tamilnadu

img

பேரழிவு திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் : கே.பாலகிருஷ்ணன்

நாகப்பட்டினம்:

காவிரி டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் பேரழிவுத் திட்டத்திலிருந்து பாதுகாத்திட, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களின் மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ‘காவிரி டெல்டா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை அன்று, நாகையில் நடைபெற்றது. கூட்ட நிறைவில், சி.பி.எம்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது-

 

“டெல்டாவைச் சேர்ந்த 6 மாவட்டங்களின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘காவிரி டெல்டா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.அதில் காவிரிப் படுகையையும் விவசாயத்தையும் நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாத்திடவும், ஜூன் -12ல் மேட்டூர் அணையைத் திறந்திடுமாறும், நீர் நிலைகளைப் பாதுகாத்திடவும் பேரழிவுத் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்திடவும் சி.பி.எம். சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், புதுக் கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் ஆகிய டெல்டா  மாவட்டங்களில் ஜூன் -5 முதல் 10 வரை, மாபெரும் இருச்சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணிக் கூட்டங்கள் நடைபெறும்.


அதன் பின்னர், நிலைமைக்கேற்ப, தோழமைச் சங்கங்களை இணைத்துக் கொண்டு, போராட்டங்களை வலிய முறையில் தொடர்ந்து நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசு, 3 மண்டலங்களாகப் பிரித்து, முதலில் ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கி, இந்த இரு நிறுவனங்களும் பணிகளைத் துவங்கும் நிலையில் உள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை திறக்காததால், டெல்டா மவட்டங்கள் வறண்டு விட்டன. காலாகாலத்தில் நீர் நிலைகளைத் தூர்வாரி நீரைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, இதுபற்றியும் விவசாயம் பற்றியும், மக்களைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப் படாமல், எப்படியேனும் தங்கள் ஆட்சியைத் தக்க வைப்பதிலேயே கவனத்தைச் செலுத்தி வருகிறது.


இது, போராட்ட வரலாறுகள் நிறைந்த மண். தியாக பூமி இது. இந்த மண்ணில் ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவுத் திட்டங்களைச் செயற்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எந்த நிறுவனமாயினும் சரி, இந்த மண்ணில் நுழைய விடமாட்டோம். மக்களைத் திரட்டி, மிகப்பெரிய போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வெற்றி பெறுவோம்.


நீர் நிலைகளைக் காப்பாற்றத் தவறிய தமிழக அரசு, தற்போது, மழை வேண்டி எல்லாக்கோவில் களிலும் முக்காலப் பூஜை செய்திட ஆணை பிறப்பித்திருக்கிறது. இப்படி ஒரு மூட அரசு இங்கே ஆட்சி புரிகிறது. இது ஓர் அரசா? ஏன் இந்த அரசு இன்னும் இருக்கிறது?” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின்போது, மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி, தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;