tamilnadu

img

சுற்றுலாத் தலங்களை நம்பி வாழ்க்கை நடத்தும் வியாபாரிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.... குமரியில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி....

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்விற்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இரசாயனக் கலவை பூச வேண்டும். கடந்த ஆட்சியில் தகுந்த பராமரிப்பும், நான்கு ஆண்டுகள் கடந்தும் இரசாயனம் பூசப்படாததால், தற்போது இரசாயனக் கலவை பூசுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படும். மேலும், உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலையினை சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டு களிக்கும் விதமாக திருவள்ளுவர் சிலையின் முகப்பில்நவீன தொழில்நுட்பத்தில் ஒலி-ஒளியுடன் கூடிய லேசர் லைட் அமைக்கப்படும். 

திருவேணி சங்கமத்தில் கேபிள் கார் வசதி ஏற்படுத்தும் திட்டம் கடந்த காலத்தில் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா 3-வது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா காலக் கட்டத்தில் சுற்றுலா தலங்களை நம்பியே வாழ்க்கை நடத்துகிற வியாபாரிகளின் நலனில்அக்கறை கொண்டு அவர்களுக்கு நிவாரண உதவி, கடனுதவி வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுலாதலங்களிலுள்ள வியாபாரிகளின் துயர் துடைக்கப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் இணைத்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலா பேருந்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடும். 

பூம்புகார் கப்பல் கழகத்தின் கீழ் ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பில் சொகுசு வசதிகளுடன் கூடிய அதிநவீன படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் இப்படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருவள்ளுவர் சிலை வரும் ஆண்டுகளில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரியிலிருந்து மணக்குடி வரை கடல் வழியாக பயணிகள் உல்லாச பயணம் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்ய சுற்றுலாத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கன்னியாகுமரி ஒளி, ஒலி கண்காட்சி அரங்கு, சூரிய உதயத்தினை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரம், முகிலன் குடியிருப்பு கடற்கரை, மணக்குடி பகுதியில் படகு சவாரி தளம் அமைக்கும்இடம், முட்டம் கடற்கரை ஆகிய சுற்றுலா தலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

;