஊராட்சியின் வார்டு உறுப்பினராக சசிகுமாரும் தேர்வாகி ஊராட்சியின் துணைத் தலைவராகவும் ஆகிவிட்டார்.  இது மருதங்கோடு ஊராட்சிமன்ற தலைவராகவும் பாஜக ஒன்றிய செயலாளராகவும் கோலோச்சிய சேகருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆர்எஸ்எஸ் நிர்வாகியான பிபினுடன் இணைந்து சசிகுமாரை பழிவாங்க காத்திருந்தார்.  

இந்நிலையில் கொரோனா - ஊரடங்கையொட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அரிசி ,காய்கறி போன்ற பொருட்களை வழங்கும் பணியில் சசிகுமார் முக்கிய பங்கு வகித்து வந்தார். இது பிபின், சேகர் கும்பலுக்கு மேலும் எரிச்சலூட்டியுள்ளது. அதையொட்டியே திங்களன்று சசிகுமாரை முழுக்கோட்டிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டார செயலாளர் அனூப்பை குழித்துறையிலும் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் தற்போது கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சசிகுமாருக்கு கை எலும்பு முறிவுக்கு செவ்வாயன்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
மருத்துவமனையில் இருவரையும் சந்தித்துவி்ட்டு திரும்பிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் கூறுகையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமாரை ஆர்எஸ்எஸ் கும்பல் இதுபோல் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றது. ஆனால் உயிர் பிழைத்த சசி முன்னிலும் வேகமாக மக்கள் பணியாற்றி வருகிறார். அதற்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரத்தை இவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி கூறுகையில், இதே பகுதியில் தோழர்கள் பாபு செல்லையன், சுதாகரன் ஆகியோரை ஆர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்தது. அதுபோல் மக்களிடையே பீதி ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய அதே பாணியை மீண்டும் கையில் எடுத்துள்ளார்கள். கடுமையான நடவடிக்கை எடுத்து வன்முறைக்கு முடிவு கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

30 ஆண்டுகால தொடர் வெற்றி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டாரச் செயலாளர் அனூப் அண்டுகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவருமாவார். 1989 முதல் இந்த கூட்டுறவு சங்கம் சிபிஎம் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 4000 உறுப்பினர்களுடன் லாபகரமான ஏ பிரிவில் உள்ள இந்த சங்கம் ஆண்டுக்கு இரண்டரைக்கோடி ரூபாய் வரை கடனாக வழங்கி சாதனை படைத்து வருகிறது.
 

;