tamilnadu

img

பாலியல் குற்றவாளி காசியின் கூட்டாளிகளை கைது செய்க... சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
நாகர்கோவிலைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் புலன் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் கணேசபுரம் காசி என்பவர் சமூக ஊடக தொடர்பு மூலம் பல பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பல லட்சக்கணக்கில் பண மோசடியும் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர் ஒரு பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியதாக 2016இல் நாகர்கோவில் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் உள்ளது. கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த தொடர் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக பகிரங்கமான நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உளவியலைக் கொண்ட நபர் என்பது தெளிவாகிறது.

தற்போது இவரால் பாலியல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் கோட்டார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஸ்மார்ட் போன் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் பாலியல், மோசடி மற்றும் இணைய குற்றம் உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் ஆளும் கட்சிகளின் பின்புலம் கொண்ட நபர்கள் பலர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசியின் நண்பரிடமும் வழக்கறிஞர் ஒருவரிடமும் விசாரணை நடத்திய காவல்துறை தனது விசாரணையை விரிவு படுத்தாமல் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசியின் கூட்டாளிகள் குறித்த விவரங்கள், பள்ளி மாணவிகளிடமும் கைவரிசை காட்டியதற்கான ஆதாரங்கள் அவரது ஸ்மார்ட் போனிலிருந்து பெறும் வாய்ப்பு உள்ளது. இணையத்தில் சிறார் பாலியல் காட்சிகளை பார்ப்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இப்பிரச்சனையில் முழு உண்மையையும் கொண்டு வர வேண்டும். தேசிய மகளிர் ஆணையமும், தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும். போக்சோ சட்டத்தின் பிரிவுகளை உட்படுத்தி நீதிமன்றத்தின் கண்காணிப்பில் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

;